சாம்பியன்களை உருவாக்கும் 'முன்னாள் சாம்பியன்'..!

‘கிக் பாக்ஸிங்’ - உதை குத்துச்சண்டை மீது ஆர்வமாக இருந்த ஒருவரை, அந்த கலை தேசிய மற்றும் ஆசிய சாம்பியனாக மாற்றி, இன்று இந்திய, தேசிய கிக் பாக்ஸிங் அணிக்கு தலைமை பயிற்சியாளராக மாற்றியிருக்கிறது.

Update: 2023-03-19 08:29 GMT

அதுபற்றிய சுவாரசிய பதிவைத்தான், இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.சுரேஷ் பாபு, சென்னை கொளத்தூரை சேர்ந்தவர். இவருக்கு 7 வயதில் இருந்தே கிக் பாக்ஸிங் (உதை குத்துச்சண்டை) மீது ஆர்வம் அதிகம். அதனால் பள்ளிப் பருவத்தில் இருந்தே, பல்வேறு பயிற்சியாளர்களிடம் கிக் பாக்ஸிங் கலையை கற்றுக்கொண்டார்.

2002-ம் ஆண்டில், சென்னையில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில், கலந்து கொண்டு தங்கப் பதக்கமும் வென்றார். அன்று தொடங்கிய கிக் பாக்ஸிங் வேட்கை இன்றும் இவரை ஆட்கொண்டிருக்கிறது.

''எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் சரி, அதில் எவ்வளவு விரைவாக பயிற்சி பெற தொடங்குகிறோமோ, அந்தளவிற்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். ஆனால் பிளஸ்-1 பருவத்தில்தான், நான் கிக் பாக்ஸிங் கலையை முறையாக கற்கத் தொடங்கினேன்.

'போட்டிகளில் வெல்வது கடினம், இருப்பினும் தொடர்ந்து பயிற்சி செய்'... என்பதுதான் எனக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட முதல் பாடம். இந்த வார்த்தைகள்தான் என்னை இரவு பகலாக பயிற்சி பெற வைத்தன'' என்று நிதானமாக பேச ஆரம்பிக்கும் சுரேஷ் பாபு, கிக் பாக்ஸிங் கற்க தொடங்கிய சில வருடங்களிலேயே, வெற்றியின் சுவையை ருசித்துவிட்டார்.

ஆம்..! சென்னையில் நடந்த மாநில அளவிலான போட்டியில், 2 ரவுண்டில் சகபோட்டியாளரை 'நாக்-அவுட்' செய்து வெற்றிக்கணக்கை தொடங்கினார். அந்த போட்டியில் கிடைத்த வெற்றியும், தன்னம்பிக்கையும் சுரேஷ் பாபுவை துணிச்சலாக நடைபோட வைத்தது.

''2003, 2004 மற்றும் 2005 ஆகிய மூன்று ஆண்டுகளில் மாநில அளவில் நடத்தப்பட்ட கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில், தொடர்ச்சியாக தங்கம் வென்றேன். இதன் மூலம் கிடைத்த தேசிய அளவிலான போட்டி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்றேன்.

2006-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில், ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தேன்'' என்றவர், பெற்றோரின் கட்டாயத்தினால் வாழ்வாதாரத்திற்கான நிரந்தர வேலை தேடிக்கொள்ள வலியுறுத்தப்பட்டார்.

அதனால் 2007-ம் ஆண்டுடன், கிக்பாக்ஸிங் பயிற்சிக்கு முழுக்கு போட்டுவிட்டு, ஐ.டி. துறையில் பணியாற்ற தொடங்கினார். ஆனால் சுரேஷ் பாபுவால், வெகுகாலம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதனால் 2010-ம் ஆண்டு, 'ஸ்பிட் பயர்' அகாடமி மூலம் கிக் பாக்ஸிங் பயிற்சியை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.

