'கற்றாழை மனிதன்' உருவாக்கிய 'உயிர் வேலி'

ஜெகன் பிரகலாத் பகடேவை ‘கற்றாழை மனிதன்’ என்று அழைக்கிறார்கள்.

Update: 2022-09-25 16:03 GMT

விளை நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை காட்டு விலங்குகள், கால்நடைகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக நிலத்தை சுற்றி வேலிகள் அமைப்பதுண்டு. சில இடங்களில் மின் வேலிகள் அமைக்கப்படுவதால் அதில் சிக்கி விலங்குகள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. அத்தகைய வேலி அமைப்பதற்கு அதிக செலவும் ஆகிறது.

இதற்கு மாற்று தீர்வாக கால்நடைகளுக்கும் சேதம் ஏற்படுத்தாமல், அதிக செலவும் செய்யாமல் தனது விவசாய பண்ணையை சுற்றி பிரமாண்டமாக வேலி எழுப்பி இருக்கிறார், ஜெகன் பிரகலாத் பகடே. இத்தனைக்கும் அந்த வேலியை கற்றாழைகள்தான் ஆக்கிரமித்திருக்கிறது. ஆனால் அவை பரந்து விரிந்தும், உயரமாக வளர்ந்தும் பண்ணைக்கு பாதுகாப்பு அரணாக விளங்கிக்கொண்டிருக்கின்றன. அதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஜெகன் பிரகலாத் பகடேவை 'கற்றாழை மனிதன்' என்று அழைக்கிறார்கள்.

ஆரம்பத்தில் ஜெகன் பிரகலாத் பகடேவும் முட்கம்பிகளை கொண்டுதான் வேலி அமைத்தார். அந்த வேலி காட்டு விலங்குகளிடம் இருந்து பயிர்களை ஓரளவுக்கு பாதுகாத்தாலும் பூச்சித் தாக்குதலை கட்டுப்பட்டுத்த முடியவில்லை.

பூச்சி இனங்கள் சர்வசாதாரணமாக பயிர்களுக்குள் ஊடுருவி சேதம் விளைவித்துக்கொண்டிருந்தன. அவ்வப்போது காட்டு விலங்குகளும் வேலியை தாண்டி உள்ளே புகுந்து பயிர்களை நாசம் செய்து கொண்டிருந்தன. அதை பார்த்து சோர்ந்து போனவர், வேலி அமைப்பில் மாற்றுவழி முறையை பின்பற்ற முடிவு செய்தார்.

ஜெகன் பிரகலாத் பகடேவின் பூர்வீகம் மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள கபர்வாடி புத்ருக் கிராமம். அங்குள்ள தனது விளை நிலத்தில் உயிர் வேலியை எழுப்பி இருக்கிறார். காடுகளில் வளரும் கற்றாழைகளை வேலியில் நட்டு வைத்தார். ஒவ்வொரு கற்றாழையும் சுமார் 12 அடி உயரம் வளர்ந்தது. கிளைகளை பரப்பி பரந்து விரிந்தும் வேலியாக உருமாறியது.

இதையடுத்து ஒட்டுமொத்த பண்ணையை சுற்றிலும் காட்டு கற்றாழையை கொண்டு வேலி எழுப்பினார். இப்போது அவரது 30 ஏக்கர் பண்ணையை சுற்றிலும் கற்றாழைகள் கம்பீரமாக வளர்ந்து கால்நடைகள் மற்றும் காட்டு விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்கிறது. பூச்சித் தாக்குதல்களில் இருந்தும் பயிர்களை காப்பாற்றுகிறது. மண் அரிப்பையும் தடுக்கிறது.

இந்த உயிர்வேலி 'பயோபென்சிங்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது. பண்ணை அல்லது வயல் வரப்புகளில் நடப்படும் மரங்கள் அல்லது புதர் செடிகளை இது குறிக்கும். மரங்கள், முள்வேலி, கம்பி வேலி, கற்கள் ஆகியவற்றை கொண்டு எழுப்பப்படும் வேலிகளைக் காட்டிலும் இந்த உயிர்வேலிக்கு குறைவாக செலவாகும். இதனை சுற்றுச்சூழல் நட்புறவை பேணும் ஒரு அங்கமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

"ஆரம்பத்தில் என் பண்ணை ஓரங்களில் கற்றாழையை நடத் தொடங்கியபோது என்னைப் பார்த்து பலரும் சிரித்தனர். முட்டாள் என்றும் கேலி செய்தார்கள். பைத்தியம் பிடித்தவன் என்றும் கூறினார்கள்" என்று நினைவுகூர்கிறார் பிரகலாத் பகடே.

அதனை பொருட்படுத்தாமல் தன் பண்ணையை கற்றாழைகளால் பாதுகாத்தார். இப்போது 'கற்றாழை மனிதர்' என்று அழைக்கப்படுகிறார். உயிர் வேலியின் நன்மைகள், அதற்கு ஆகும் செலவு, அவற்றின் செயல்திறன் குறித்து விவசாய கூட்டங்களில் பேசுவதற்கு பிரகலாத் பகடேவை வேளாண் அதிகாரிகள் அடிக்கடி அழைத்து செல்கிறார்கள்.

உயிர் வேலியின் சிறப்பை உணர்ந்து 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் வயல்வெளிகளைப் பாதுகாக்க கற்றாழைகளை நட்டு வைத்திருக்கிறார்கள். பிரகலாத்தின் உயிர் வேலி பற்றிய தகவல் மாநிலம் முழுவதும் பரவியதால் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அவரை சந்தித்து பேசினார்கள். தங்களுக்கு தேவையான கற்றாழைகளை எடுத்து சென்று தங்கள் நிலங்களில் நடவு செய்திருக்கிறார்கள்.

உயிர் வேலிகள் சூறாவளி காற்றை தடுக்கின்றன. கற்றாழையில் இருந்து உதிரும் இலைகள் மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்கின்றன. அதனால் விவசாயிகள் பலரும் உயிர்வேலி அமைப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

"ஆரம்பத்தில் ஒரு ஏக்கரில் முட்கம்பி வேலி அமைத்தேன். அதற்கு ரூ.40 ஆயிரம் செலவானது. என் முழு விவசாய நிலத்திற்கும் வேலி அமைக்க விரும்பினால், சொத்தையே விற்க வேண்டும் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். மாற்று தீர்வை நாடினேன். உயிர்வேலி என் செலவை குறைத்துவிட்டது" என்கிறார் பிரகலாத் பகடே.

தான் விவசாயியாக வெற்றி பெற்றதற்கும், நல்ல மகசூலுக்கும் உயிர் வேலியே காரணம் என்றும் சொல்கிறார். கடந்த ஆண்டு 33 குவிண்டால் குதிரைவாலி, 8 குவிண்டால் சோயாபீன் மற்றும் 12 குவிண்டால் பருத்தி அறுவடை செய்தார்.

உயிர் வேலி அமைத்த பிறகு முந்தைய ஆண்டுகளை விட பயிர் உற்பத்தி மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று பெருமிதம் கொள்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்