பாதுகாப்பு குறைவால் அச்சத்துடனேயே பயணிக்கும் அவலம்: மின்சார ரெயிலில் இரவு நேர பயணம் பாதுகாப்பாக அமைவது எப்போது? பயணிகள் குமுறல்

மின்சார ரெயிலில் இரவு நேர பயணத்தில் பயத்துடனேயே பயணிக்கும் அவலம் இருக்கிறது என்றும், பாதுகாப்பான பயணம் அமைவது எப்போது? என்றும் பயணிகள் குமுறுகின்றனர்.;

Update:2022-09-19 16:20 IST

பாதுகாப்பு கேள்விக்குறி

மனித வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பாதுகாப்பு என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. தனிமனித பாதுகாப்பு, குடும்பத்தினருக்கான பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் சென்னையில் பிரதான போக்குவரத்து அம்சங்களில் ஒன்றாக இருக்கும் மின்சார ரெயில் போக்குவரத்தில் பயணிகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவேதான் இன்றளவும் நீடிக்கிறது.

சென்னையில் அடித்தட்டு மக்கள் முதல் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற ஒரு பயணத்தை பூர்த்தி செய்யும் மின்சார ரெயில் போக்குவரத்து சேவையை பொறுத்தவரையில், சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கமாக வார நாட்களில் 244 சேவைகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் 96 சேவைகளும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கமாக வார நாட்களில் 126 சேவைகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் 96 சேவைகளும், சென்டிரல்-அரக்கோணம் மார்க்கமாக அனைத்து நாட்களிலும் 115 சேவைகளும், சென்டிரல்-கூடூர் மார்க்கமாக அனைத்து நாட்களிலும் 88 சேவைகளும் என இயக்கப்படுகின்றன.

அச்சத்துடன் பயணிக்கும் அவலம்

இந்த ரெயில் சேவைகள் மூலம் அலுவலகம் மற்றும் இதர பணிகளுக்கு சென்று திரும்ப, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் செல்ல, சொந்த வேலைகளுக்காக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணம் மேற்கொள்ள, வெளியூர் பயணத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சரியான நேரத்தில் பயணிக்க என பல்வேறு வகையான தேவைகளுக்காக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயனடைந்து வருகின்றனர். அதிகாலையில் தொடங்கும் இந்த சேவை நள்ளிரவு வரை நீடிக்கிறது.

ரெயில்வே பாதுகாப்பு படை (மத்திய அரசு), ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் (மாநில அரசு) என இருதரப்பில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தாலும், பாதுகாப்பான பயணம் இல்லாமல், அச்சத்துடனேயே மின்சார ரெயிலில் பயணிகள் பயணிக்கும் அவலம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பாதுகாப்பா? அப்படின்னா என்ன?

அதிலும், இரவு நேர பயணத்தில் இது மேலும் சற்று பயத்தை பயணிகளுக்கு அதிகரிக்கத்தான் செய்கிறது. குறிப்பாக, சென்னை கடற்கரை-தாம்பரம் மார்க்கமாக கடைசியாக இயக்கப்படும் 2 ரெயில்களில் பயணிக்கும் பயணிகள், பாதுகாப்பா? அப்படின்னா என்ன? என்று கேட்கும் அளவுக்குதான் அவர்களின் நிலைமை இருக்கிறது. அதுவும் சில மாதங்களுக்கு முன்பு ரெயில் பெட்டியில் ஆயுதத்துடன் மர்மநபர் ஒருவர் பயணித்ததை 'தினத்தந்தி' படத்துடன் செய்தியாக வெளியிட்டு இருந்தது.

மேலும், சமீபத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை பெண் போலீசாருக்கே ஓடும் ரெயிலில் கத்திக்குத்து சம்பவம் நடந்தது, பயணிகளை மேலும் அதிருப்தியில் ஆழ்த்தியது. காக்கி உடையில் இருந்த போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், அவர்கள் பயணிகளுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும்? என்ற கேள்வியும் தற்போது பயணிகள் மத்தியில் உரத்த குரலாக இருக்கிறது.

