சூரியனில் பாம்பு ஊர்வது போன்ற அதிசய காட்சி..! ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்ட வீடியோ
வளிமண்டல வாயுக்கள் சூரியனின் காந்தப்புலத்தின் வழியாக பாம்பு ஊர்வது போல செல்லும் காட்சியை படம்பிடித்துள்ளது.
பாரிஸ்,
சூரியனின் உள் ரகசியங்களை ஆய்வு செய்து வரும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் சோலார் ஆர்பிட்டர் விண்கலம் புதிதாக அரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
அதில் குளிர்ந்த வளிமண்டல வாயுக்கள் அடங்கிய 'குழாய்' போன்ற அமைப்பு ஒன்று, சூரியனின் காந்தப்புலத்தின் வழியாக பாம்பு ஊர்வது போல செல்லும் காட்சியை படம்பிடித்துள்ளது. இது இதுவரை கண்டிராத ஒரு சுவாரசியமான நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது.
இந்த பிளாஸ்மா வினாடிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்திருக்க வேண்டும் என்பது சோலார் ஆர்பிட்டர் விண்கலம் பதிவுசெய்த காட்சிகளின் மூலம் தெரிகிறது.
சூரியனில் உள்ள செயல்திறன் மிக்க பகுதியானது, பில்லியன் கணக்கான டன் அளவிலான பிளாஸ்மாவை விண்வெளியில் வெளியேற்றுகிறது. அதற்கு முன்னதாக, அறிகுறியாக இந்த நிகழ்வு நடந்திருக்கலாம் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
வாயுக்கள் மிகவும் சூடாக இருக்கும் நிலையை பிளாஸ்மா என்றழைக்கப்படுகிறது. ஒரு வாயு சூடாக இருப்பதால், அதிலுள்ள அணுக்கள் தன் வெளிப்புறத் துகள்களில் எலக்ட்ரான்கள் சிலவற்றை இழக்கத் தொடங்குகின்றன. இந்த இழப்பு அந்த வாயுவை மின்சார சார்ஜ் செய்கிறது. எனவே வாயுக்கள் காந்தப்புலத்தால் எளிதில் பாதிக்கப்படுகிறது.
சூரியனின் வளிமண்டலத்தில் உள்ள அனைத்து வாயுக்களும் பிளாஸ்மா நிலையிலேயே உள்ளன. ஏனெனில் அங்கு வெப்பநிலை ஒரு மில்லியன் டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் உள்ளது.
அந்த பிளாஸ்மா சூரியனின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் பாய்கிறது. சூரியனின் காந்தப்புலம் திருகிய கோண வடிவத்திலான அமைப்பை கொண்டுள்ளதால் வாயுக்கள் பாம்பு ஊர்வது போல செல்கின்றன என்று இங்கிலாந்தின் முல்லார்ட் விண்வெளி அறிவியல் ஆய்வகம் (யுசிஎல்) விஞ்ஞானி டேவிட் லாங் தெரிவித்தார்.
செப்டம்பர் 5 அன்று சோலார் ஆர்பிட்டர் விண்கலம் சூரியனை நெருங்கிக் கொண்டிருந்த போது இந்த நிகழ்வு காணப்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகளையும் ஆய்வு செய்துள்ளது என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வு, சூரிய செயல்பாடுகள் அறிய உதவும். சூரியனின் செயல்பாட்டால் 'விண்வெளி வானிலை' உருவாகிறது. பூமியில் உள்ள செயற்கைக்கோள்கள் மற்றும் பிற தொழில்நுட்பத்தை இந்த 'விண்வெளி வானிலை' சீர்குலைக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சோலார் ஆர்பிட்டர் என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்(இஎஸ்ஏ) மற்றும் நாசா இடையேயான சர்வதேச ஒத்துழைப்பு விண்வெளி திட்டமாகும்.சோலார் ஆர்பிட்டர் விண்கலம் பிப்ரவரி 9, 2020 அன்று ஏவப்பட்டது. விண்வெளியில் 1000வது நாளை தாண்டி சோலார் ஆர்பிட்டர் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.