மழைக்கால முடி உதிர்வை தடுக்கலாம்
மழைக்காலம் கண்களுக்கு எந்த அளவுக்கு குளிர்ச்சி தருமோ, அந்த அளவுக்கு தலைமுடிக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். முடி உதிர்தல், வறண்டு போதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மழைக்காலத்தில் முடி உதிர்தல் 30 சதவீதம் அதிகரிக்கும் என்றும், அதற்கு ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுதான் முக்கிய காரணம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
மழைக்காலத்தில் நிலவும் ஈரப்பதம் உச்சந்தலையில் உள்ள இயற்கையான எண்ணெய் தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக உச்சந் தலையில் உள்ள முடிகள் உலர்ந்து போய்விடும். வேர்க்கால்கள் பலவீனமாகிவிடும். பயோட்டின் மற்றும் துத்தநாகம் குறைபாடும் முடி உதிர்தலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையை போக்குவதற்கு இரும்பு, துத்தநாகம் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.
முடி உதிர்தல் பிரச்சினையை சமாளிக்க மேலும் சில எளிய வழிமுறைகளை பின்பற்றலாம்.
1. வெந்தயம்: பருவமழையுடன், கருப்பை நீர்க்கட்டி (பி.சி.ஓ.டி) போன்ற ஹார்மோன் பிரச்சினையும் முடி உதிர்வுக்கு காரணமாக அமைந்தால் வெந் தயம் உபயோகிக்கலாம். அதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன. மேலும் முடிக்கு தேவையான புரதங்கள் மற்றும் போலிக் அமிலம் வெந்தயத்தில் அதிகம் உள்ளடங்கி இருக்கிறது. தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கி அதனுடன் வெந்தயத்தை பொடித்து சேர்த்து உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யலாம். சமையலிலும் வெந்தயத்தை சேர்த்துக்கொள்ளலாம்.
2. ஆலிவ் விதைகள்: ஆலிவ் விதைகளில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இது முடி உதிர்வதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், ரத்த சோகையை கட்டுப்படுத்தும் தன்மையும் கொண்டது. கீமோ சிகிச்சையின்போது ஏற்படும் முடி உதிர்தலையும் தடுக்கக்கூடியது. ஆலிவ் விதைகளை பாலுடன் ஊறவைத்து சாப்பிடலாம். நெய் மற்றும் தேங்காயுடன் கலந்து லட்டு தயார் செய்து ருசிக்கலாம்.
3. ஜாதிக்காய்: ஜாதிக்காயில் வைட்டமின் பி6, போலிக் அமிலம் மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது. இவை முடி உதிர்வை தடுக்கக்கூடியவை. மன அழுத்தத்தை குறைக்கும் தன்மையும் கொண்டவை. மனஅழுத்தம் தான் முடி உதிர்வு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. அத்தகைய பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் பாலில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடி சேர்த்து இரவில் பருகலாம்.
முடி உதிர்வு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் மழைக்காலத்தில் நெய், மஞ்சள், தயிர் ஆகியவற்றை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.