சுற்றுலா செல்ல விமானம் உருவாக்கிய குடும்பம்
லண்டனில் வசிக்கும் அசோக் அலிசெரில் தாமராக்ஷன் என்ற என்ஜினீயர் நான்கு பேர் பயணிக்கக்கூடிய விமானத்தை தனது குடும்பத்திற்காக உருவாக்கி இருக்கிறார்.;
நெருக்கடி மிகுந்த நகர சூழலில் வசிப்பவர்கள் பலரும் குடும்பத்துடன் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு விரும்புகிறார்கள். ஆரம்பகட்ட பயணத்தை அருகில் உள்ள இடங்களில் இருந்து தொடங்குபவர்கள், மாநிலங்கள் கடந்து, எல்லைகளை தாண்டி உலக சுற்றுப்பயணத்திற்கு திட்டமிடுகிறார்கள். அப்படி உலகை வலம் வரும் ஒரு குடும்பம் சொந்தமாகவே விமானம் தயாரித்து அதில் பயணித்துக்கொண்டிருக்கிறது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசிக்கும் அசோக் அலிசெரில் தாமராக்ஷன் என்ற என்ஜினீயர் நான்கு பேர் பயணிக்கக்கூடிய விமானத்தை தனது குடும்பத்திற்காக உருவாக்கி இருக்கிறார். கொரொனா ஊரடங்கு காலத்தில் விமானம் தயாரிக்கும் திட்டத்தை தொடங்கியவர் 18 மாதங்களில் வடிவமைத்து பயன்பாட்டுக்கும் கொண்டு வந்துவிட்டார். அசோக் கேரள மாநிலத்திலுள்ள ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர்.
பாலக்காடு பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்தவர், முதுகலை படிப்பை தொடர்வதற்காக 2006-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்திருக்கிறார். அங்கு படிப்பை முடித்துவிட்டு பணி புரிய தொடங்கியவர், திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
அசோக் பயண பிரியர். அவருடைய மனைவிக்கும் பயணம் மேற்கொள்வது பிடிக்கும் என்பதால் விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு பயணம் செய்யும் வழக்கத்தை பின்பற்றி வந்திருக்கிறார்கள்.
அப்போது விமான பயணத்தின் மீது நாட்டம் அதிகரித்ததால், அசோக் விமானி பயிற்சியில் சேர்ந்து 2018-ம் ஆண்டு விமானி உரிமத்தை பெற்றுவிட்டார். அதன் பிறகு இரண்டு இருக்கைகள் கொண்ட விமானங்களை வாடகைக்கு எடுத்து சுற்றுப்பயணத்தை தொடர்ந்திருக்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கு காலகட்டம் பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டதால் வீட்டிலேயே முடங்கிபோய் இருக்கிறார்கள். அந்த சமயத்தில் சொந்த விமானம் வாங்க வேண்டும் என்ற ஆசை எழவே, தாமே தயாரித்து விட்டார்கள்.
அதுபற்றி அசோக் கூறுகையில், ''விமானி உரிமம் பெற்றதும் ஆரம்பத்தில் இரு இருக்கைகள் கொண்ட விமானங்களை சுற்றுப்பயணத்திற்கு பயன்படுத்தினோம். அது மகள்களுக்கு சவுகரியமாக இல்லாததால் நான்கு இருக்கைகள் கொண்ட விமானத்தை தேடினோம். ஆனால் அத்தகைய விமானங்கள் புழக்கத்தில் அரிதாகவே உள்ளது.
அவற்றை கண்டுபிடிப்பதும் கடினம் என்பதால் குடும்பத்தினரை சுற்றுப்பயணத்திற்கு அழைத்து செல்ல சவுகரியமான விமானம் தேவை என்பதை உணர்ந்தேன். கொரோனா முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது நாங்கள் பணம் சேமிக்க தொடங்கினோம். அந்த பணத்தை கொண்டு சொந்த விமானம் வாங்கு வதற்கு விரும்பினோம்.
நாங்கள் எதிர்பார்த்தபடியே அது சாத்தியமாகிவிட்டது. எங்கள் சவுகரியங் களுக்கு ஏற்ப விமானத்தை வடிவமைக்க முடிந்தது மன நிறைவாக உள்ளது'' என்கிறார்.
இப்போது, அசோக்கும் அவரது மனைவியும் விமானத்தில் தங்கள் இரண்டு மகள்களுடன் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவை சுற்றி வருகிறார்கள். விமானத்திற்கு இளைய மகள் தியாவின் பெயரை சூட்டி இருக்கிறார்கள்.