20 நிமிடத்தில் தயாராகும் எலெக்ட்ரிக் சைக்கிள்

சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை பல நாடுகளும் ஊக்குவித்துக்கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.;

Update:2022-09-09 21:49 IST

 

எனினும் அவற்றின் விலை அதிகமாக இருப்பதால் அனைத்து தரப்பினரும் வாங்க முடியாத நிலை இருக்கிறது. சாமானிய மக்களும் எலெக்ரிக் வாகன பயண அனுபவத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சாதாரண சைக்கிளை எலெக்ட்ரிக் சைக்கிளாக மாற்றும் பணியை முன்னெடுத்திருக்கிறார், குர்சவுரப் சிங். சைக்கிளில் சுலபமாக பொருத்தும் வகையில் கையடக்க 'கிட்' ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்.

பேட்டரியில் இயங்கும் இது சைக்கிளை மின்சார வாகனமாக மாற்றக்கூடியது. இந்த சாதனத்தை எந்த வகையான சைக்கிளிலும் இணைக்கலாம். 20 நிமிடத்திலேயே அந்த சைக்கிள் எலெக்ட்ரிக் சைக்கிளாக மாறிவிடும்.

குர்சவுரப்பின் பூர்வீகம் ஹரியானா மாநிலத்திலுள்ள ஹிசார். தனது கிராமத்தில் நிலவிய பிரச்சினையே இந்த கிட்டை வடிவமைக்க தூண்டியது என்கிறார்.

''எனது கிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் நீண்ட தூரம் சென்றுதான் பள்ளிப் படிப்பை தொடர வேண்டியிருக்கிறது. தூரத்தை காரணம் காட்டி பல மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்ல மறுத்தனர். கொரோனா காலகட்டத்தில் கிராமத்தினர் அனைவருமே சிரமப்பட்டார்கள். எங்கு சென்றாலும் குறைந்தபட்சம் 4 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டியிருந்தது. சைக்கிள்தான் பெரும்பாலானவர்களின் வாகனமாக இருக்கிறது.

பின் தங்கிய கிராமமாக இருந்தாலும் எங்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் சோலார் பேனல் உள்ளது. அதனால் அவர்களுக்கு சூரிய சக்தி மின்சாரம், எலெக்ட்ரிக் பேட்டரி பற்றிய புரிதல் இருக்கிறது'' என்பவர் சைக்கிளை பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றும் யோசனையை முன்வைத்திருக்கிறார். நீண்ட ஆய்வுக்கு பிறகு அதனை செயல்படுத்தியும் விட்டார்.

இந்த கிட்டை சைக்கிள் அல்லது ரிக்‌ஷாவுக்கு பயன்படுத்தலாம். இது மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 கிலோ மீட்டர் தூரம் செல்லலாம். எளிதில் தீப்பிடிக்காதது. நீர்புகா தன்மையும் கொண்டது.

''வட இந்தியாவின் கிராமப்புற பகுதிகளிலும் மின்சார இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். பெட்ரோலுக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த வாகனத்தை எளிதாக ஓட்டலாம். இந்திய மக்கள் தொகையில் சுமார் 58 சதவீதம் பேர் சைக்கிள் மற்றும் சைக்கிள் ரிக்‌ஷாக்களில் பயணிக்கின்றனர்.

எலெக்ரிக் வாகனங்கள் பணக்காரர்களுக்கானது என்ற எண்ணத்தை மாற்றி சாமானியர்களும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது என் நோக்கம். இந்தக் கருவி மூலம் 8 கோடி இந்தியர்களின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்துவேன்'' என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.

சைக்கிளை எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றும் கிட் செயல்படும் விதம் குறித்து குர்சவுரப் விவரிக்கும் வீடியோ சமீபத்தில் வைரலானது. யூடியூப்பில் அவருடைய வீடியோவை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

"எங்கள் வீடியோ வைரலாகும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக, அதை உருவாக்கினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது'' என்பவர் தனது 'கிட்'டை நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்