வயதானவர்கள் அதிகம் பேர் வசிக்கும் நாடுகள்
வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக கூறப்படும் நிலையில், முதியோர்கள் அதிகம் வசிக்கும் முக்கிய நாடுகள் சிலவற்றை பார்ப்போம்.
பிறப்பு விகிதம் குறைவது, விவாகரத்துக்கள் அதிகரிப்பது, ஆயுட்காலம் கூடுவது போன்ற காரணங்களால் உலகமெங்கும் மக்கள் தொகையில் மிகப்பெரிய மாறுபாடு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் மூத்தகுடிமக்கள் அதிகம்பேர் வசிக்கிறார்கள். சீனாவில்தான் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக கூறப்படும் நிலையில், முதியோர்கள் அதிகம் வசிக்கும் முக்கிய நாடுகள் சிலவற்றை பார்ப்போம்.
பிரான்ஸ்
ஐரோப்பாவின் மற்ற பகுதிகளைப் போலவே, பிரான்சின் மக்கள் தொகையில் வயதானவர்களின் எண்ணிக்கை ஏறுமுகமாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் சுமார் 20.3 சதவீதம் பேர் மூத்தகுடிமக்கள். அங்கு வசிக்கும் மக்களின் சராசரி ஆயுட்காலம் 1900-ல் சுமார் 47 வயதாக இருந்தது.
இன்று 80 வயது வரை அதிகரித்துள்ளது. 1946-ம் ஆண்டு முதல் 1974-ம் ஆண்டு வரை குழந்தை பிறப்பு விகிதம் ஏற்றத்துடன் இருந்துள்ளது. அதன் பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. 75 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 2070-ல் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரீஸ்
கிரேக்கத்தின் மக்கள் தொகையில் சுமார் 22 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். எனினும் 2011-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் முதியவர்களின் எண்ணிக்கை 3.7 சதவீதம் குறைந்துள்ளது. பொருளாதார நெருக்கடி, குடும்ப செலவு அதிகரிப்பு, சமூக ஆதரவு கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டிருக்கிறது.
ஜப்பான்
வயதானவர்கள் அதிகம் வசிக்கும் நாடாக ஜப்பான் அறியப்படுகிறது. அந்நாட்டின் மக்கள் தொகையில் கால் பகுதியினர் (சுமார் 28 சதவீதம் பேர்) 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். 2050-ம் ஆண்டில் இது 38 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.10 ஆண்டுகளுக்கும் மேலாக பிறப்பு விகிதம் குறைவதுடன் ஆயுட்காலம் அதிகரிப்பதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 2050-ல், உழைக்கும் மக்களின் எண்ணிக்கை, ஓய்வு பெற்றவர்களுக்கு சமமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானிய கலாசாரத்தில் திருமணம் முக்கிய அங்கம் வகித்தாலும், இப்போது நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது. திருமணங்கள் நடப்பது தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கிறது. ஜப்பானியர்களில் கால்வாசி பேர் 50 வயதை அடையும்வரை திருமணம் செய்து கொள்வதில்லை. இதுவும் பிறப்பு விகிதங்கள் குறைவதற்கு மற்றொரு காரணம்.
சுவீடன்
பல ஐரோப்பிய நாடுகளைப் போலவே, சுவீடனில் வசிப்பவர்களில் ஐந்தில் ஒருவர் 65 வயதுக்கு மேற்பட்டவர். 2037-ம் ஆண்டுக்குள் வேலை செய்யும் வயது கொண்டவர்கள் 60 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பின்லாந்து
பின்லாந்தின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயது கொண்டவர்கள். இது உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே இங்கு வசிப்பவர்கள் நீண்ட ஆயுளை அனுபவிப்பதில் ஆச்சரியமில்லை.
பின்லாந்தின் மக்கள்தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பிறப்பு விகிதமோ கடும் சரிவை எதிர்கொண்டுள்ளது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பிறப்பு விகிதத்தை மேம்படுத்த அந்நாட்டு அரசாங்கம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
போர்ச்சுக்கல்
போர்ச்சுக்கல் நாட்டின் மக்கள்தொகையில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 22 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் மக்கள் தொகை எண்ணிக்கை 2 சதவீதம் குறைந்துள்ளது.
போர்ச்சுக்கலில் 2050-ம் ஆண்டுக்குள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 100 வயதை கடந்தவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது சுமார் 4 ஆயிரம் பேர் அங்கு 100 வயதை கடந்தவர்களாக உள்ளனர்.
ஜெர்மனி
இந்நாட்டு மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் 65 வயதுடையவர்களாக இருக்கிறார்கள். முதுமை விகிதம் 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
முரண்பாடான குடும்பக் கொள்கைகள் காரணமாக பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றன.
இத்தாலி
இத்தாலியின் மக்கள்தொகையில் 23 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்ட வயதுடையவர்கள். வயதானவர்கள் அதிகம் வசிக்கும் உலகின் இரண்டாவது நாடாகவும் இது விளங்குகிறது. இத்தாலி இளைஞர்களில் பலர் பணி நிமித்தமாகவும், உயர் கல்வி பயிலும் நோக்கத்துடனும் பிற நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர்.