கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு

பழங்காலத்தில் மன்னர்கள், முக்கியமான கட்டளைகளைப் பிறப்பித்தபோதும், நில தானம் அல்லது அறக்கொடைகள் வழங்கியபோதும் அவை பற்றிய விவரத்தைப் பனை ஓலைகளில் எழுதி வைத்தார்கள்.

Update: 2022-08-28 11:59 GMT

பின்னர், கோவில் சுவர்களிலும், நினைவுச் சின்னங்களிலும் கல்வெட்டாகப் பதிவு செய்தார்கள். முதலாம் நூற்றாண்டில் இருந்து, அதுபோன்ற தகவல்களை செப்பேடுகளில் எழுதி வைக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மன்னர்கள் எழுதிய அப்படிப்பட்ட செப்பேடுகள், கால வெள்ளத்தின் காரணமாகவோ, பாதுகாத்து வைக்க வேண்டும் என்பதாலோ மண்ணுக்குள் போய்விட்டன.

தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் மூலம், 250-க்கும் அதிகமான செப்பேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 19 செப்பேடுகள் சோழ மன்னர்கள் காலத்தில் வெளியிடப்பட்டவை ஆகும்.

அன்பில் செப்பேடு, சென்னை அருங்காட்சியகச் செப்பேடு, பெரிய மற்றும் சிறிய லெய்டன் செப்பேடுகள், திருவாலங்காட்டுச் செப்பேடு, கரந்தைச் செப்பேடு, திருஇந்தளூர்ச் செப்பேடு (90கிலோ எடை கொண்டது) உள்ளிட்ட செப்பேடுகள் சோழர்கால வரலாற்றை நமக்கு ஆதாரபூர்வமாகச் சொல்கின்றன.

மன்னர் ராஜராஜன் காலத்திற்கு முற்பட்ட செப்பேடுகளில், தொடக்க வாசகங்களாக சோழ மன்னர்களின் பரம்பரை பட்டியல், சூரியக் கடவுள் என்பதில் தொடங்கி, அந்தச் செப்பேட்டைத் தயாரித்த மன்னரின் பெயர் வரை விஸ்தாரமாகக் கொடுக்கப்பட்டு இருக்கும். சோழப் பரம்பரை பற்றிய தகவல்களுக்குப் பிறகே அந்தச் செப்பேட்டை வெளியிட்ட மன்னர், யாருக்கு எவற்றைத் தானமாக வழங்கினார் என்ற விவரம் இடம் பெறும்.

மன்னர் ராஜராஜன் இந்த முறையை மாற்றி அமைத்தார்.

அவர், தனது செப்பேடுகளின் முதல் பாகத்தில், தான் போர்க்களத்தில் வென்ற நாடுகளின் பட்டியலைக் கொடுத்தார். மெய்க்கீர்த்தி எனப்படும் அந்தப் பட்டியல், இனிமையான தமிழ் மொழியில் அகவற்பாவால் ஆக்கப்பட்டு இருந்தது. அந்த மெய்க்கீர்த்தியைத் தொடர்ந்து, அவர் எந்த நிலத்தை யாருக்குத் தானம் செய்தார் என்பது பற்றிய தகவல் இடம்பெற்றது.

ராஜராஜனுக்குப் பின்னர் வந்த அனைத்துச் சோழ மன்னர்களும் இதே முறையைக் கடைப்பிடித்தனர். மன்னர் ராஜராஜன் தொடங்கி வைத்த இந்த முறை காரணமாக ஒவ்வொரு சோழ மன்னரும் எந்தப் போர்க்களத்தில் யாரை வெற்றி கொண்டார் என்ற வரலாற்றுத் தகவல்கள் இப்போது நமக்குக் கிடைத்து இருக்கின்றன.

ராஜராஜனின் மெய்க்கீர்த்தியின்படி, அவர் கைப்பற்றியவை, காந்தளூர்ச் சாலை, வேங்கை நாடு, கங்கைபாடி, தடிகைபாடி, நுளம்பபாடி, குடமலை நாடு, கொல்லம், கலிங்கம், சிங்களரின் ஈழ மண்டலம், இரட்டைபாடி ஏழரை இலக்கம், முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம் ஆகியவை என்று தெரிகிறது.

இந்த இடங்களில் கிடைத்த வெற்றிகளுக்கு எல்லாம் மூல காரணம், ராஜராஜனின் படைக்குத் தலைமை தாங்கிச் சென்ற அவரது மகன் ராஜேந்திரன் ஆவார்.

எனவே, ராஜேந்திரனின் திறமையை அறிந்து கொள்வதற்காக ராஜராஜன் நடத்திய இந்தப் போர்கள் பற்றி விரிவாகக் காணலாம்.

மன்னர் ராஜராஜன், கி.பி.985-ம் ஆண்டு அரியணை ஏறினார். மூன்று ஆண்டுகள் தன்னை ஆட்சியில் நிலை நிறுத்தி, படைபலத்தை பெருக்கிக் கொண்ட பிறகு, முதல் படையெடுப்பாக கி.பி.988-ம் ஆண்டு, சேர நாட்டின் மீதும், பாண்டிய தேசம் மீதும் ஒரே சமயத்தில் தாக்குதலை நடத்தி வெற்றி பெற்றார். இந்தப் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் இருந்தது.

