இசை.. நடை.. நலம்..!

இசையை கேட்பது மட்டுமல்ல, உடலை அசைத்து நடனமாடுவதும் சிறந்த உடற்பயிற்சியாக அமையும். படிக்கட்டுகளில் ஏறிச் செல்லும் வழக்கத்தை பின்பற்றுவது மூட்டு எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வித்திடும்.

Update: 2022-10-25 12:28 GMT

ஜிம்முக்கு சென்றுதான் உடலை கட்டுக்கோப்பாக பேண முடியும் என்றில்லை. கடினமான உடற்பயிற்சிகளை செய்தால்தான் ஆரோக்கியம் காக்க முடியும் என்றுமில்லை. அன்றாட வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களை தவறாமல் கடைப்பிடித்து வந்தால் போதுமானது.

* செல்லப்பிராணிகளுடன் பொழுதை போக்குவதற்கு சில நிமிடங்கள் ஒதுக்குங்கள். தினமும் அதனை வாடிக்கையாக்குங்கள். அந்த நேரத்தில் மற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிருங்கள். செல்லப்பிராணிகளுடன் சிறிது தூரம் நடைப்பயணம் செய்வது, அவற்றுடன் விளையாடுவது என அந்த பொழுதை இனிமையாக்குங்கள்.

* இசையை கேட்பது மட்டுமல்ல, அதன் அதிர்வலைகளுக்கு தக்கபடி உடலை அசைத்து நடனமாடுவதும் சிறந்த உடற்பயிற்சியாக அமையும். மாலைப்பொழுதில் குடும்பத்தினருடன் சேர்ந்து நடனமாடியும் மகிழலாம். குழு நடனம் உற்சாகத்தையும் வரவழைக்கும். அதிக கலோரிகளையும் எரிக்க வைக்கும்.

* துணையுடன் நேரத்தை செலவிடுங்கள். அது ஆரோக்கிய வாழ்வியலின் முக்கிய அங்கமாகும். துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். அவர் சொல்ல விரும்பும் விஷயத்தை காது கொடுத்து கேளுங்கள். குறுக்கீடு செய்து அவரது கவனத்தை திசை திருப்பாதீர்கள். தினமும் மனம் விட்டு பேசினாலே போதுமானது. அது மனதை தளர்வடைய செய்யும். தேவையற்ற சிந்தனைகள் மனதை விட்டு அகல வழிவகை செய்யும்.

* வாகனங்களில் வெளி இடங்களுக்கு செல்லும்போது வாகனம் நிறுத்துமிடத்திற்குள் காரை நிறுத்த நேர்ந்தால் சற்று தூரமான பகுதியில் `பார்க்கிங்' செய்யுங்கள். அது சற்று கூடுதல் நேரம் நடக்க வைக்கும். அப்படி நடந்து செல்லும் வழக்கத்தை பின்பற்றுவதும் உடற் பயிற்சி செயல்முறையில் அடங்கும்.

* அலுவலகம், வெளியிடம் எங்கு செல்ல நேர்ந்தாலும் லிப்ட், எஸ்கலேட்டர் பயன்பாட்டை தவிருங்கள். படிக்கட்டுகளில் ஏறிச் செல்லும் வழக்கத்தை பின்பற்றுவது மூட்டு எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வித்திடும்.

Tags:    

மேலும் செய்திகள்