கிராமத்திற்காக கிணறு தோண்டிய விவசாயி கங்காபாய் பவார்

குஜராத் விவசாயி ஒருவர் தனது கிராமத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்காக 2 ஆண்டுகளாக தன்னந்தனியே போராடி 32 அடியில் கிணறு தோண்டியுள்ளார்.

Update: 2022-07-17 16:25 GMT

குஜராத்தின் டாங் பகுதியை சேர்ந்த அந்த விவசாயிக்கு 60 வயதாகிறது. அவரது பெயர் கங்காபாய் பவார். வழக்கமாக மழை காலங்களில் டாங் பகுதியில் அதிக மழை பெய்யும்.

ஆனால் அது மலைப்பாங்கான பகுதி என்பதாலும், பாறைகள் அதிகம் சூழ்ந்திருப்பதாலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதில்லை. அதனால் கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும். மழை காலம் தொடங்கினாலும் சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை தொடர்ந்து கொண்டிருக்கும். குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கும்.

கிணறு தோண்டுவதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறையை சமாளித்துவிடலாம் என்று கங்காபாய் பவார் எண்ணினார். தனது விருப்பத்தை கிராம பஞ்சாயத்திடம் கூறி உதவி கேட்டார். ஆனால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. காலதாமதமாகிக்கொண்டே இருந்ததால் தானே கிணறு தோண்ட தொடங்கினார். இரண்டு ஆண்டுகளாக பணியில் ஈடுபட்டவர் சமீபத்தில் நிறைவு செய்தார். சுமார் 32 அடி ஆழத்தில் அந்த கிணறு உருவாக்கப்பட்டுள்ளது. அவரது கடின உழைப்பை கிராம மக்கள் பாராட்டுகிறார்கள். பஞ்சாயத்து நிர்வாகமும் கங்காபாய் பவாரை பாராட்டி கவுரவித்துள்ளது.

கிணறு தோண்டியதற்கான காரணம் பற்றி கூறுகையில், ''ஒவ்வொரு பருவமழையின்போதும் கிட்டத்தட்ட 125 மி.மீ. மழை பதிவாகும். ஆனால், மழைநீர் அனைத்தும் கடலில் கலந்துவிடும். இங்குள்ள கிராம மக்கள் அன்றாட பயன்பாட்டுக்கு தண்ணீர் இன்றி சிரமப்பட வேண்டியுள்ளது. பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். தண்ணீர் பற்றாக்குறையால் வாழ்வாதாரத்திற்கும் நெருக்கடி ஏற்படுகிறது. எனது பங்களிப்பாக கிணறு தோன்டும் பணியில் ஈடுபட்டேன்'' என்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்