வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் படிப்பு - கணிப்பு அறிவியல்

வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கும் ஒரு அருமையான படிப்பு - கணிப்பு அறிவியல்;

Update:2023-02-12 19:12 IST

உங்களுடைய பகுப்பாய்வு திறன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்து ஒரு புதுமையான வணிகத் தீர்வுகளை கொடுப்பதில் உங்களுக்கு ஆர்வமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கும் ஒரு அருமையான படிப்பு - கணிப்பு அறிவியல் (Actuarial Science). இதனை 'காப்பீட்டு கணிப்பு அறிவியல்' என்றும் குறிப்பிடுவர்.

கணிப்பு அறிவியல் (Actuarial Science) என்பது ஒரு வணிகத்தொழிலில் உள்ள எதிர்கால மற்றும் நிச்சயமில்லாத நிதி ஆபத்துகளை கணிதம் மற்றும் புள்ளிவிவரங்கள் மூலம் கண்டறிந்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவும் ஒரு உன்னதமான தொழில் படிப்பு ஆகும். அதிக ஊதியம் கிடைக்கும் படிப்புகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறைய தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் பல்வேறு நிதி பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கின்றன. இதுபோன்ற எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத நிதி ஆபத்துகளைக் கையாள உலகம் முழுவதும் கணிப்பு அறிவியலுக்கான தேவை அதிகமாகியுள்ளது.

மேலும், கொரோனா பெருந்தொற்றால் நிறைய மக்கள் இறந்ததால் ஆயுள் காப்பீடு திட்டத்தின் மேல் மக்கள் கவனம் பெருவாரியாக திரும்பியுள்ளது. இதனால், ஆயுள் காப்பீடு வழங்கும் நிறுவனங்களிலும் கணிப்பு அறிவியல் படித்த மாணவ, மாணவிகளுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

கணிப்பு அறிவியலாளர் பணி என்ன?

கணிப்பு அறிவியலாளர் வெவ்வேறு விதமான தரவு மற்றும் தகவல்களை கணக்கிட்டு, எதிர்பார்க்காத மற்றும் விரும்பத்தகாத தோல்விகளுக்கான சாத்தியக்கூறுகளை தகர்த்தெடுக்க தேவையான அறிவியல் பூர்வமான அறிவுரைகளை வழங்குவார். நிதி ஆபத்து உள்ள அனைத்து துறைகளிலும் அவருக்கான வேலைவாய்ப்பு உள்ளது. உதாரணமாக, தனியார் தொழில் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், அரசு நிதி துறை.

நிதி கொள்கைகளை வடிவமைத்தல் மற்றும் போதுமான நிதி இருக்கிறதா என்பதை கண்காணித்தல்.

காப்பீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை தீர்மானித்தல்.

இழப்புகளை குறைக்க காப்பீடு அபாயங்களை கண்காணித்தல்.

பல்வேறு நோய்த்தொற்று ஏற்படுவதை கணித்து, காப்பீடு கொள்கைகளை உருவாக்கும்போது இந்த அபாயங்களை இணைத்துக்கொள்ளுதல்.

நிறுவனத்தின் நிதி திட்டமிடுதலுக்கான அபாயத்தை மதிப்பிடுதல்.

சேர்க்கை நடைமுறை

இந்தியாவில் இந்தக் கல்வி கற்பிக்கப்படும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கணிப்பு அறிவியல் (Actuarial Science) சார்ந்த இளநிலை பட்டப்படிப்பிற்கு இன்ஸ்டிட்யூட் ஆப் ஆக்சுவாரீஸ் ஆப் இந்தியா என்ற அமைப்பு மூலம் ACET (Actuarial Common Entrance Test) என்ற பெயரில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு இந்தியாவின் சிறந்த கல்லூரியில் கணிப்பு அறிவியல் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். மேலும், Institute of Actuaries (IAI) என்ற ஒருங்கிணைந்த அமைப்பில் உறுப்பினராகவும் இருக்க முடியும்.

பொது நுழைவுத்தேர்வு

கணிப்பு அறிவியல் கல்விக்கான பொது நுழைவுத்தேர்வு (ACET) ஒவ்வொரு வருடமும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு முறை நடத்தப்படுகிறது.

10 மற்றும் 12-ம் வகுப்பில் கணித பாடம் படித்தவர்கள் இந்த நுழைவுத்தேர்வு எழுத தகுதியுள்ளவர்கள் ஆவர்.

இந்தியாவில் கணிப்பு அறிவியல் கற்பிக்கும் சில கல்லூரிகள்:

1) இந்தியன் ஸ்டாடிஸ்டிக்கல் இன்ஸ்டிட்யூட், கொல்கத்தா, 2) சேவியர் கல்லூரி, மும்பை, 3) மும்பை பல்கலைக்கழகம், மும்பை, 4) டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி, 5) லயோலா கல்லூரி, சென்னை, 6) மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி, சென்னை, 7) நேஷனல் இன்சூரன்ஸ் அகாடமி, புனே, 8) இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, டெல்லி, மும்பை, கான்பூர், சென்னை மற்றும் ரூர்கீ. 9) பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி.

இந்த படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் சேரும் முன்பு அந்தக்கல்லூரி அரசு அங்கீகாரம் பெற்று இந்த படிப்புகளை வழங்குகிறதா மற்றும் படிப்பதற்கான வசதிகள் போன்றவற்றை மாணவர்கள் விசாரித்து தெரிந்து கொள்வது அவசியம்.

முக்கிய தேதிகள்

இந்த ஆண்டு நடைபெறும் கணிப்பு அறிவியல் கல்வி பொது நுழைவுத்தேர்வுக்கான (ACET) முக்கிய தேதிகள் விவரம் வருமாறு:

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17-2-2023, மாலை 3 மணிக்குள்.

நுழைவு தேர்வு நாள்: 18-3-2023, (காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை)

தேர்வு முடிவு அறிவிப்பு நாள்: 28-3-2023

மேலும் கூடுதல் விவரங்களை https://actuariesindia.org என்ற இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் கணிப்பு அறிவியல் பின்வரும் துறைகளில் செயல்படுகிறது

ஆயுள் காப்பீடு

பொது காப்பீடு

மருத்துவ காப்பீடு

மறுகாப்பீட்டு நிறுவனங்கள்

ஓய்வூதிய நிதி ஆலோசனை அமைப்பு

முதலீடுகள்

அரசாங்க நிதி மேலாண்மை

கல்விக் குழுமங்கள்

நிறுவன இடர் மேலாண்மை

Tags:    

மேலும் செய்திகள்