குரங்கு அம்மை வைரஸ் எந்தவொரு மனிதருக்கு வேண்டுமானாலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்! எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
குரங்கு அம்மை நோய் நெருங்கிய உடல் தொடர்பு மூலம் யாருக்கு வேண்டுமானாலும் பரவலாம் என்று கூறியுள்ளனர்.
புதுடெல்லி,
ஓரினச்சேர்க்கையாளர்களால் தான் குரங்கம்மை அதிகம் பரவுகிறது என்ற கருத்து பரவலாக உள்ளது. இதனை மறுத்துள்ள மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், குரங்கு அம்மை நோய் நெருங்கிய உடல் தொடர்பு மூலம் யாருக்கு வேண்டுமானாலும் பரவலாம் என்று கூறியுள்ளனர்.
ஓரினச்சேர்க்கையாளர்கள் அல்லது மூன்றாம் பாலினத்தவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் போன்றவர்களை கண்டு பொதுவெளியில் அச்சம் உள்ளது. அவர்களால் தான் இந்நோய் அதிகம் பரவுகிறது என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் உடல் தொடர்பு கொள்வதால் ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக எய்ட்ஸ் நோய், ஓரினச்சேர்க்கையாளர்கள் மூலம் தான் பரவுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் அதன் பின்னர், அது பொய் என தெரியவந்தது. அதேபோலவே இப்போது குரங்கு அம்மை பயம் ஓரினச்சேர்க்கை நபர்களால் தான் அதிகம் பரவியது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வின் படி, ஓரினச்சேர்க்கையாளர்கள் அல்லது மூன்றாம் பாலினத்தவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் ஆண் மற்றும் ஆண் என ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள், பலருடன் உடலுறவு கொள்ளும்போது குரங்கு அம்மை வைரஸ் நோய் எளிதாக பரவுகிறது என்று தெரியவந்தது. பல பேருடன் தொடர்பில் இருப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதை முன்வைத்து தான் இப்போது அவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள்.
இப்போது இதனை காரணம் காட்டி அவர்களை சமூகத்தில் இருந்து பலர் வெறுத்து ஒதுக்கி உள்ளனர். அதற்கு அவசியம் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பல பேருடன் தொடர்பு கொள்ளும் யாருக்கும் வேண்டுமானாலும் இந்நோய் பரவலாம் என்று கூறுகின்றனர். மருத்துவர்கள் கூறுகையில், விந்தணுக்கள் மூலம் வைரஸ் பரவுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள் எச்சில் போன்றவற்றிலிருந்து இன்னொருவருக்கு எளிதாக பரவுகிறது.
எனவே இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மூலம் மட்டும் பரவுகிறது என்று எண்ண வேண்டாம், எண்ணக்கூடாது என்று தெரிவிக்கின்றனர். ஓரினச்சேர்க்கையாளர்கள் போன்றவர்கள் தான் இந்த நோயை பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைக்காமல், இந்த வைரஸ் எவ்வாறெல்லாம் பரவுகிறது, அதை எப்படி தடுப்பது என்பது குறித்து ஆக்கபூர்வமான வழிகளை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆப்பிரிக்க மக்கள் மற்றும் மேற்கண்ட அத்தகைய மனிதர்களிடையே குரங்கு அம்மை வைரஸ் பரவல் அதிகம் காணப்படுகிறது. எனினும் வைரஸ்க்கு யார் எந்த மனிதர், அவர் எந்த இனத்தைச் சார்ந்தவர், தொடர்பு கொண்டவர், அவர் ஆணா பெண்ணா, என்பன போன்ற பேதம் கிடையாது. குரங்கம்மை பாதிப்பு, ஏற்கெனவே நோய் பாதிக்கப்பட்டவருடன் நேரடி தொடர்பு கொண்டால் இன்னொருவருக்கு பரவும் என்பதே உண்மை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.