தேனீக்களை பாதுகாக்கும் 'குட்டி ராணி'
தேனீக்கள் நலனில் அக்கறை காட்டும் வித்யா ஸ்ரீயிடம் சிறு நேர்காணல்...;
''தேனீக்கள் இல்லாத உலகம், வெறும் 3 வருடங்களில் அழிந்துவிடும்'' என்ற தகவல், 20 வயதே நிரம்பிய வித்யா ஸ்ரீயை வெகுவாக பாதித்திருக்கிறது. அதனால் கல்லூரி படிப்பை முடித்ததும், தேனீ வளர்ப்பை முன்னெடுத்திருக்கிறார். கூடவே, தேனீ வளர்க்க ஆசைப்படுபவர்களுக்கு இலவச பயிற்சியும் கொடுக்கிறார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவரான வித்யா ஸ்ரீயிடம், நிறைய விவசாயிகள் தேனீ வளர்ப்பு குறித்த இலவச பயிற்சியினை பெற்று, தங்களது பண்ணை வீடுகளிலும், காய்கறி தோட்டங்களிலும் தேனீ வளர்ப்பை முன்னெடுத்திருக்கிறார்கள். தேனீக்கள் நலனில் அக்கறை காட்டும் வித்யா ஸ்ரீயிடம் சிறு நேர்காணல்...
* தேனீக்கள் மீதான கரிசனம், எப்போது ஏற்பட்டது?
பி.ஏ. வரலாறு 2-ம் ஆண்டு படிக்கும்போதே, தேனீக்களின் மகத்துவத்தையும், அதன் அவசியத்தையும் உணர்ந்து கொண்டேன். அப்போது முதலே, தேனீக்கள் வளர்ப்பில் ஆர்வமாக இருந்தேன். இதற்கிடையில், கல்லூரி படிப்பை முடித்தவுடன், தேனீக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியாக தேனீ வளர்ப்பை முன்னெடுக்க தொடங்கினேன். அதற்கு முதற்கட்டமாக, மதுரையை சேர்ந்த ஜோஸ்பின் என்பவரிடம் தேனீ வளர்ப்பு மற்றும் தேன் அறுவடை பற்றி கற்றுக்கொண்டு, சிறு முயற்சியாக வீட்டில் தேனீக்கள் வளர்ப்பை முன்னெடுத்தேன். ஆனால் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. இருப்பினும் மனம் தளராமல், அடுத்த முயற்சியில் வெற்றி கண்டேன். வெகுவிரைவாக தேனீ வளர்ப்பையும், தேன் கூடு பராமரிப்பையும் கற்றுக்கொண்டேன்.
* தேனீக்களை எங்கெல்லாம் வளர்க்கிறீர்கள்?
எங்களுடைய பண்ணை வீட்டில், 15 தேனீ வளர்ப்பு பெட்டிகளை அமைத்திருக்கிறேன். அதுபோக, கோவை சிங்காநல்லூர் பகுதியில் எனது தோழியின் தந்தை தோட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தேனீ பெட்டிகளை வைத்திருக்கிறேன். அதேபோல, சத்தியமங்கலம் பகுதியில் இருக்கும் உறவினர் தோட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தேனீ வளர்ப்பு பெட்டிகளை அமைத்து, தேனீக்களை வளர்த்து வருகிறேன்.
* தேனீ வளர்ப்பு பற்றிய பயிற்சிகளை வழங்கத் தொடங்கியது எப்போது? ஏன்?
நான் தேனீக்கள் வளர்க்க பயிற்சி பெற்றதே, அதை எல்லோருக்கும் இலவசமாக கற்றுக்கொடுக்கத்தான். ஏனெனில் தேனீ வளர்க்க நிறைய பேர் பயிற்சி கொடுக்கிறார்கள். ஆனால் அவை அனைத்திற்கும் கட்டணம் வசூலிப்பதால், தேனீ வளர்க்க ஆசைப்படுவதில்லை. ஆனால் நான் தேனீ வளர்ப்பை தொழிலாக பார்க்கவில்லை. தேனீக்களை ஆரோக்கியமான பூமிக்கு அத்தியாவசியமான தேவையாக கருதுவதால்தான், அதை இலவசமாக பயிற்றுவிக்கிறேன். எல்லோருக்கும், தேனீ வளர்க்கும் ஆவலை தூண்டுகிறேன்.
* தேனீக்களை பெருக்குவது உங்களது ஆசை. அதை பொதுமக்களும் வரவேற்கிறார்களா?
நிச்சயமாக..! தேனீக்களை வளர்ப்பதினால், தேன் அறுவடை மூலமாக வருமானம் கிடைக்கிறது. ஒரு தேன் பெட்டியில் மட்டும், ஒரு மாதத்திற்கு ஒரு லிட்டர் தேன் எடுக்க முடியும். அதுவே, தேன் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, தேன் அறுவடையும் அதிகரிக்கும். இது லாபகரமான முயற்சிதானே..? பிறகு பொதுமக்கள் எப்படி ஆர்வம் காட்டாமல் இருப்பார்கள்.