''வெறும் 2 மாணவர்களோடுதான் என்னுடைய பயிற்சி வாழ்க்கையை தொடங்கினேன். பி.எஸ்.என்.எல். குடியிருப்பு குழந்தைகளுக்காக இலவச பயிற்சி முகாம் நடத்தியபோது 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிந்தது. அவர்களில், சிறந்த 11 மாணவர்களை ஒடிசாவில் நடந்த தேசிய அளவிலான போட்டிகளுக்கு அழைத்து சென்றேன். அந்த போட்டியில், ஒரு தங்கம் மற்றும் 4 வெள்ளி பதக்கங்களை, என்னுடைய மாணவர்கள் வென்றனர்.

நானும் பயிற்சியாளர் என்பதை தாண்டி, மாநில-தேசிய கிக் பாக்ஸிங் போட்டிகளில் கள நடுவராகவும், மதிப்பெண் வழங்கும் நடுவராகவும் செயல்பட்டு நட்பு வட்டாரத்தை உருவாக்கினேன்.

என்னுடைய மாணவர்கள், மாநில-தேசிய போட்டிகளில் வெற்றி பெறுவது தொடர்கதையாகி போனதால், 2014-ம் ஆண்டு தமிழக அணிக்கு என்னை பயிற்சியாளராக்கினர். இந்த நிகழ்வு என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது'' என்றவர், தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத்திற்கு பயிற்சியாளர் மற்றும் பொதுசெயலாளராக பொறுப்பேற்றதும், சில அதிரடி பயிற்சிகளுக்கு வழிவகுத்து தேசிய அளவிலான போட்டிகளில் தமிழக அணியை 2-ம் இடத்திற்கு முன்னேற வழிகாட்டினார். இவரது திறமையான பயிற்சிதான், தமிழக கிக் பாக்ஸிங் வீரர்-வீராங்கனைகளுக்கான பிரத்யேக இடத்தை, தேசிய அணியில் பெற்று தந்திருக்கிறது.

''தமிழக அணிக்கான பயிற்சியாளர் என்பதைதாண்டி, சர்வதேச போட்டிகளுக்கான பயிற்சியாளராக, கள நடுவராக... என்னுடைய திறமைகளை வளர்த்து கொண்டே இருந்தேன். அதேசமயம், என் தலைமையிலான தமிழக கிக் பாக்ஸிங் அணி, பல வெற்றிகளை பதிவு செய்து கொண்டே இருந்தது. அதன் காரணமாக, 2018-ம் ஆண்டு, இந்திய தேசிய அணிக்கான நான்கு பேர் அடங்கிய பயிற்சியாளர் குழுவில், நானும் ஒருவனாக அங்கம் வகித்தேன். அந்தசமயம், உலக கோப்பை போட்டிகள் நடந்தன. அதில் நம் இந்திய அணி, 52 பதக்கங்களை வென்றது. குறிப்பாக, நான் பயிற்சியாளராக அங்கம் வகித்த தமிழக அணியில் இருந்து, வசீகரன் மற்றும் தனிஷ்க் அருண் ஆகிய மாணவர்கள் சிறப்பாக விளையாடி தங்கம் மற்றும் வெண்கலம் வென்றனர். சர்வதேச தரத்திலான போட்டிகளில் தமிழ்நாட்டு வீரர்கள் பதக்கம் வெல்வது, அதுவே முதல்முறை என்பதால் அது தேசிய கிக்பாக்ஸிங் உலகில் பெரும் பேசுப்பொருளாக மாறி, தேசிய அணிக்கான முதன்மை பயிற்சியாளர் வாய்ப்பை எனக்கு பெற்றுத்தந்தது. ஆம்...! 2019-ம் ஆண்டில் இருந்து, இன்று வரை இந்திய கிக்பாக்ஸிங் அணிக்கும், தமிழக அணிக்கும் முதன்மை பயிற்சியாளராக பணியாற்றுகிறேன்'' என்று பெருமிதப்படும் சுரேஷ் பாபு, தேசிய பயிற்சியாளராக பல புதுமைகளை செய்திருக்கிறார்.

