மிகவும் மாசுபட்ட இந்திய நகரங்கள்

உலக அளவில் அதிக மாசுபட்ட நகரங்களில் பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக டெல்லி முதலிடம் பிடித்துள்ளது.

Update: 2022-08-30 14:20 GMT

காற்றின் தர நிலையை அளவிடும் எஸ்.ஓ.ஜி.ஏ. என்ற அமைப்பு, உலகில் எந்தெந்த நகரங்களில் காற்றின் தரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது என்பதை வெளியிட்டுள்ளது. உலக அளவில் காற்று மாசு அதிகம் நிலவும் 20 நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

உலக அளவில் டெல்லிக்கு அடுத்தபடியாக கொல்கத்தா நகரம் இரண்டாவது இடம் பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 14-வது இடத்தில் மும்பை நகரம் உள்ளது. உலகில் மிகவும் மாசுபட்ட மற்ற நகரங்களில் கானோ (நைஜீரியா), லிமா (பெரு), டாக்கா (வங்காள தேசம்), ஜகார்த்தா (இந்தோனேசியா), லாகோஸ் (நைஜீரியா), கராச்சி (பாகிஸ்தான்), பெய்ஜிங் (சீனா), அக்ரா (கானா) ஆகியவை முறையே 3 முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.

2050-ம் ஆண்டில், உலக மக்கள் தொகையில் 68 சதவீதம் பேர் நகரங்களில் வசிப்பார்கள் என்றும், நகர்ப்புற காற்றை சுவாசிப்பார்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நகரமயமாக்கல் வேகமாக நடைபெற்று வருகிறது. மக்கள் நெருக்கம் விரைவாக அதிகரிப்பது மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக சுகாதார சீர்கேடு பெருக தொடங்கியுள்ளது.

வேலை வாய்ப்புகள் மற்றும் சிறந்த வாழ்க்கை முறை காரணமாக நகர்ப்புறங்களில் மக்கள்தொகை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நகரமயமாக்கல் நீண்டு கொண்டிருப்பதால் நகர்ப்புறங்கள் மோசமான காற்றின் தரத்திற்கு மையமாக மாறிக்கொண்டிருக்கின்றன.

அத்தகைய மாசுபட்ட காற்றை சுவாசிப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும். இதயப் பிரச்சினைகள், நுரையீரல் பாதிப்புகள், டைப்-2 நீரிழிவு நோய் மற்றும் சுவாசம் தொடர்பான நோய்த்தொற்றுகள் உருவாகும் சூழல் அதிகரிக்கும். இது போன்ற நோய்கள் உயிருக்கு ஆபத்தானவை.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள காற்றின் தர வழிகாட்டுதல்களின்படி, ஆரோக்கியமான காற்றின் தரமானது ஒரு கன மீட்டருக்கு 5 மைக்ரோகிராம் என்ற அளவில் மாசு செறிவைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள வழிகாட்டுதல்கள், உலகின் முக்கிய நகரங்களில் நிலவும் காற்றின் தரத்துடன் பொருந்தவில்லை. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட காற்று மாசுபாடு அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்