பழைய புடவைகளில் புது பேஷன் உருவாக்குபவர்!

சென்னையை அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்தவரான தாரணி கணேசன், கைத்தேர்ந்த பேஷன் டிசைனர். சினிமா மற்றும் சீரியல் பிரபலங்களுக்கு, செலிபிரிட்டி டிசைனராக திகழ்வதுடன், அவர்கள் விரும்பும் தனித்துவமான உடைகளை வடிவமைத்துக் கொடுக்கிறார்.

Update: 2023-02-19 15:53 GMT

மேலும் 'கஸ்டமைஸ்ட்' எனப்படும் தனிநபருக்காக வடிவமைக்கப்படும் ஆடை வடிவமைப்பிலும், ஆபரணங்களை உடையோடு ஐக்கியப்படுத்தி தைக்கும் 'மஹம்' கலையிலும் கெட்டிக்காரர். இவரிடம் ''பாட்டி, அம்மா... காலத்து பழைய புடவைகளை வைத்து இப்போது என்ன செய்ய முடியும்..?'' என்ற கேள்வியை முன்வைத்தால், ''அனார்கலி தைக்கலாம், டாப் கவுன் தைக்கலாம். சுடிதார் தைக்கலாம். மேக்ஸி, அம்பர்லா கவுன் தைக்கலாம்'' என பலவிதமான பதில்களை முன்வைக்கிறார்.

ஆம்...! செலிபிரிட்டி டிசைனரான இவர், பழைய புடவைகளுக்கு மார்டன் டிரெண்டில், புது வடிவம் கொடுப்பதிலும் கில்லாடி. இவர், கஸ்டமைஸ்ட் ஆடை கலாசாரம் பற்றியும், செலிபிரிட்டி டிசைனர் அனுபவம் பற்றியும், பழைய புடவைகளுக்கு புத்துயிர் கொடுப்பது பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

* பேஷன் துறையில் ஆர்வம் வந்தது எப்படி?

நான் மைக்ரோ பயாலஜியில் எம்.பில் முடித்திருக்கிறேன். திருமணத்திற்கு பிறகான குடும்ப வாழ்க்கையில், கிடைத்த ஓய்வு நேரங்களை பேஷன் படிப்புகள் மூலம் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொண்டேன். அந்த காலகட்டத்தில்தான், 'கஸ்டமைஸ்ட்' ஆடை வடிவமைப்புகளும் பிரபலமாகின. என்னுடைய ஆர்வமும், சமூகத்தின் தேவையும்... 'பேஷன்' என்ற புள்ளியில் குவியவே, நான் பேஷன் டிசைனராகிவிட்டேன்.

* கஸ்டமைஸ்ட் ஆடைகள் பற்றி கூறுங்களேன்?

தீபாவளி, பொங்கல், புத்தாண்டு பண்டிகைகளுக்கு நீங்கள் வாங்கி உடுத்தும் ஆடைகளை போலவே அதே வண்ணம், அதே டிசைனில் மற்றவர்களும் உடுத்தியிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஏனெனில் ஆடை சந்தையில், அதேபோன்ற உடைகள் நிறைய வந்திருக்கும். ஆனால் கஸ்டமைஸ்ட் என்பது, உங்களுக்காகவே உருவாக்கப்படும் பிரத்யேக ஆடை. அதேபோல மற்றொரு உடையை, வேறு எங்கும் வாங்க முடியாது. பார்க்கவும் முடியாது.

* என்னென்ன டிசைன்களில் எல்லாம் ஆடைகளை கஸ்டமைஸ் செய்யலாம்?

கஸ்டமைஸ் உடைகளை பொறுத்தமட்டில், கட்டுப்பாடுகளே கிடையாது. திரைப்பட காட்சிகளை நினைவூட்டும் உடைகளில் தொடங்கி, சிண்டர்லா, புரோஷன், மிக்கி மவுஸ்... இதுபோன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களை மையப்படுத்தும் தீம் உடைகள் வரை தைக்கலாம். கூடவே, பெற்றோரின் பழைய கால நினைவுகளை மீட்டெடுக்கும் (ரீ-கிரியேட்டிங்) மாதிரியிலான உடைகளையும் வடிவமைக்கலாம்.

* பழைய புடவைகள் எப்படி புது வடிவம் பெறுகின்றன?

புதுமைகள்தான், பேஷன் துறையின் அடிநாதம். அதில் உருவானதுதான், இந்த டெக்னிக். எல்லோர் வீட்டிலும், அம்மா, பாட்டிகளின் நினைவுகளை தாங்கிய பழைய புடவைகள் இருக்கும். அதை இப்போது உடுத்துபவர்களும் உண்டு. பழைய டிசைன் என்ற தயக்கத்தினால், உடுத்த தயங்குபவர்களும் உண்டு. அப்படி தயங்கு பவர்களுக்காகவே, இந்த முயற்சி. பழைய புடவையை புடவையாகத்தான் அணியவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்களுக்கு பிடித்த வகையில், சுடிதாராக அணியலாம். இல்லையென்றால் அனார்கலி, கவுன், லாங் பிராக், நீல் ஸ்கர்ட், அம்பர்லா கவுன், குர்த்தி... இதுபோன்ற பேஷன் வடிவங்களுக்கும் மாற்றிக்கொள்ளலாம்.

சில பெண்கள், அவர்களது அம்மா புடவையில் தங்களுக்கும், மகளுக்கும் ஒரே டிசைனில் உடை தைத்து அணிகிறார்கள். ஏதோ ஒரு வகையில், முன்னோர்களுக்கும், அவர்களுக்குமான பந்தத்தை உடை வடிவில் தொடர விரும்புகிறார்கள்.

