காலையில் பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?

Update: 2023-07-21 10:17 GMT

காலையில் பழங்கள் சாப்பிடும் விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஒவ்வொரு நபருக்கும் வளர்சிதை மாற்றத்தில் மாறுபாடு நிலவும். உடல் வகையும் மாறுபடும். அதற்கேற்ப பழங்களை சாப்பிட வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு பழத்திலும் பல்வேறு நொதிகள் மற்றும் அமிலங்கள் உள்ளன. அவை குடலில் உள்ள பாக்டீரியாக்களுடன் வினைபுரியும். அதன் செயல்பாடுகளை பொறுத்து அந்த பழங்கள் நன்மை செய்யுமா? தீமை செய்யுமா? என்பது தீர்மானிக்கப்படும்.

யார் பழங்களை தவிர்க்க வேண்டும்?

அசிடிட்டி, நெஞ்செரிச்சல், சளி, இருமல், சைனஸ், ஒவ்வாமை, ஆஸ்துமா, காய்ச்சல், மூச்சுக்குழாய் அழற்சி, நீரிழிவு, உடல் பருமன் போன்ற அறிகுறிகளை கொண்டவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

யார் சாப்பிடலாம்?

மலச்சிக்கல், உலர் சருமம், வறண்ட கூந்தல், செரிமான கோளாறு, வளர்சிதை மாற்ற கோளாறு போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் காலையில் பழங்கள் சாப்பிடலாம். குடலில் உள்ள பாக்டீரியாக்களின் செயல்பாட்டை பழங்கள் மேம்படுத்தும். செரிமான செயல்பாடுகளை தூண்டும்.

எப்படி சாப்பிட வேண்டும்?

பழங்களை தனியாகத்தான் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பால் பொருட்கள், தானியங்களுடன் கலந்து சாப்பிடக்கூடாது. இறைச்சி வகைகளுடன் பழங்களை கலந்தும் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் அந்த உணவுப்பொருட்கள் நச்சுத்தன்மையுடையதாக மாறக்கூடும். உலர் பழங்களுடன் வேண்டுமானால் பழங்களை சேர்த்து சாப்பிடலாம். அவை ஒரே குடும்பத்தை சேர்ந்தவை என்பதால் பாதிப்பை ஏற்படுத்தாது.

காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

* நமது உடலில் காலை 7 மணி முதல் 11 மணிக்குள் நச்சு நீக்கும் செயல்முறை நடைபெறும். அதற்கு தேவையான ஆற்றலை பழங்கள் கொடுக்கும்.

* மற்ற உணவுப்பொருட்களுடன் ஒப்பிடுகையில் பழங்கள் எளிதில் ஜீரணமாகக்கூடியவை. அவற்றை காலையில் சாப்பிடுவது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கச் செய்யும்.

* காலையில் எழுந்த உடனே உடலுக்கு இயற்கையான சர்க்கரை தேவைப்படும். பழங்களை சாப்பிடுவது மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்