பி.எம்.டபிள்யூ. எம் 4 காம்படீஷன் கூபே
பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தற்போது சிறப்பு எடிஷனாக எம் 4 காம்படீஷன் கூபே மாடலை அறிமுகம் செய்துள்ளது.
சீறிப் பாயும் வகையிலான இந்தக் காரை ஸ்டார்ட் செய்து 3.5 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டு விட முடியும். 50-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு எம் பிராண்டில் 10 பிரத்யேக சிறப்பு மாடலை வெளியிடப் போவதாக இந்நிறுவனம் அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த மாடல் வந்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.52 கோடி. இது 3 லிட்டர், 6 சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. இதில் டுவின் பவர் டர்போ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது 510 ஹெச்.பி. திறனையும், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டது. இதில் மூன்று விதமான ஓட்டும் நிலைகள் உள்ளன. பார்க் செய்யும் இடத்தின் தூரத்தைக் கணிக்க முன்புறம் மற்றும் பின்புறங்களில் சென்சார் மற்றும் பார்க்கிங் அசிஸ்டென்ட் வசதி, டிரைவிங் அசிஸ்டென்ட், கம்பர்ட் ஆக்ஸஸ் சிஸ்டம், ஸ்டீயரிங் மற்றும் லேன் கண்ட்ரோல் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டது. இதில் பி.எம்.டபிள்யூ. ஆபரேடிங் சிஸ்டம் உள்ளது. இது தவிர 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே உள்ளது. 16 ஸ்பீக்கர்கள் உள்ளன. முன்புற இருக்கை, டிரைவருக்கு பக்க வாட்டுப் பகுதி மற்றும் பின்புற பயணிகளுக்கென ஏர்பேக் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளைக் கொண்டது.
இது தவிர ஆட்டோமேடிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல், கார்னரிங் பிரேக் கண்ட்ரோல், டைனமிக் பிரேக் கண்ட்ரோல், உலர் பிரேக்கிங் செயல்பாடுகளைக் கொண்டது. பிரேக் பிடிப்பதன் மூலம் கிடைக்கும் சக்தியை மின் சக்தியாக மாற்றும் வசதி, தானியங்கி ஸ்டார்ட்-ஸ்டாப் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட செயல்பாடுகளைக் கொண்டதாக வந்துள்ளது.