நீல நிறக் கால்களால் கவர்ந்திழுக்கும் 'பூபி பறவை'

கிழக்கு பசிபிக் பெருங்கடலின் வெப்பமண்டல பகுதிகளில் வாழும் பறவை இனங்களில் ஒன்று, நீல நிறக் கால்களைக் கொண்ட பூபி இனப் பறவை. இது சூலா என்ற இனத்தில் காணப்படும் ஆறு வகை பறவைகளில் ஒன்று.

Update: 2022-08-01 15:54 GMT

இதன் நீல நிற கால்களைக் கொண்டு, இவற்றை எளிதாக அடையாளம் காண முடியும். இது ஒரு கடற்பறவை ஆகும். இந்தப் பறவையின் ஆண் பறவையைவிட பெண் பறவை பெரியதாக இருக்கும். இது இறக்கையை விரித்து பறக்கும் நிலையில் 1.5 மீட்டர், அதாவது 5 அடி நீளம் வரை இருக்கும். ஆண், பெண் இரு பறவைகளும், அடர் பழுப்பு நிற இறக்கைகள், நீல நிற கால்கள், வெள்ளை நிற அடிப்பகுதியைப் பெற்றிருக்கும். இவற்றின் தலையும், கழுத்தும் தனித்துவமான நிறத்தைப் பெற்றிருக்கின்றன. இந்தப் பறவையின் கண்களின் மஞ்சள் நிறம் ஒளிர்விடும். பெண் பறவையை விட ஆண் பறவையின் கண்களில் மஞ்சள் நிறம் அதிகமாக தென்படும்.

இவற்றின் உணவுப் பட்டியலில் மீன்கள் மட்டுமே இருக்கின்றன. இந்தப் பறவை சுமார் 12 பறவைகள் இணைந்த குழுவாக சேர்ந்து கடற்பரப்பின் மேல் நீந்தும் மீன்களை வேட்டையாடும். சில சமயங்களில் தனித்தும் தன்னுடைய வேட்டையை நடத்தும். கடல்நீரின் மேற்பரப்பில் தென்படும் மீன்களை மேலே பறந்தபடி உற்று நோக்கி, `டைவ்' அடித்து கவ்விப் பிடிக்கும். இந்தப் பறவை அதிகபட்சமாக 100 அடி உயரத்தில் இருந்து கூட `டைவ்' அடிக்கும். அப்போது தன்னுடைய உடலை ஒரு அம்பு பாய்வதைப் போல நேர் கோட்டில் வைத்திருக்கும்.

நீல நிற கால் கொண்ட பூபி பறவையின் மண்டை ஓட்டில் காற்றுப் பை போன்ற அமைப்பு இருக்கிறது. அது, 100 அடி உயரத்தில் இருந்து `ைடவ்' அடிக்கும் இந்தப் பறவையின் மூளையை மிகப்பெரிய அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கிறது. கடலுக்குள் உள்நீச்சல் அடித்தும் மீன் களைப் பிடித்து உண்ணும். இதற்காக அவை கடலில் 80 அடி ஆழம் வரை செல்லும். நீரில் நீந்தும் மீன்களை நீச்சல் அடித்து தொடர்ந்து சென்று பிடிக்கவும் இவற்றால் முடியும்.

கூட்டமாக கடலில் `டைவ்' அடித்து மீன்களை வேட்டையாடினாலும், தான் பிடிக்கும் மீனை தான் மட்டுமே சாப்பிடத்தான் இந்த பறவை ஆசைப்படும். அதற்காக அவை தண்ணீருக்குள் இருந்தபடியே மீனை சாப்பிடும் வழக்கத்தை கடைப்பிடிக்கின்றது. இந்தப் பறவை கடலில் காணப்படும் சிறிய தீவு போன்ற பகுதியில் கூடு அமைத்து தன்னுடைய இனப்பெருக்கத்தை மேற்கொள்கிறது. தன் இணையை கவர்வதற்காக இந்தப் பறவை, தன்னுடைய காலை தூக்கி நடனம் ஆடும். ஒரு கூட்டில் ஒரு ஆண் பறவையுடன் இரண்டு பெண் பறவைகள் கூட தங்கியிருக்கும். ஒரு பெண் பறவை மூன்று முட்டைகள் வரை இடும். ஒரு முட்டை இட்டபிறகு மற்றொரு முட்டை இட இடைவெளி இருக்கும். ஆனாலும் கடைசி முட்டை இட்டபிறகே, அடைகாக்கத் தொடங்கும். ஆனால் குஞ்சுகள் அனைத்தும் ஒரே நேரத்தில்தான் வெளிவரும்.

Tags:    

மேலும் செய்திகள்