குழந்தைகள் கிரீன் டீ பருகலாமா?

கிரீன் டீ மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதால் அனைத்து தரப்பினரும் அதனை பருகுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். எனினும் குழந்தைகள் கிரீன் டீ பருகலாமா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

Update: 2022-08-11 14:04 GMT

''கிரீன் டீ இளம் வயதிலிருந்தே வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது. மற்ற பானங்களுடன் ஒப்பிடும்போது, இது ஆரோக்கியமானது. மேலும் நிறைய ஊட்டச்சத்து குணங்களை கொண்டுள்ளது. இருப்பினும் தேநீரில் உள்ள காபினின் செயல்பாட்டை பொறுத்தே குழந்தைகளை கிரீன் டீ பருக அனுமதிக்க வேண்டும்.

குறிப்பாக கிரீன் டீ பருகியவுடன் அதிக உற்சாகத்தை பெற்றுவிட்டு, சில நிமிடங்களிலேயே சோர்வடைந்துவிட்டால் அதனை பருகுவதை தவிர்த்துவிட வேண்டும். மேலும் தூக்கமின்மை, கவனமின்மை, கவனச்சிதறல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால் கிரீன் டீயை குழந்தைகளுக்கு பருகக் கொடுக்கக்கூடாது. இத்தகைய பாதிப்புகள் ஏதும் இல்லாவிட்டால் சிறிதளவு பருகக்கொடுக்கலாம். எனினும் மருத்துவ ஆலோசனை பெற்று பருகுவதுதான் சிறந்தது'' என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

கிரீன் டீயின் பொதுவான நன்மைகள்:

வாய் ஆரோக்கியம்: கிரீன் டீ பல் சிதைவைத் தடுக்க உதவுகிறது. அதிலிருக்கும் கேடசின்கள், துர்நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியா மற்றும் சல்பர் மூலக்கூறுகளுக்கு எதிராக செயல்பட்டு வாய் சுகாதாரத்தை பேண உதவும்.

காய்ச்சல்: கிரீன் டீயில் ஆன்டிவைரல் போன்ற ஏஜெண்டுகள் உள்ளன. இவை காய்ச்சல் மற்றும் பிற நோய்களிலிருந்து பாதுகாக்கும். இருப்பினும் குழந்தைகள் ஒரு கப் போதுமானது.

எலும்பு அடர்த்தி: கிரீன் டீ எலும்பு அடர்த்தியை மேம்படுத்த உதவும். கிரீன் டீயை தவறாமல் உட்கொள்வது எலும்பு அடர்த்தியை மேம்படுத்தவும், ஆஸ்டியோபோரோசிஸை தடுக்கவும் உதவும் என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

குழந்தைகளுக்கு கிரீன் டீ தரும் பக்கவிளைவுகள்:

கிரீன் டீயில் காபின் மற்றும் சர்க்கரை இருப்பதால் தூக்க சுழற்சியை பாதிக்கும். மேலும் காபின் குழந்தையின் உடல் செயல்பாடுகளையும் பாதிக்கலாம். ரத்தத்தில் போதுமான இரும்புச்சத்து இல்லாதபோது ரத்த சோகை ஏற்படுகிறது. கிரீன் டீயில் டானின் உள்ளது. இது இரும்புச்சத்து நிறைந்த மூலங்களிலிருந்து இரும்பை உறிஞ்சும். அதனால் உடலின் சக்தியை குறைக்கும். குழந்தைகளின் உடலில் இருந்து இரும்பு அதிகம் உறிஞ்சப்படும்போது பாதிப்பு அதிகரிக்கும். அதனால் கிரீன் டீயை அதிகம் பருகுவது நல்லதல்ல. குழந்தைகள் வெறும் வயிற்றிலோ அல்லது ஒரு நாளைக்கு 400 மில்லி கிராமுக்கு அதிகமாகவோ கிரீன் டீ பருகுவது வாந்திக்கு வழிவகுக்கும். பாலிபினால்கள் எனப்படும் டானின்கள் வயிற்றில் அமிலம் அதிகரிக்க வழிவகுக்கும். அதன் காரணமாக வயிற்று வலி, குமட்டல், எரிச்சல் உணர்வு மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

Tags:    

மேலும் செய்திகள்