திறப்பு விழாவுக்கு தயாராகும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம்

தென் மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவான கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் விரைவில் திறப்பு விழா காண உள்ளது. இதனால் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும்.

Update: 2022-06-20 11:18 GMT

தலைநகரின் தலைவலி

தலைநகர் சென்னையில் தீராத தலைவலியாக இருப்பது போக்குவரத்து நெரிசல். வாகன போக்குவரத்து அதிகரித்த நிலையில் சென்னையின் அனைத்து சாலைகளிலும் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது.

மக்களின் முக்கிய தேவையான பஸ் போக்குவரத்துக்காக கோயம்பேடு பஸ் நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்துதான் வெளியூர்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

நாளுக்குநாள் இங்கு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்ததால், மாதவரத்தில் புதிதாக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் போக்குவரத்து நெருக்கடி குறைந்தபாடில்லை.

தொடர் கதையாகும் தொல்லை

இதுதவிர புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களின்போது வழக்கமான பஸ்களுடன், சிறப்பு பஸ்களும் இயக்கப்படுவதால் கோயம்பேடு, வடபழனி, அரும்பாக்கம், அண்ணாநகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பிக்கும் நிலை இருந்தது. இதனால் பண்டிகை காலங்களின்போது கே.கே.நகர், பூந்தமல்லி உள்பட 6 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்க வேண்டிய நிலை இருக்கிறது.

தினமும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலால் சிரமம் அடையும் நிலை தொடர்கதையாகி மக்களுக்கும், அரசுக்கு பெரும்தொல்லையாக இருந்து வந்தது.

ரூ.393 கோடி செலவில்...

நகரின் மையப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புறநகர் பஸ் நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டு திட்டமிட்டது.

ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு சி.எம்.டி.ஏ. (சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்) சார்பில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டது. பின்னர், இதற்கான பூர்வாங்கப்பணிகள் முடிவடைந்து புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது.

கொரோனாவால் தடைபட்டது

2021-ம் ஆண்டு இந்த பஸ் நிலையத்தை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டு ஆரம்பத்தில் பணிகள் வேகம் எடுத்தது. ஆனால் இந்த வேகத்துக்கு கொரோனா தொற்று பரவல் தடையாக அமைந்ததால் சில மாதங்கள் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

கொரோனா தொற்று தாக்கம் குறைந்த பின்னர் இந்த பஸ்நிலைய பணிகள் மீண்டும் வேகமெடுத்தன. தற்போது இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அமைச்சர் ஆய்வு

கடந்த 11-ந் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி அதிகாரிகளுடன் சென்று பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது அவர் 'இந்த பஸ் நிலைய கட்டுமான பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளது. செப்டம்பர் மாதம் பயணிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்' என்று அறிவித்தார்.

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் 14 நடைமேடைகளுடன் ஒரே நேரத்தில் 215 பஸ்கள் நிறுத்த வசதி உள்ளது.

கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டுள்ளது. எனவே இந்த பஸ் நிலையத்துக்கு அண்ணா அல்லது கருணாநிதி பெயர் சூட்டப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு (2023) கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்பது தி.மு.க.வினரின் கோரிக்கையாகவும், விருப்பமாகவும் இருக்கிறது.

கிளாம்பாக்கம் பஸ் நிலைய வடிவமைப்பு உதயசூரியன் போன்று காட்சி அளிக்கிறது. அதே போன்று இந்த பஸ் நிலையத்தின் நுழைவுவாயில் முகப்பும் உதயசூரியன் போன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது.

தென்மாவட்ட பஸ்கள்

கிளாம்பாக்கம் பஸ் நிலைய திறப்பு தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை மானிய கோரிக்கை விவாதத்தின்போது வெளியிடப்பட்ட வீட்டு வசதி வாரியத்தின் கொள்கை விளக்க குறிப்பில், 'கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இந்த ஆண்டு (2022) திறக்கப்படும். இந்த பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, அருப்புக்கோட்டை, கோவில்பட்டி, நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் போன்ற தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படலாம் என்று தெரிகிறது.

மக்கள் எதிர்பார்ப்பு

தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், பெருங்களத்தூர் போன்ற புறநகர் பகுதிகளில் தென் மாவட்டத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் இந்த பஸ் நிலைய திறப்பு விழாவை ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த புதிய பஸ் நிலையம் திறக்கப்பட உள்ளதால் தலைநகரில் வாழும் தென்மாவட்ட மக்களின் நீண்டகால கனவு நனவாக உள்ளது.

அதே போன்று சென்னை கோயம்பேடு, வடபழனி, அண்ணாநகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதிகளில் நீண்ட கால போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க போகிறது என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு மாவட்டங்களுக்கு...

தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட உள்ள கிளாம்பாக்கம் பஸ் நிலைய திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் வேளையில் கோவை, சேலம், ஈரோடு போன்ற மேற்கு மாவட்டங்களுக்கு பஸ்களை இயக்குவதற்காக திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் ரூ.336 கோடி செலவில் பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அண்ணா பிறந்தநாளில் திறப்பு?

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. எனவே அன்றைய தினம் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் 215 பஸ்கள் நிறுத்த வசதி

45 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக உருவாகி வரும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 14 நடைமேடைகள் அமைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 130 அரசு பஸ்கள், 85 தனியார் பஸ்கள் என மொத்தம் 215 பஸ்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பாக பயணிகளின் வசதிக்காக 20 டிக்கெட் கவுண்ட்டர்கள் வேறு அமையவுள்ளது. பஸ் பராமரிப்பு பணிமனையும் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்