''13 வருடங்களாக தமிழக அணிக்கு பயிற்சி அளித்து வருகிறேன். இதற்கான பலன் வெற்றி பதக்கங்களாக கிடைக்கிறது. ஆம்..! இத்தாலியில் நடந்த சர்வதேச அளவிலான உலகக் கோப்பை போட்டிகளில், முதல்முறையாக தமிழக வீரர் வசீகரன் வெண்கலம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். மேலும் மற்றொரு சர்வதேச போட்டியில் (துருக்கி) தமிழக வீராங்கனை நிவேதா ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்றார். ஜூனியர் பிரிவு விளையாட்டில், தமிழக வீராங்கனை சுப்ரஜா ஒரு தங்கம், ஒரு வெள்ளி பதக்கமும், வசீகரன் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலமும் வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தனர். அந்த சர்வதேச போட்டியில், இந்தியாவிற்கு கிடைத்த பதக்கம் அதுமட்டுமே. தமிழக அணி என்பதை தாண்டி, என்னுடைய பயிற்சியினாலும், இந்திய தேசிய அணியும் பல வெற்றிகளை, பல பதக்கங்களை வென்றிருக்கிறது'' என்று மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்பவர், சர்வதேச அளவிலான பல பயிற்சி முகாம்களை தேசிய அளவில் நடத்தி இருக்கிறார். அதிலும் குறிப்பாக, சமீபத்தில் சென்னை கேளம்பாக்கத்தில் நடத்தப்பட்ட 10 நாட்கள் பயிற்சி முகாம் சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது.

''சர்வதேச தரத்திலான பயிற்சியாளர்களை அழைத்து வந்து, தேசிய அளவிலான பயிற்சி முகாமை 10 நாட்கள் நடத்தியது இதுவே முதல்முறை. இந்த பயிற்சி முகாமில், சர்வதேச பயிற்சியாளர்களின் கிக் பாக்ஸிங் பயிற்சிகளுடன், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் முறைகள், ஊக்க மருந்து சர்ச்சைகளில் சிக்காமல் இருக்கும் விழிப்புணர்வுகள், நடுவர்களுக்கான பயிற்சிகள்... என பல விஷயங்களை, 300-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகளுக்கு கற்றுக்கொடுத்தோம். இது, சர்வதேச போட்டிகளுக்கு சிறப்பான வழிகாட்டுதலாக இருக்கும்'' என்றவர், பள்ளி விளையாட்டுகளில், கிக் பாக்ஸிங் விளையாட்டை இணைத்ததை பெருமையாக குறிப்பிடுகிறார்.

''2019-ம் ஆண்டு முதல் கிக் பாக்ஸிங், பள்ளி கல்வி துறை விளையாட்டுகளில் ஒன்றாக மாறிவிட்டது. இதனால் கிக் பாக்ஸிங் ஆர்வத்தை, இளம் வயதிலேயே பள்ளி மாணவர்களிடம் விதைக்க முடியும். அப்போதுதான், கிக் பாக்ஸிங் உலகில் தமிழர்களின் கொடி பறக்கும்'' என்றவர், மாநில-தேசிய பயிற்சியாளராக செயல்படுவதுடன், கிக் பாக்ஸிங் கூட்டமைப்பின் பல முக்கிய பொறுப்புகளில் அங்கம் வகிக்கிறார். அதனால் அவரது சிந்தனைகள், உடனுக்குடனே, கிக்பாக்ஸிங் உலகில் பிரதிபலிக்கின்றன.

* மன நிறைவான தருணங்களைப் பற்றி கூறுங்கள்?

சர்வதேச போட்டியில் தமிழக வீரர்கள் வென்றது சிறப்பான தருணம். மேலும், ஜூனியர் பிரிவிலும், தமிழக வீரர்-வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி தேசிய அணியில் நிறைய தமிழர்கள் நீங்கா இடம்பிடித்திருப்பதை, மன நிறைவான செய்தியாக குறிப்பிட விரும்புகிறேன்.

* உங்களுடைய ஆசை என்ன?

2028-ம் ஆண்டு, கிக் பாக்ஸிங் விளையாட்டு, ஒலிம்பிக் போட்டிகளில் இணைந்துவிடும். அதனால், முதல் ஒலிம்பிக் போட்டியில் இருந்தே, நம் இந்தியர்கள் குறிப்பாக தமிழக கிக் பாக்ஸிங் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி, ஒலிம்பிக் பதக்கம் வென்று வர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. தமிழக மற்றும் தேசிய பயிற்சியாளராக, அதையே நான் குறிவைத்திருக்கிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்