ஹீரோ பேஷன் எக்ஸ்டெக்
ஹீரோ மோட்டோ கார்ப் தயாரிப்புகளில் ஸ்பிளெண்டருக்கு அடுத்தபடியாக பேஷன் மாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இதில் தற்போது எக்ஸ்டெக் மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு வேரியன்ட்களில் இது வந்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.74,590 முதல் ஆரம்பமாகிறது.
இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம் பெற்றுள்ளது. புளூடூத் இணைப்பு வசதி மற்றும் எல்.இ.டி. முகப்பு விளக்கு ஆகியன புதிய சேர்க்கைகளாகும். இது முழுமையாக டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாற்றப் பட்டுள்ளது. இதனால் எஸ்.எஸ்.எஸ். மற்றும் தொலைபேசி அழைப்பு அறிவு றுத்தல் உள்ளிட்டவற்றை உணர்த்தும். நகர சாலைகளில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு தூரம் ஓடியது என்பதை வாகன ஓட்டுனரே தெரிந்து கொள்ளும் வசதி, பெட்ரோல் குறைவதை எச்சரிக்கும் வசதி, வாகனத்தை சர்வீசுக்கு விட வேண்டிய தேதி உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன.
ஸ்மார்ட்போனின் பேட்டரி அளவைக் கூட இது உணர்த்தும். பேட்டரி தீரும் நிலை உருவானால் அதை வாகனத்திலேயே சார்ஜ் செய்து கொள்ள வசதியாக யு.எஸ்.பி. போர்ட் உள்ளது. சைடு ஸ்டாண்ட் இன்டிகேட்டர் உள்ளது. சைடு ஸ்டாண்டு போட்டிருந்தால் வாகனம் ஸ்டார்ட் ஆகாது. ஒருங்கிணைந்த பிரேக்கிங் வசதியோடு டிஸ்க் பிரேக்குகளைக் கொண்டதாக வந்துள்ளது.
இது 110 சி.சி. திறன் கொண்டது. 9.02 ஹெச்.பி. திறனையும், 9.89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை யும் வெளிப்படுத்தக் கூடியது. ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின், நான்கு கியர்களைக் கொண்டதாக வந்துள்ளது. 9 ஹெச்.பி. திறனை 7,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 9.79 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையை 5 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தக் கூடியது. இதில் ஹீரோ நிறுவனத்தின் ஐ 3.எஸ். ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எரிபொருள் சிக்கனத்துக்கு உதவி யாக உள்ளது.