மிக முக்கியமாக, தேனீக்களுக்கு நீங்கள் தீவனம் போடவேண்டியதே இல்லை. அவை தானாகவே உணவு தேடி, உயிர்வாழ்ந்துவிடும். அருகில் இருக்கும் தேனீ பண்ணைகளில், ஒருமுறை மட்டும் ரூ.2300 செலவில், நீங்கள் தேன் பெட்டி வாங்கி வைத்தால்போதும், அதில் இருந்து மாதந்தோறும் வருமானம் ஈட்ட முடியும். அந்தவகையில், இது 'ஒன் டைம் இன்வெஸ்ட்மெண்ட்' தொழில் முயற்சி.
* என்னென்ன பயிற்சிகள் கொடுக்கிறீர்கள்?
பெரும்பாலும் சனிக்கிழமைகளில்தான் இலவச பயிற்சி நடைபெறும். அன்று தேனீக்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, தேன் பெட்டி அமைக்கும் முறைகள், அதை பராமரிக்கும் முறைகள், ராணி தேனீயை கண்டறிவது, கையாள்வது, தேனீக்களோடு பழகுவது போன்ற பயிற்சிகளை வழங்குகிறேன்.
* தேனீக்களை எங்கெல்லாம் வளர்க்கலாம்?
தேனீக்களை பெரிய தோட்டத்தில்தான் வளர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பூச்செடிகள் இருக்கும் சிறு வீட்டு தோட்டத்திலும், தேன் பெட்டிகளை வைத்து தேனீக்களை வளர்க்கலாம். ஏன்...? மாடித்தோட்டத்தில் கூட, தேனீக்கள் வளர்ப்பை முன்னெடுக்கலாம்.
* மாடித்தோட்டங்களில் தேனீ வளர்க்க முடியுமா? பராமரிப்பு வழிமுறைகளை கூறுங்கள்?
தாராளமாக வளர்க்கலாம். தேனீக்களை வளர்க்க நிழல் அவசியம். நேரடியான சூரிய ஒளியில் இருந்து விலகி, நிழல் இருக்கும் மாடி பகுதிகளில் தேன் பெட்டிகளை அமைக்கலாம். அதேபோல இரவு நேரங்களில், தேன் பெட்டிகள் மீது வெளிச்சம் படாமல் பார்த்து கொள்ள வேண்டும். இவை தவிர, 7 நாட்களுக்கு ஒருமுறை, தேன் பெட்டியை திறந்து, தேன் அடை மற்றும் தேனீக்களின் நிலவரத்தை கண்காணிப்பது அவசியம். ஏனெனில் தேன் அடையில் புழுக்கள் இருந்தால், அதை சுத்தப்படுத்த வேண்டும். அடைகள் திடீரென கருப்பாக மாறினாலும், அவை நோய் பாதிப்பிற்கு உள்ளாவதாக அர்த்தம். அதையும், ஆரம்பத்திலேயே கண்காணித்து அகற்றிவிட வேண்டும். இறுதியாக தேன் பெட்டியில், அடி பலகையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இல்லையென்றால், அது தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
* தேன் நிறமும், சுவையும் மாறுபடுமா?
ஆம்..! தோட்டங்களுக்கு ஏற்ப தேனின் நிறமும், அதன் சுவையும் மாறுபடும். முருங்கை தோட்டத்தில் இருந்து எடுக்கப்படும் தேன், வெளிர் நிறத்தில், தண்ணீர் போல லேசாக இருக்கும். மாம்பழ தோட்டத்தில் வளரும் தேனீக்கள், புளிப்பு-இனிப்பு சுவை கலந்த தேனை கொடுக்கும். புளியந்தோப்புகளில் அமைக்கப்பட்ட தேன் பெட்டிகளில் இருந்து எடுக்கப்படும் தேன், அதிக புளிப்பு சுவையுடன் இருக்கும். இப்படி பூக்களுக்கு ஏற்ப, தேன் சுவையும், நிறமும் மாறுபடும்.
* தேனீக்களுக்கு உணவு கொடுக்க வேண்டுமா?
அவைகளுக்கு உணவு கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் குளிர்காலங்களில், தேனீக்கள் உணவு சேகரிக்க வெளியில் செல்லாது. அந்த கால கட்டத்தில் மட்டும், நாம் சர்க்கரை தண்ணீர் கொடுக்கலாம். ஏனெனில், குளிர்காலங்களில் அவற்றுக்கு தேன் தான் உணவு. அதை நாம் எடுத்துவிடும்போது, இயற்கை தேனிற்கு பதிலாக, சர்க்கரை தண்ணீரை உணவாக கொடுக்கலாம்.
* வீட்டில் தேனீ வளர்க்கும்போது, அவை நம்மை கடிக்காதா?
நாம் அதற்கு தொந்தரவு தராத வகையில் நடந்து கொண்டால், அவையும் நம்மை தொந்தரவு செய்யாது. வாசனை திரவியங்களை பூசிக்கொண்டு அதன் அருகில் செல்லக்கூடாது. நறுமணம் தரும் பொருட்களை அதன் அருகில் வைக்கவும் கூடாது. இயற்கையோடு அவை ஒன்றாக கலக்கும்போதும், நம்மை தொந்தரவு செய்யாது.