மல்லர் கம்பம் விளையாட்டிற்கு புத்துயிர் ஊட்டும் இளைஞர்

தூத்துக்குடி அருகே பண்ணைவிளை பகுதியை சேர்ந்தவரான கிப்சன், அப்பகுதியில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் மல்லர் கம்பம் கலையை இலவசமாக கற்றுக்கொடுக்கிறார். இவரது கண்காணிப்பில், 50-ற்கும் மேற்பட்டவர்கள் மல்லர் கம்பம் பயிற்சி பெறுகிறார்கள்.;

Update:2022-07-24 16:24 IST

''உலகுக்கு அளப்பரிய கலைகளையும், வீர விளையாட்டுகளையும் வழங்கிய தமிழர்களின் நாகரிகமும், பழம்பெருமைகளும் இன்றும் போற்றப்படுகிறது. களரி, வர்மக்கலை, மல்யுத்தம்... வரிசையில் வீர விளையாட்டான மல்லர் கம்பமும் உடலுக்கும், மனதுக்கும் வலுசேர்க்கும் வகையில் பயிற்றுவிக்கப்படுகிறது. உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்தும் மல்லர் கம்பமானது தமிழகத்தை கடந்து தற்போது வடமாநிலங்களிலும் சிறப்புற்று திகழ்கிறது. அங்கு மல்லர் கம்பத்தை 'மால்காம்' என்ற பெயரில் அழைக்கின்றனர். இது தேசிய உடல் விளையாட்டு போட்டியாகவும் நடத்தப்படுகிறது. நம் மண்ணில் பிறந்த மல்லர் கம்பம், இன்று வடமாநிலங்களில் அதிகமாய் கற்பிக்கப்படுவது, கொண்டாடப்படுவது வேதனையான விஷயமே என்றாலும், தற்போது தமிழகத்தில் இக்கலை எழுச்சி பெறுகிறது'' என்று உற்சாகமாக பேச ஆரம்பிக்கிறார், கிப்சன்.

''பி.எஸ்சி., பி.எட். படித்த நான், கல்லூரியில் படிக்கும்போதே தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான மல்லர் கம்பத்தை கற்றுக்கொண்டேன். மக்கள் மறந்த மல்லர் கம்பத்துக்கு புத்துயிரூட்டும் வகையில், கிராமப்புற மாணவ-மாணவிகளுக்கு தினமும் இலவசமாக பயிற்றுவிக்கிறேன்.

தற்போது பண்ணைவிளை பகுதியை சேர்ந்த 50 இளைஞர்கள் என்னிடம் மல்லர் கம்பம் விளையாட்டு பயிற்சி பெறுகிறார்கள். அவர்கள் விழுப்புரத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் பங்கேற்க உள்ளனர்'' என்றவர், மல்லர் கம்ப விளையாட்டின் அடிப்படைகளை விளக்கினார்.

''மல்லர் கம்பமானது நிலைக்கம்பம், தொங்கு கம்பம், கயிறு விளையாட்டு என 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. நிலைக்கம்பம் என்பது பருமனான மரத்தை நட்டு, அதில் ஏறி பலவித ஆசனங்கள் செய்வதாகும். தொங்கு கம்பம் என்பது பருமனான மரத்தை கயிற்றில் கட்டி, அதில் எண்ணெய் பூசி வீரதீர விளையாட்டு செய்வதாகும்.

கயிறு விளையாட்டு என்பது கம்பத்துக்கு பதில் கயிற்றில் ஏறி, பல்வேறு ஆசனங்களை செய்வது. கயிறு விளையாட்டில் பெரும்பாலும் பெண்களே பயிற்சி பெறுகின்றனர். விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புத்துயிருடன் திகழும் மல்லர் கம்பமானது, என்னுடைய முயற்சியினால் தற்போது தூத்துக்குடி மாவட்டத்திலும் புத்துயிர் பெறுகிறது'' என்றார்.

''மல்லர் கம்பம் விளையாட்டுக்கு பள்ளிக்கல்வித்துறை விளையாட்டு போட்டிகள், கேலோ இந்தியா போட்டிகளில் அங்கீகாரம் கிடைத்து உள்ளது. இந்த விளையாட்டில் கம்பத்தில் ஏறி 90 வினாடிகளில் 16 வகையான ஆசனங்களை செய்து காண்பிக்க வேண்டும். அதில் சிறப்பாக செய்பவர் வெற்றி பெற்றவராக தேர்வு செய்யப்படுவார். இதனை தூத்துக்குடி மாவட்டத்தில் ஊக்குவித்து, தேசிய அளவில் வெற்றி பெற்று தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பயிற்சி அளித்து வருகிறேன்'' என்ற நம்பிக்கை வரிகளுடன் விடைபெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்