ரஷியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் குளிக்கும்போது தலைமுடியில் கண்டிஷனர்கள் பயன்படுத்த வேண்டாம்! அமெரிக்கா எச்சரிக்கை!

அணுஉலை விபத்து அல்லது அணு ஆயுத தாக்குதல் ஏற்பட்டால், அப்போது கண்டிஷனர் பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்தாக அமையும்.

Update: 2022-09-23 14:06 GMT

வாஷிங்டன்,

ஷாம்பு மற்றும் கண்டிஷனர்கள் உங்கள் தலைமுடியைப் பாதுகாக்கின்றன. ஆனால் அணுஉலை விபத்து அல்லது அணு ஆயுத தாக்குதல் ஏற்பட்டால், அப்போது கண்டிஷனர் பயன்படுத்தினால் நம் உயிருக்கு ஆபத்தாக அமையும்.

அணு ஆயுத தாக்குதலுக்குப் பிறகு கண்டிஷனர்களை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதை இங்கே காணலாம்.

அணு ஆயுத தாக்குதல் ஏற்பட்டால் மக்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை அமெரிக்கா வெளியிட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, அணு ஆயுத தாக்குதல் நடந்த அன்றைய நாளில் கண்டிஷனர்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

ஒரு அணு ஆயுத குண்டு வெடித்தால், அதிலிருந்து கதிரியக்க தூசிகள் மேகங்களை போல காற்றில் பல தூரம் பரவுகிறது. இந்த கதிரியக்க துகள்கள் உடலில் செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தலாம்.

கதிர்வீச்சைத் தவிர்க்க மக்கள் செங்கல் அல்லது கான்கிரீட் கட்டிடத்திற்குள் தஞ்சமடைந்து கொள்ளவேண்டும்.மேலும் மக்கள் தங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.

அத்தகைய சமயத்தில், சீக்கிரம் குளிக்க வேண்டும் என்று மக்களை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த அறிவுரை தான் மிக முக்கியமானது. ஷாம்புவை பயன்படுத்துங்கள், ஏனெனில் இது உங்கள் தலைமுடியில் ஒட்டிக்கொண்டு உள்ள எண்ணெய் மற்றும் எந்தவொரு அழுக்கு துகள்களையும் நீக்கிச் செல்ல வடிவமைக்கப்பட்டுள்ளது.

கதிர்வீச்சு உடலை தாக்காமல் தடுக்க, உங்கள் தலைமுடியில் கண்டிஷனரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். கண்டிஷனர் உங்கள் தலைமுடிக்கும் கதிரியக்கப் பொருட்களுக்கும் இடையில் ஒரு பசை போல் செயல்படும். அப்போது கதிரியக்க தூசிகள் முடியில் ஒட்டிக்கொள்ளும்.

முடி இழைகள் நெகட்டிவ் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள், அதேசமயம் கண்டிஷனர்கள் பாசிட்டிவ் சார்ஜ் கொண்ட துகள்கள். இவை இரண்டும் ஒன்றோடொன்று ஈர்க்கும்.அவை கதிரியக்க தூசிக்கு பசையாக செயல்படுகின்றன.

உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம் என்று ரஷியா மிரட்டியுள்ளதை தொடர்ந்து, அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களுக்கு இந்த பாதுகாப்பு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்