* கிழிந்த புடவைகளையும், பேஷன் உடைகளாக மாற்றமுடியுமா?

நிச்சயமாக மாற்றலாம். புடவையின் கிழிந்த பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு, நல்ல நிலையில் இருக்கும் மற்ற புடவை துணிகளிலும், நவ-நாகரிக உடைகளை தைக்கலாம். அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்ப, ஆரி வேலைப்பாடுகள் செய்து, புடவை ஆடைகளை அழகாக்கலாம்.

* நீங்கள் சின்னத்திரை பிரபலங்களுக்கும் காஸ்டியூம் டிசைனராக இருப்பதை பற்றி கூறுங்கள்?

சினிமா மற்றும் சீரியல்களில் பிசியாக நடிக்கும் ரேஷ்மா பசுபுலெட்டிக்கு நான் செலிபிரிட்டி டிசைனராக இருக்கிறேன். அவரது விஷேச நிகழ்ச்சிக்காக அணுகியபோது ஏற்பட்ட பழக்கம் இப்போது வரையிலும் தொடர்கிறது. அவரை தொடர்ந்து, சில விஜய் டி.வி. பிரபலங்களுக்கும், ஜெயா டி.வி.யின் வாலு பசங்க நிகழ்ச்சிக்கும் உடைகள் வடிவமைத்து கொடுத்திருக்கிறேன். ஆன்லைன் மீடியா நிகழ்ச்சி தொகுப்பாளினி நிக்கி என்பவருக்கும், ஆடை வடிவமைத்து வருகிறேன்.

* உங்களது ஸ்பெஷல் என்ன?

ஆடை வடிவமைப்பில், படைப்பாற்றல் மிகவும் அவசியம். அதுவும் டிரெண்டிங்கிற்கு ஏற்ப நமது படைப்பாற்றல் மற்றும் சிந்தனைகளை வளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அந்தவகையில், என்னுடைய கிரியேட்டிவிட்டியை, மேம்படுத்திக்கொண்டே இருப்பது என்னுடைய ஸ்பெஷல் என நினைக்கிறேன்.

* பேஷன் ஆர்வத்தில், ஆடை வடிவமைப்பாளராக உருமாற நினைக்கும் இளம் பெண்களுக்கு உங்களது அறிவுரை?

ஆடை வடிவமைப்பில், உங்களுக்கு எல்லா வேலைகளும் தெரிந்திருக்க வேண்டும். எந்த ஒருவேலைக்கு மற்றவர்களை அதிகம் சார்ந்திருக்கக்கூடாது. கட்டிங், ஸ்ட்ரிச்சிங், ஆரி வேலை, எம்ராய்டரி, ஹோக்... இப்படி எல்லா வேலைகளையும் தெரிந்து வைத்திருந்தால், 'சீசன்' இல்லாத காலங்களிலும் 'பொட்டிக்' கடையை சமாளித்து நடத்திவிடலாம்.

* பேஷன் மற்றும் பொட்டிக்கில் நல்ல எதிர்காலம் இருக்கிறதா?

நிச்சயமாக. இன்றைய டீன் ஏஜ் வயதினரின் பேஷன் ஆர்வத்திற்கு, வீதிதோறும் பொட்டிக் கடைகள் திறந்தாலும் நிச்சயம் சிறப்பாகவே இயங்கும். இன்றைய கால இளைஞர்களும் இளம்பெண்களும், ஆடைகளுக்கும் செலவு செய்வதில் கணக்கு பார்ப்பதே இல்லை.

* சமீபகாலமாக, 'கஸ்டமைஸ்ட் ஆடைகள்' ரொம்ப பிரபலமாக இருப்பது ஏன்?

ஆம்...! ஒருகாலத்தில் திருமண வரவேற்புக்கு மட்டுமே 'கஸ்டமைஸ்ட்' ஆடைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. நிச்சயதார்த்தத்தில் தொடங்கி, திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய போட்டோஷூட்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள், ஹனிமூன் பயணங்கள், கர்ப்பகால போட்டோஷூட், குழந்தை பிறப்பு, குழந் தையின் முதல் வருட பிறந்த நாள் கொண்டாட்டம்... இப்படி எல்லா விஷேசங்களுக்கும், அவர்களுக்கு பிடித்த மாதிரியில், பிடித்த நிறங்களில், பிடித்த தீம் (கருப்பொருளில்) ஆடைகளை வடிவமைத்து அணிகிறார்கள். இது, இன்றைய டீன்-ஏஜ் வயதினரின் தவிர்க்கமுடியாத பழக்கமாகிவிட்டது.

* நீங்கள் முயன்ற புதுமைகளை கூறுங்கள்?

தையல் கலையில், நிறைய கட்டிங் வேலைகள் இருக்கும். நிறைய துண்டு துணிகள் சேர்ந்து கொண்டே இருக்கும். அதை குப்பைக் கழிவாக தூக்கி எறிபவர்களும் உண்டு. அதில் புதுமை படைப்பவர்களும் உண்டு. அந்தவகையில், கழிவாக சேரும் பிட்டு துணிகளை கலர்கலராக சேர்த்து குழந்தைகளுக்கான ஹேர் பேண்ட், மேஜை அலங்கார விரிப்புகள், காபி மேட்... என நிறைய உபயோகமுள்ள பொருட்களை தயாரிக்கிறோம். இதுவும், மறுசுழற்சி பொருட்கள் பட்டியலில்தான் வரும்.

Tags:    

மேலும் செய்திகள்