ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு... வங்கி கணக்கு தொடங்க அவசியமானவை

ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அடிப்படை மற்றும் பதிவு சம்பந்தப்பட்ட தகவல்களை வழங்கிய மேக்ஸிடோம் சுப்பிரமணி, இந்த வாரம் ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு வங்கி கணக்கு தொடங்குவது தொடர்பாக விளக்குகிறார்.

Update: 2023-01-03 15:42 GMT

உங்களுடைய புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்காக வணிக வங்கிக் கணக்கு தொடங்குவது என்பது, உங்களுடைய வணிகத்திற்கு ஒரு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைத் தருவதோடு மட்டும் அல்லாமல், உங்களுடைய வணிகம் தொடர்பான வரி செலுத்துதல்களுக்கும் மிக உதவியாக இருக்கும். கடந்த இரு வாரங்களாக, ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அடிப்படை மற்றும் பதிவு சம்பந்தப்பட்ட தகவல்களை வழங்கிய மேக்ஸிடோம் சுப்பிரமணி, இந்த வாரம் ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு வங்கி கணக்கு தொடங்குவது தொடர்பாக விளக்குகிறார்.

தனிநபர் சார்ந்த வரவு செலவுகளையும், வணிகம் சார்ந்த வரவு செலவுகளையும் பிரித்துத் தனித்தனியாக நிர்வகிக்க வேண்டும் என்றால் நம்முடைய நிறுவனத்திற்கென அல்லது வணிகத்திற்கெனத் தனியாக ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்குவது நன்மை தரும். இல்லையென்றால் ஒருவருடைய தனிப்பட்ட நிதிசார் நடவடிக்கைகளும் வணிகம் தொடர்பான நிதிசார் நடவடிக்கைகளும் ஒன்று கலந்து குழப்பத்தை விளைவித்து விடும். இதுபற்றி, மேக்ஸிடோம் சுப்பிரமணி விளக்குகிறார்...

* வங்கியைத் தேர்வு செய்தல்

இந்தியாவில் அரசு வங்கிகளுக்கு இணையாகத் தனியார் வங்கிகளும் வளர்ந்து வருகின்றன. வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக ஒவ்வொரு வங்கியும் பல்வேறு வகையான சேவைகளையும், சலுகைகளையும் வழங்கி வருகின்றன. ஏற்கனவே நாம், தனிநபர் கணக்கு (Personal A/C) வைத்துள்ள வங்கியினுடைய செயல்பாடுகளைப் பொறுத்து அதே வங்கியில் வணிகக் கணக்கைத் தொடங்கலாம். அல்லது பிற வங்கியிலும் தொடங்கலாம்.

கணக்கைத் தொடங்குவதற்கு முன்னால் வங்கிகள் அளிக்கும் சேவைகள், அதற்காக வங்கிகள் வசூலிக்கின்ற கட்டணங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.

* கடன் தொகை

கடன் தொகைக்கான உச்சவரம்பு மற்றும் கட்டணங்கள், கணக்கில் உள்ள இருப்புக்கும் அதிகமாகச் செலவு செய்வதற்கான (line of credit) உச்சவரம்புத் தொகை, கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தும் பொழுது வசூலிக்கப்படும் காலதாமதக்கட்டணம் மற்றும் வட்டி போன்றவற்றின் அடிப்படையிலும் நமக்குத் தோதாக அமைகின்ற வங்கியைத் தேர்வு செய்யலாம். நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலமாகவே வணிக வங்கிக் கணக்கைத் தொடங்கும் வசதிகளைச் சில வங்கிகள் வழங்குகின்றன. குறிப்பிட்ட அளவு இருப்புத் தொகையை ஒவ்வொரு மாதமும் பராமரித்து வந்தால் சில வங்கிகள் மாதக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கின்றன.

* ஆவணங்கள்

வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கு வங்கிக்குச் செல்வதற்கு முன்னால், தேவையான ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். வரி கட்டுவதற்கான அடையாள எண் (Tax ID), வணிக நிறுவனத்திற்கு ஒருவர் மட்டுமே உரிமையாளராக இருந்தால் அவருடைய சமூகப் பாதுகாப்பு எண் (social security number) அதாவது ஆதார் அட்டை எண் அல்லது அது போன்ற பிற அடையாள எண் மற்றும் நிறுவனத்தைப் பதிவு செய்தமைக்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள்தான் பொதுவாகத் தேவைப்படும்.