கண்காணிப்பு கேமராக்கள்

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்துவது, போதிய வெளிச்சம் இல்லாத ரெயில் நிலையங்களில் மின்விளக்கு பொருத்துவது என்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. ஆனால் அது காலப்போக்கில் மங்கி, ஆமைவேகத்தில் இன்றளவும் பணிகள் நடந்து வருவதை பார்க்க முடிகிறது.

தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்துவிட்டன. சென்னையில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தற்போது குற்றச்சம்பவங்கள் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், சென்னையில் அனைத்து மார்க்கங்களிலும் இயக்கப்படும் மின்சார ரெயில்களின் பெட்டிகள் மற்றும் ரெயில் நிலையங்கள் முழுவதிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, தவறுகள், குற்றங்கள் நடக்காதபடி தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

துப்பாக்கி ஏந்திய போலீசார்

இதுதவிர ரெயில் நிலையங்களில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் ஏற்படுத்தி தருவது, ரெயில் பெட்டிகள் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார், ரெயில்வே பணியாளர்கள் இருப்பது, ரெயில் நிலையங்களில் பயணிகளை தவிர, மற்றவர்களின் நடமாட்டத்தை குறைப்பது ஆகியவற்றை மேற்கொண்டாலே மின்சார ரெயில் பயணம் பாதுகாப்பானதாகவும், இன்பமானதாகவும் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

அந்த வகையில், மெட்ரோ ரெயில் நிலையங்கள் இதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. அந்த அளவுக்கு 'ஹை-டெக்'காக இல்லாவிட்டாலும், அடிப்படை அளவிலான பாதுகாப்பை பலப்படுத்தினாலே பாதுகாப்பான பயணத்தை பயணிகளுக்கு வழங்க முடியும்.

இது ஒரு புறம் இருக்க, மின்சார ரெயில் சேவைகளை இயக்குவதிலும் ரெயில்வே நிர்வாகம், பயணிகளின் கஷ்டங்களை அறிந்து இயக்க வேண்டும் என்பதும், பல்வேறு விஷயங்களுக்கு கருத்துகேட்பு கூட்டம் நடத்தும், மத்திய-மாநில அரசுகள், மின்சார ரெயில்களை பயணிகளின் வசதிக்கு ஏற்றப்படி எந்தெந்த நேரத்தில் இயக்கினால் சரியாக இருக்கும் என்பதை கேட்டறிய வேண்டும் என்பதும் பயணிகளின் மற்றொரு முக்கிய கோரிக்கையாக உள்ளது.

மொழி தெரியாத போலீசாரால் அல்லல்படும் பயணிகள்

மின்சார ரெயில் பெட்டிகளில் பாதுகாப்பு பணிக்கு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவ்வப்போது வருகிறார்கள். அப்படி வரும் போலீசாரில் பெரும்பாலானோர் வட மாநிலத்தவர்களாகவே இருக்கிறார்கள். அதுவும் இரவு நேர ரெயில்களில் அவர்கள்தான் ரோந்து பணிக்கு வருகின்றனர்.

அவ்வாறு வரும் போலீசாரிடம், குற்றச்சம்பவங்கள் நடந்தாலோ? அல்லது சந்தேகத்துக்குரியவர்கள் யாரும் பயணித்தாலோ? அதுகுறித்து தெரிவிப்பது மிகவும் சிரமமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். வடமாநில போலீஸ்காரர்களால், வடமாநில பயணிகளுக்கு மட்டுமே லாபம் என்றும், தமிழக பயணிகளுக்கு அல்லல்படும் நிலைதான் ஏற்படுகிறது என்றும் பயணிகள் பலர் வேதனையோடு தெரிவிக்கின்றனர். இதேபோல், நிலைய அதிகாரிகளும் பலர் வடமாநிலத்தவர்களாகத்தான் இருப்பது மேலும் பயணிகளுக்கு சிக்கலைத்தான் தருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்