ராஜராஜன் ஆட்சிக்கு வருவதற்கு 80 ஆண்டுகளுக்கு முன்பு, சோழ அரசராக இருந்தவர் முதலாம் பராந்தக சோழர் (கி.பி.907-955). அப்போது பாண்டிய நாட்டில் ஆட்சி செய்து கொண்டு இருந்தவர், மூன்றாம் ராஜசிம்ம பாண்டியன்.

சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தமாக இருந்தது. அப்படிப்பட்ட நேரத்தில், மதுரையைக் கைப்பற்றும் நோக்கத்துடன் பராந்தக சோழர், பாண்டிய நாடு மீது படையெடுத்துச் சென்றார். சோழர்களின் படையைக் கண்டு அஞ்சிய ராஜசிம்ம பாண்டியன், இந்தப் போரில் உதவும்படி தனது நட்பு நாடான இலங்கையிடம் கேட்டுக் கொண்டார்.

அதன்பேரில், இலங்கை அரசர் ஐந்தாம் காசிபர், தனது படைத் தளபதியான சக்கசேனாபதி தலைமையில் பெரும் படையை பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.

வெள்ளூர் என்ற இடத்தில் கடுமையான போர் நடைபெற்றது. இந்தப் போரில் பாண்டியர் - சிங்களர் கூட்டுப் படைகள் தோல்வி அடைந்தன.

இதனைத் தொடர்ந்து பல முறை நடைபெற்ற சோழர் - பாண்டியர் யுத்தங்களின்போதும் சிங்களப் படையினர், பாண்டிய மன்னருக்கு உதவும் வகையில் போர்களில் கலந்து கொண்டனர். அனைத்துப் போர்களிலும் பாண்டியர்-சிங்களர் படைகள் தோல்வியைத் தழுவின.

கி.பி.923-ம் ஆண்டு மீண்டும் ஒரு போர் நடந்தது. இந்தப் போரின்போது, பாண்டிய மன்னர் ராஜசிம்ம பாண்டியன் வழக்கம்போல இலங்கைக்குச் சென்று, சோழப் படையை எதிர்க்க உதவி செய்யும்படி, அப்போது இலங்கை மன்னராக இருந்த நான்காம் உதயன் என்பவரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். பல முறை சந்தித்த தோல்விகளால் துவண்டு இருந்த இலங்கை மன்னர், இந்தப் போரில் பாண்டியனுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டார்.

இதனால் ராஜசிம்ம பாண்டியன், சோழரை எதிர்க்க வழி தெரியாமல் தப்பி ஓடினார். அப்போது அவரிடம், பாண்டியர்களின் குலச் சின்னங்களான மணிமகுடம், இந்திர ஆரம் ஆகியவை இருந்தன.

பாண்டிய மன்னர்கள் முடிசூட்டு விழாவின்போது இந்த மணிமகுடத்தை அணிந்துதான் அரியணை ஏறுவார்கள்.

மதுரைக் கடவுளான சோமசுந்தரர், இந்த மணிமகுடத்தைப் பாண்டியர்களுக்கு வழங்கியதாகவும், இந்திர சபைக்குச் சென்று இருந்தபோது பாண்டிய மன்னரிடம் முத்துக்கள் பதிக்கப்பட்ட இந்திர ஆரத்தை தேவேந்திரன் வழங்கியதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.

அவற்றுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், அவற்றை இலங்கை அரசரிடம் அடைக்கலமாகக் கொடுத்துவிட்டு, ராஜசிம்ம பாண்டியன் தனது தாயார் வானவன்மாதேவியின் பிறந்த ஊரான சேர நாட்டிற்குச் சென்றுவிட்டார்.

பாண்டிய நாட்டை முழுமையாக வென்று தனது குடையின் கீழ்க் கொண்டுவந்த சோழ மன்னர் பராந்தகன், மதுரையில் பாண்டிய அரசராக முடிசூடிக் கொள்ள, பாண்டிய குலச் சின்னமான மணிமகுடத்தைத் தேடினார். அப்போது அந்த மணிமகுடம், இலங்கை அரசரிடம் அடைக்கலப் பொருளாக இருப்பதை அறிந்து, அதனை மீட்டுவர மன்னர் பராந்தகன் தனது படையை இலங்கைக்கு அனுப்பினார்.

