குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?

அனைத்து பருவ காலங்களிலும் உட்கொள்வதற்கு ஏற்ற உணவுப் பொருளாக தயிர் இருந்தாலும், கோடை காலத்தில்தான் அதிகம் விரும்பப்படுகிறது.

Update: 2023-01-03 08:31 GMT

பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிரில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும், கால்சியம் அதிகம் கொண்ட உணவுப்பொருளாகவும் தயிர் உள்ளது. இது எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். குறிப்பாக தயிரில் உள்ள கால்சியம் எலும்பின் அடர்த்தியை சமப்படுத்தவும், பலப்படுத்தவும் செய்யும். மேலும் தயிரில் குறைந்த அளவே கொழுப்புகள் மற்றும் கலோரிகள் உள்ளன. உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு இவை உதவும்.

இருப்பினும் குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. குளிர்ச்சி நிறைந்த அதனை உட்கொள்வது சளி, இருமல் பிரச்சினைக்கு வித்திடும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் அனைத்து பருவ காலங்களிலும் உட்கொள்வதற்கு ஏற்ற உணவுப் பொருளாக தயிர் இருந்தாலும், கோடை காலத்தில்தான் அதிகம் விரும்பப்படுகிறது. குளிர்காலத்திலும் தயக்கமின்றி உட்கொள்ளலாம். இருப்பினும் இரவில் உட்கொள்வதாக இருந்தால் தயிருடன் சிறிதளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. பகல் பொழுதிலும் தயிர் உட்கொள்வதற்கு யோசிப்பவர்களும் இந்த வழிமுறையை பின்பற்றலாம்.

குளிர்காலத்தில் வரும் சரும பிரச்சினைகளில் முக்கியமானது சருமம் உலர்வடைவது. சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் பொருட்கள் தயிரில் இயற்கையாகவே உள்ளன. அவை சருமம் உலர்வடையாமல் தடுக்கக்கூடியவை. முகப்பரு பிரச்சினை இருப்பவர்களுக்கு தயிர் சிறந்த நிவாரணியாக அமையும். அதில் லாக்டிக் அமிலம் இருப்பதால் முகத்தை அழகுபடுத்தும் `பேஸ் பேக்'காகவும் உபயோகிக்கலாம். தயிரை முகத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து நீரில் கழுவினால் போதும். அது முகத்திற்கு பொலிவு சேர்ப்பதோடு, இறந்த செல்கள், சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் போன்றவற்றையும் நீக்கிவிடும். குடல் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள் குளிர் காலத்தில் தயிர் சேர்த்துக்கொள்வது நல்லது. அது குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். வயிறு தொடர்பான அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விலக்கி வைக்கும்.

குளிர்காலத்தில் உணவில் கலந்து சாப்பிடுவதோடு சமைக்கும் பொருட்களிலும் தயிரை சேர்த்துக்கொள்ளலாம். சப்பாத்திக்கு மாவு பிசையும்போது அதனுடன் சிறிதளவு தயிரும் சேர்க்கலாம். தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மாவில் கலந்து ஒட்டுமொத்தமாக ஊட்டச்சத்துக்களின் எண் ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். மேலும் சப்பாத்தியும் மென்மையாக இருக்கும்.

ஒரு சிலர் குளிர்காலத்தில் மந்தமாகவோ, சோர்வாகவோ உணரலாம். அவர்கள் மாதுளை அல்லது ஸ்ட்ராபெர்ரி பழத்துடன் தயிர் கலந்து சாப்பிடுவது புத்துணர்வை அளிக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க வழிவகை செய்யும். குழந்தையின் உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை சேர்க்க தயிர் பயன்படுத்தலாம். காய்கறிகளுடன் தயிர் சேர்த்து சாலட்டாக தயாரித்து கொடுப்பது சிறப்பானது.

Tags:    

மேலும் செய்திகள்