வணிக நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளரின் பெயரில் வாங்கப்பட்ட வணிக உரிமைச் சான்றிதழின் (business license) நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். வணிக வங்கிக் கணக்கின் செயல்பாடுகள் வணிக வங்கிக் கணக்கின் வகை, கணக்குத் தொடங்கும் வங்கி, வணிக நிறுவனத்தின் பெயர் ஆகியவற்றை நிர்ணயம் செய்த பிறகு, நீங்கள் தொடங்கிய வணிக வங்கிக் கணக்கின் மூலமாக வங்கி நடவடிக்கைகளைத் தொடரலாம்.

உங்களுடைய வணிக வங்கிக்கணக்கோடு ஸ்வைப்பிங் இயந்திரம் கிடைக்கும். இணையம் வழியான வங்கிச்சேவையைப் பெறுதல் மின்-வணிக முறையிலான (e-commerce) வர்த்தகங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.

எனவே நம்முடைய வணிக வங்கிக்கணக்கை ஆன்லைன் மூலமாக இயக்கும் வசதியைப் பெற்றுக் கொள்வது நல்லது. பே-பால் (PayPal) போன்ற இணைய வழிப் பணப்பரிமாற்ற நிறுவனங்கள் மூலமாக மின்னல் வேகத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு பணத்தைச் செலுத்தவும், குறிப்பிட்ட கணக்கிலிருந்து பணத்தைப் பெறவும் முடியும்.

ஸ்கொயர் ரிஜிஸ்ட்டர் (Square Register) போன்ற பயன்பாட்டுச் செயலியின் துணையோடு ஆண்ட்ராய்டு மொபைல், ஐபேட், டேப்லெட் வழியாகப் பணம் செலுத்துதல் மற்றும் பெறுதல் செயல்பாடுகளோடு நிறுவனத்தின் விற்பனை அறிக்கை, விற்பனையின் போக்கு ஆகியவற்றையும் கண்காணிக்க முடியும்.

வணிக நிறுவனத்தை நடத்தும் ஒருவர், பின்வரும் விஷயங்களை எப்பொழுதும் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.

1. செலுத்த வேண்டிய வரி

2. வணிகத்தில் புழங்கும் நிதி ஆதாரம்

3. மின்சாரம் மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் பராமரிப்பு

4. வியாபாரம் தொடர்பான செலவுகள்

5. பணியாளர் ஊதியம்

6. லாபம்

இவற்றோடு நேர்மையாக இருந்தால்… வெற்றியும் மகிழ்ச்சியும் உறுதி.


தேவையானவை

உங்களுடைய தனிப்பட்ட பெயரோடு தொடர்பில்லாத ஒரு பெயரை உங்களுடைய வணிக நிறுவனத்திற்குத் தேர்வு செய்வதாக இருந்தால், அப்பெயர் ஏற்கனவே பயன்பாட்டில் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பேடண்ட் அண்ட் டிரேட் மார்க் (Patent and Trademark) இணைய தளத்திற்குச் சென்று நாம் தேர்ந்தெடுத்திருக்கின்ற பெயரின் இருப்பு நிலை குறித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். பிறகு அந்தப் பெயரில் வணிக வங்கிக்கணக்கைத் தொடங்கலாம்.

வணிக நிறுவனத்தின் பெயரைப் பதிவு செய்வதற்கு உரிய அலுவலகத்தை அணுக வேண்டும். நம்முடைய நிறுவனம் அமைந்துள்ள பகுதிக்கு ஏற்பக் கட்டணம் வசூலிக்கப்படும். 1000 ரூபாய்க்கும் குறைவாகவே கட்டணம் இருக்கும். உங்களுடைய வணிக நிறுவனத்தின் பெயரை வேறு யாரும் பயன்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்கெனத் தனியாகக் காப்புரிமைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதற்கான கட்டணம் 2500 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்