சிறுநீரகங்களை சேதப்படுத்தும் பழக்கவழக்கங்கள்

உடலில் சேர்ந்திருக்கும் தேவையில்லாத கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் மேற்கொள்கின்றன. உடலில் நீர், தாது, உப்பு போன்றவற்றை சம நிலையில் பராமரிப்பதும் சிறுநீரகத்தின் முக்கியமான வேலையாக அமைந்திருக்கின்றன.

Update: 2022-08-30 15:37 GMT

அன்றாடம் பின்பற்றும் ஒருசில பழக்கவழக்கங்கள் சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய பழக்கவழக்கங்கள் குறித்தும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம்.

போதிய அளவு தண்ணீர் பருகாதது:

தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகாதது நீரிழப்பை ஏற்படுத்துவதோடு சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கு வழிவகுத்துவிடும். உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவது சிறுநீரகத்தின் முக்கியமான பொறுப்பு என்பதால் அதன் செயல்பாட்டுக்கு போதுமான அளவு தண்ணீர் தேவைப்படும். ஏதேனும் குறைபாடு காரணமாக சிறுநீரகங்களால் அனைத்து கழிவுகளையும் வெளியேற்ற முடியாமல் போனால் சிறுநீரக கற்கள் உருவாகிவிடும். எனவே, தினமும் குறைந்த பட்சம் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

மாத்திரைகள் அடிக்கடி எடுத்துக்கொள்வது:

தலைவலி உள்பட உடலில் ஏற்படும் லேசான வலிகளுக்கு கூட பலர் தாங்களாகவே மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளும் பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அப்படி அடிக்கடி வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது சிறுநீரகங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். சிறுநீரக புற்றுநோய் ஏற்பட கூட வாய்ப்புண்டு.

மது, புகைப்பழக்கத்தை பின்பற்றுவது:

மது, புகைப்பழக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு மோசமானது. இது கல்லீரலை மட்டுமல்ல, சிறுநீரகத்தையும் சேதப்படுத்தும். தொடர்ந்து மது அருந்துவது நாள்பட்ட சிறுநீரக நோயை உருவாக்கும்.

சரிவிகித உணவு சாப்பிடுவது:

வைட்டமின் டி, வைட்டமின் பி6 உள்ளிட்ட சில வைட்டமின்களின் குறைபாடு சிறுநீரக நோய்களை ஏற்படுத்தும். எனவே, வைட்டமின் பி6 நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியமானது. கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு மற்றும் சால்மன் மீன் ஆகியவற்றில் வைட்டமின் பி6 நிறைந்திருக்கும். வைட்டமின் டி சத்துக்களை இயற்கையான முறையில் பெறுவதற்கு தினமும் காலையில் 15 முதல் 20 நிமிடங்கள் வெயிலில் நின்றால் போதுமானது.

போதிய உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது:

தினமும் போதுமான அளவு உடல் உழைப்போ, உடல் இயக்க செயல்பாடுகளோ இல்லாவிட்டால் அதுவும் சிறுநீரகங்களின் செயல்பாடுகளை பாதிக்கும். தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்ற உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுவது சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. நாள்பட்ட சிறுநீரக நோய், சிறுநீரக செயலிழப்பு போன்ற சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்களும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் இதய நோய்களை தடுக்கலாம்.

உப்பு அதிகம் சேர்ப்பது:

உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்வது சிறுநீரகங்களுக்கு ஆரோக்கியமாக இருக்காது. உப்பில் உள்ள சோடியம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். சிறுநீரகங்களையும் நேரடியாக பாதிக்கும். எனவே உணவில் உப்பை அதிகம் சேர்க்காமல், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருள்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை சுவையை அதிகரிக்க செய்வதோடு உப்பின் வீரியத்தையும் ஈடு செய்துவிடும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்வது:

பர்கர், பீட்சா, சிப்ஸ், பொரித்த உணவுகள் போன்றவற்றை விரும்பி சாப்பிடுபவராக இருந்தால் உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமானது. ஏனெனில், துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பு (சோடியம்) மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால் அவை ரத்த அழுத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இறுதியில் சிறுநீரகத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறு தரும். அதன் காரணமாக சிறுநீரகங்களால் திரவக் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் போகலாம். அதே நிலை தொடர்ந்தால் சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாகிவிடும்.

Tags:    

மேலும் செய்திகள்