இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை தவிர்ப்பது எப்படி?
வயது அதிகரிக்கும்போது பல்வேறு மாற்றங்களை உடல் எதிர்கொள்ளும். மனதும் கூட மாற்றத்திற்கு தன்னை தயார் படுத்திக்கொள்ளும். ஆனால் பலர் இளமை காலத்திலேயே முன்கூட்டியே வயதான தோற்றத்திற்கு மாறிவிடுகிறார்கள்.
மரபியல் காரணங்கள், சூரியக்கதிர்களின் ஆதிக்கம், புகைப் பிடித்தல் போன்றவை அவற்றுக்கு காரணமாக அமையலாம். எனினும் சரும பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் முன்கூட்டியே முதுமை தோற்றம் எட்டிப்பார்ப்பதை தடுத்துவிடலாம். ஆரம்ப நிலையிலேயே ஒருசில அறிகுறிகளை கவனித்து அவற்றை கட்டுப்படுத்தினால் போதுமானது.
சரும வறட்சி மற்றும் சரும அரிப்பு போன்றவை முன்கூட்டியே வயதான தோற்றத்துக்கு வழிவகுக்கும் பொதுவான காரணங்கள். சருமத்தில் இறந்த செல்கள் அகற்றப்படாமல் நீண்ட நாட்கள் படர்ந்திருக்கும்போது இந்த பிரச்சினை எழும். அப்படி சருமத்தின் மேற்பரப்பில் இறந்த செல்கள் நீக்கப்படாமல் இருக்கும்போது சருமத்தின் பளபளப்பு தன்மையும் மங்கி போய்விடும்.
பெரும்பாலும் 50 வயதை எட்டுபவர்களின் சருமத்தில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும். முகம் மட்டுமின்றி கை, கால்களிலும் இந்த புள்ளிகள் தென்படும். சூரிய ஒளிக்கதிர்கள் பல ஆண்டுகளாக சருமத்தை பாதிக்கும்போது இந்த பிரச்சினை ஏற்படும்.
நடக்கும்போது வழக்கமாக எடுத்து வைக்கும் நடையின் வேகம் குறைந்து விடுவதும் முன்கூட்டியே வயதான தோற்றத்திற்கான அறிகுறியாக இருக்கலாம். மெதுவாக நடக்கும் நடுத்தர வயதினர் முன்கூட்டியே வயதான தோற்றத்திற்கு மாற வாய்ப்புள்ளதாக ஆய்வுகளும் கூறுகின்றன.
வயதாகும்போது சரும வடிவத்தை பராமரிக்க உதவும் புரத பொருளானகொலாஜன் உற்பத்தி குறையும். இதனால் சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் மற்றும் தசையில் தளர்ச்சி ஏற்படும். தூக்கமின்மை, மன அழுத்தம், வாழ்நாள் முழுவதும் சூரிய ஒளி படும்படியான இடத்தில் வேலை பார்ப்பது போன்ற காரணங்களாலும் முன்கூட்டியே முதுமை ஏற்படலாம்.
மற்ற உடல் பாகங்களை விட கைகள்தான் மிக விரைவாக வயதான தோற்றத்திற்கு மாறுகின்றன. ஏனெனில் அவைதான் சூரியனின் பாதிப்புக்கு அதிகம் ஆளாகின்றன. தொடர்ச்சியாக சருமத்தில் புற ஊதா கதிர்கள் தாக்கும்போது சருமத்தில் உள்ள எலாஸ்டின் என்னும் புரதப் பொருள் சேதமடையக்கூடும். இதன் விளைவாக சுருக்கங்கள், கையில் நிறமாற்றம் ஏற்படும். இத்தகைய அறிகுறிகளை கவனத்தில் கொண்டு சரும பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.