துணிக் கழிவுகளில் தயாராகும் கலக்கல் உடைகள்...!
துணி தைக்கும் நிறுவனங்கள் வெட்டித்தள்ளி வெளியேற்றிய கழிவுத் துணிகளை பயன்படுத்தி புதிய வடிவிலான பைகள், வித்தியாசமான உடைகள், ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து தள்ளுகிறார் பெனோரிட்டா தேஷ்.
உலகம் முழுவதும் பல வகையான கழிவுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கழிவுப் பொருட்களை மேலாண்மை செய்ய முடியாமல் உலக நாடுகள் தவித்துக் கொண்டிருக்கின்றன. மின்னணுக் கழிவுகள், ஆர்கானிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள், மட்கும் கழிவுகள், மட்காத கழிவுகள் என வகை, வகையான கழிவுகள் நாள் தோறும் உருவாகி உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
பல நிறுவனங்கள் இந்த கழிவுகளை பயன்படுத்தி மறுசுழற்சி பொருட்களை உற்பத்தி செய்கின்றன. சில பகுதிகளில் கழிவு பிளாஸ்டிக் கூழ்களைக் கொண்டு சாலைகள் அமைக்கப்படுகின்றன. இருந்தாலும், 'வேஸ்ட் மேனேஜ்மெண்ட்' என்பது இன்னும் தேவையான விஷயமாகவே இருந்து வருகிறது. இதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஆங்காங்கே கழிவுப் பொருட்களை பயன்படுத்தி மக்களுக்கு தேவையான பொருட்களை உருவாக்கும் சிறு, சிறுதொழில் கூடங்களும் இந்தியா முழுவதும் பரவலாக இருந்து வருகிறது.
இனி தேவையில்லை என்று குப்பையில் தூக்கி வீசப்படும் பொருட்களைக் கொண்டு வித்தியாசமாக புதிய பொருட்களை தயாரித்து மார்க்கெட் செய்தால் என்ன என்று தோன்றியது கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரை சேர்ந்த பெண் ஒருவருக்கு... அந்த யோசனையை துணிச்சலாக செயல்படுத்தி உழைத்த அவருக்கு பலன் கைமேல் கிடைத்து வருகிறது.
வெற்றிக்காக வித்தியாசமாக யோசித்த அவர்தான் பெனோரிட்டா தேஷ். இவர் ஒடிசாவின் புவனேஸ்வரை பூர்வீகமாக கொண்டவர். சிறுவயதில் இருந்தே, பேஷன் துறையில் ஆர்வமாய் இருந்தவர், துணி தைக்கும் நிறுவனங்கள் வெட்டித்தள்ளி வெளியேற்றிய கழிவுத் துணிகளை பயன்படுத்தி புதிய வடிவிலான பைகள், வித்தியாசமான உடைகள், ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து தள்ளுகிறார்.
இவர் தயாரிக்கும் பொருட்களை விற்பதற்காக இந்தியாவின் பிரபல நகரங்களில் பிரத்யேக கடைகளையும் நடத்தி வருகிறார். ஆன்லைனிலும் விற்கிறார்.
28 வயதே ஆன அவருக்கு சிறு வயதிலேயே படுக்கை விரிப்புகளில் டிசைன் செய்வது பிடித்தமான விஷயமாக இருந்துள்ளது. பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளை புரிந்து கொண்டதில் இருந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்த்து வந்த அவர், மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள், கண்ணாடியால் செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்.
''எனக்கான உடைகளை தைப்பதற்கு கூட சிறிய அளவு துணிகளை வாங்கி ஒட்டுப்போட்டு வித்தியாசமான வடிவமைப்பில் உடைகளை உருவாக்குவேன். ஏனென்றால் துணி வீணாகக் கூடாது என்பதற்காகத்தான். உணவிலும் தேவையான அளவு உணவைத்தான் வாங்கி சாப்பிடுவேன். ஒருமுறை பழைய கழிவுத்துணிகளின் குப்பையால் நாய்க்குட்டி ஒன்று மூச்சுத் திணறிக்கொண்டிருப்பதை பார்த்தேன். இந்த துணிக்கழிவுகளை பயன்படுத்தி வித்தியாசமான பொருட்களை செய்து விற்பனை செய்தால் என்ன என்று தோன்றியது. அன்று தொடங்கியதுதான் இந்த தொழில். துண்டு, துண்டாக சேகரிக்கப்பட்ட துணிகளை ஒன்றாகத் தைத்து பல்வேறு வகையான புதிய உடைகளை உருவாக்கும் இந்த ஒட்டுத்தொழில்நுட்பம் எனக்கு வருவாய் ஈட்டித்தர ஆரம்பித்தது. நாளாக, நாளாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது'' என்கிறார், பெனோரிட்டா.
புதுப்புது டிசைனிங் தொடர்பான ஆய்வறிக்கைக்காக பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர் ஏராளமான நெசவாளர்களை சந்தித்துப் பேசினார். அவர்கள் கைத்தறித் தொழிலை கைவிடுவதற்கான காரணங்கள், மார்க்கெட்டிங் பிரச்சினைகள் குறித்து தெரிந்து கொண்ட அவர், 2017-ல் சொந்த நிறுவனத்தை தொடங்கி, மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்தார். தொடர்ந்து கைத்தறி நெசவாளர்களின் பொருட்களையும் சந்தைப்படுத்தினார்.
''உலகில் இரண்டாவது மிகப்பெரிய சுற்றுச்சூழல் மாசுபாட்டினை உருவாக்கும் தொழில், பேஷன் தொழில்தான்'' என கூறும் அவர் கார்மென்ட், பொட்டிக்ஸ், டெய்லரிங் கடைகளுக்கு சென்று வீணாக வெட்டி எறியப்பட்ட துணிகளை சேகரிக்க தொடங்கியிருக்கிறார்.
''கழிவுகளை வைத்து என்ன செய்யப்போகிறாய்'' என சிலர் கேட்டார்கள். `இந்த கழிவுதான் என் எதிர்காலத்திற்கான நம்பிக்கை' என நான் அவர்களிடம் கூறி வெட்டி எறியப்பட்ட துணி மூட்டைகளை எடுத்து வருவேன். இருந்தாலும், துண்டான துணிகளை ஒட்டி தைப்பதற்கான டெய்லர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.பொதுவாகவே ஆல்ட்ரேஷன் செய்யவே டெய்லர்கள் தயங்குவார்கள். அப்படி இருக்கும்போது, துண்டான துணிகளை ஒட்டி புதிய வடிவமைப்புடன் தைப்பதற்கான டெய்லர்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனாலும் தனியாகவே தொழிலை தொடங்கினேன். என்னுடைய வித்தியாசமான நோக்கத்தை பார்த்த டெய்லர்கள் சிலர் என்னுடன் இணைந்தார்கள். சில மெஷின்களையும், டெய்லர்களையும் கொண்டு தற்போது உடைகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் வேலை நடந்து வருகிறது'' என்கிறார்.
அண்மையில் பெங்களூருவில் இவர் நடத்திய கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு சென்றுள்ளனர். புதிய சிந்தனையால், கழிவுத் துணிகளுக்கு மறு அவதாரம் கொடுத்து பொருளாதாரத்தில் ஏற்றம் கண்டு வரும் பெனோரிட்டா தேஷின் உழைப்பு, புதிய சிந்தனை கொண்ட இளம் தலைமுறைக்கு பாடமாகும்.