விவசாயம் கற்றுக்கொடுக்கும் யூ டியூப் தம்பதி
வெளிநாட்டு வாழ்க்கையை நிறைவு செய்துகொண்டு இந்தியா திரும்பிய ஓர் இளம் தம்பதி விவசாயம் மற்றும் பால் பண்ணை தொழிலை தொடங்கியது. கூடவே தங்களது விவசாயப் பணிகள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையை வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்யும் வழக்கத்தையும் பின்பற்றியது.
இந்த தம்பதியர் மற்றவர்களைப் போல் பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடன் யூடியூப்பிற்குள் நுழையவில்லை. தங்களது அனுபவ நினைவுகளை சேமிக்கும் வீடியோ தளமாகவே யூடியூப்பை கருதினர். இந்த வீடியோக்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்ததால், தற்போது மாதம் ஐந்து லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்கள். டிஜிட்டல் வழியே விவசாய புரட்சியை முன்னெடுத்திருக்கும் அந்த இளம் தம்பதியரின் பெயர்: ராம்டே-பார்தி.
ராம்டே, குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருடைய சகோதரி லண்டனின் வசிக்கிறார். 2006-ம் ஆண்டு லண்டனுக்கு சென்ற ராம்டே, அங்கு இரண்டு ஆண்டுகள் வசித்துவிட்டு சொந்த ஊர் திரும்பினார். பின்னர் பார்தி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு மீண்டும் லண்டனுக்கு புறப்பட்டார். அங்கு நல்ல சம்பளத்தில் வேலையிலும் சேர்ந்தார். இதற்கிடையே, மனைவி பார்தி தனது படிப்பை லண்டனின் முடித்துவிட்டு அவரும் அங்கேயே பணிபுரிய தொடங்கினார். அங்கு ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர்.
எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில் ராம்டேவுக்கு சொந்த ஊர் திரும்பும் ஆசை ஏற்பட்டது. அதன்படி குடும்பத்தினருடன் கடந்த 2016-ம் ஆண்டு தாயகம் திரும்பினார். பாரம்பரிய விவசாய குடும்ப பின்னணியை கொண்டவர் என்பதால் அதையே தனது தொழில் வாய்ப்பாக கருதினார். விவசாயம் செய்ய தொடங்கியதோடு நான்கு எருமை மாடுகளுடன் பால் பண்ணையையும் நிர்வகித்தார்.
கூடவே இரண்டு குதிரைகளையும் வளர்த்தார். இதற்கிடையே, தினந்தோறும் தாங்கள் ஈடுபடும் விவசாயப் பணிகள் மற்றும் அன்றாட நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவிட்டனர். அவர்கள் பதிவேற்றம் செய்த வீடியோ ஒன்று ஒரே நாளில் நான்கு லட்சம் பார்வைகளை பெற்று சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றது.
பின்னர் தினந்தோறும் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டன.
கிராமப்புற வாழ்க்கை முறைகளை அப்படியே பிரதிபலித்த அந்த வீடியோக்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இதனால் அதனை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. தற்போது அந்த யூடியூப் சேனலுக்கு 7 லட்சத்து 40 ஆயிரம் பின் தொடர்பாளர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி மேலும் இரண்டு சேனல்களை இந்த இளம் தம்பதியர் நடத்தி வருகின்றனர். இவற்றின் மூலம் மாதம் ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறமுடிகிறது.
"யூடிப்யூபில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் வீடியோக்களை பதிவேற்றம் செய்யவில்லை. அனுபவ நினைவுகள் நிறைந்த வீடியோக்களை சேமித்து வைப்பதற்காக வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றம் செய்தேன். விவசாயம்தான் எங்களது முக்கிய தொழில். யூடியூப்பை பொழுதுபோக்குக்காக செய்து வருகிறோம். நாங்கள் வீடியோக்களை அதிகம் எடிட்டிங் செய்வது கிடையாது. பதிவு செய்யும் வீடியோவை அப்படியே பதிவேற்றம் செய்துவிடுவோம். வீடியோக்களில் கிராமப்புறத்தின் சூழல் யதார்த்தமாக வெளிப்படுவதால் பார்வையாளர்கள் ரசிக்கின்றனர்'' என்கிறார், ராம்டே.