சோழர் படை வருவதை அறிந்த உதயன், பாண்டியனின் மணிமகுடம், இந்திர ஆரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, இலங்கையின் தென்கிழக்கில் உள்ள ரோகணா என்ற காட்டுப் பகுதிக்குச் சென்றுவிட்டார். காடுகளுக்குள் சென்று ஒளிந்து கொண்ட அவரை, சோழர் படையினரால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன் பிறகு பாண்டியரின் மணிமகுடத்தையும், இந்திர ஆரத்தையும் கைப்பற்ற பராந்தகன் பல முறை முயன்றும், அவரது அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

சோழ தேசத்தில் பராந்தகனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கண்டராதித்த சோழர், அரிஞ்சய சோழர், இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழர், உத்தம சோழர் ஆகியோரது ஆட்சிக் காலங்களிலும், இலங்கையில் இருந்த பாண்டியரின் மணிமகுடம், இந்திர ஆரம் ஆகியவற்றைச் சோழர்களால் கைப்பற்ற முடியவில்லை.

இலங்கை மன்னரிடம் இருக்கும் இந்த அரிய பொருட்களை மீட்பது மட்டுமே பாண்டிய தேசத்தை முழுமையாக வென்றதற்கு அடையாளம் என்பதால், அவற்றைக் கைப்பற்றுவது வரை தனக்கு நிம்மதி இல்லை என்று மன்னர் ராஜராஜன் கூறினார்.

கி.பி.988-ம் ஆண்டு, சேர நாட்டை ஆட்சி செய்து கொண்டு இருந்தவர், பாஸ்கர ரவிவர்மன் திருவடி (கி.பி.978- 1036). அந்த மன்னருடன் பேச்சு நடத்துவதற்காக தனது தூதரை ராஜராஜன் அனுப்பி வைத்து இருந்தார்.

சேர மன்னர் பாஸ்கர ரவிவர்மன், சோழ நாட்டுத் தூதரை தனது அரசவையில் அவமானப்படுத்தியதோடு அவரைக் கைது செய்து உதகை என்ற இடத்தில் சிறை வைத்துவிட்டார்.

உதகை என்பது, அந்தக் காலத்தில் திருவாங்கூர் ராஜ்யத்தில் இருந்த நகரம் ஆகும். தற்போது கல்குளம் தாலுகாவில், நாகர்கோவிலுக்கு வட மேற்கே உள்ள நகரம்தான் அன்றைய உதகை.

தனது தூதரை சேர மன்னர் சிறை வைத்துவிட்டார் என்பதை அறிந்த மன்னர் ராஜராஜன் கொதித்து எழுந்தார். உடனடியாகப் படையைத் திரட்டி, சேர நாடு மீது போர் தொடுத்தார்.

கி.பி.988-ம் ஆண்டு, இளவரசர் மதுராந்தகன் (ராஜேந்திரன்) தலைமையில் சோழப் படை, சேர நாடு நோக்கி ஆவேசமாகச் சென்றது.

தஞ்சையில் இருந்து தரை வழியாகச் செல்லும் படை, பாண்டிய நாட்டைக் கடந்துதான் சேர நாட்டை அடைய முடியும்.

அவ்வாறு அந்தப் படை, பாண்டியர்களின் தேசத்திற்குள் நுழைந்தபோது, அங்கே ஆட்சி செய்து கொண்டு இருந்த மன்னர் அமரபுஜங்கன், கடல்போல வந்த சோழப் படைகளைத் தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது நடந்த போரில், சோழப் படை வெற்றிகண்டது. பாண்டிய மன்னரை தோற்கடித்த கையோடு, சோழப் படை சேர நாட்டிற்கு விரைந்தது.

அப்போது நடைபெற்றது, வரலாற்றில் அதிகமாகப் போற்றப்படுவதும், ஆய்வாளர்கள் அத்தனை பேரையும் குழப்பத்தில் ஆழ்த்தி இருப்பதுமான காந்தளூர்ச்சாலைப் போர் ஆகும்.

(வரலாறு வளரும்)

வியப்பான வினோதம்

மன்னர் ராஜராஜனுக்கு, ராஜேந்திரன் ஒரே மகன் என்பதாகத்தான் பல வரலாற்று நூல்களில் எழுதப்பட்டு இருக்கிறது.

ஆனால் ராஜேந்திரனுக்கு, உடன் பிறந்த தம்பி ஒருவர் இருந்தார் என்று தெரியவருகிறது.

சென்னை தாம்பரம் அருகில் மணிமங்கலம் என்ற ஊரில் உள்ள ராஜேந்திரனின் மகனான இரண்டாம் ராஜேந்திரனின் கல்வெட்டில், "எனது சிறிய தாதையாகிய (சிறிய தந்தை) எறி வலி கங்கை கொண்டான்..." என்று கூறப்பட்டு இருக்கிறது.

அப்படி என்றால், எறி வலி கங்கை கொண்டான் என்பவர், ராஜேந்திரனின் தம்பி என்று ஆகிறது. இவர், அரையன் ராஜராஜன் என்று அழைக்கப்பட்டதாகவும் சில நூல்களில் எழுதப்பட்டு இருக்கிறது.

இவர், சோழர்களின் கங்கைப் படையெடுப்பில் கலந்து கொண்ட 44 தளபதிகளில் ஒருவர் என்று கூறப்பட்டாலும், வரலாற்றில் அவர் வேறு எங்குமே முன்னெடுக்கப்படாமல் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது ஏன் என்பது வினோதமான வினாவாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்