செவ்வாய் கிரகத்தில் இருந்து வெளியேறும் நீல நீற புகை - விஞ்ஞானிகள் விளக்கம்!

செவ்வாய் கிரகத்தில் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புதிய படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Update: 2022-06-29 13:46 GMT

Image credit: NASA/JPL-Caltech/UArizona

டக்சன்(அரிசோனா),

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அதன் சுற்றுப்பாதையில் 'மார்ஸ் கண்காணிப்பு ஆர்பிட்டர்' 2005 இல் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் உள்ள கேமரா மூலம் எடுக்கப்பட்ட புதிய படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த விண்கலத்தில் உள்ள 'உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்பட பரிசோதனை (ஹைரைஸ்) கேமரா' செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை துல்லியமாக படம் பிடித்துள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு மேற்பரப்பில் விசித்திரமான அடையாளங்களை எடுத்துள்ளது. அதில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் துவாரங்கள் வழியாக புகை போன்ற வாயுக்கள் வெளியாவதை தெளிவாக காணலாம். மேலும், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் குளோரைடு படிவுகளைக் காட்டும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

செவ்வாய் கிரக மேற்பரப்பில், பலகோண வடிவ அடையாளங்கள் உள்ளன. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை பொறுத்தவரையில், நீர் மற்றும் உலர் பனி இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

செவ்வாய் கிரகத்தில் நான்கு காலநிலை பருவங்கள் உள்ளன. இது பூமியில் இருப்பதை விட இரண்டு மடங்கு நீளமானது. அங்கு வசந்த காலம் 190 நாட்களுக்கு மேல் நீடிக்கும். இப்போது செவ்வாய் கிரகத்தில் வசந்த காலம் நிலவுகிறது.

இந்த நிலையில், அந்த சிறு துவாரங்கள் அவ்வப்போது கருப்பு மற்றும் நீல நிற புகை போன்ற வாயுக்களை வெளியிடுகின்றன.

இது குறித்து, செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் விண்கலத்தை நிர்வகிக்கும் அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 'செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் இருக்கும் மண்ணில் உறைந்திருக்கும் நீர் பனியின் விளைவால் இத்தகைய பலகோண வடிவிலான துவாரங்கள் உருவாகி உள்ளன.

இந்த பலகோண துவாரங்களின் விளிம்புகள் வசந்த காலத்தில் விரிசல் அடைகின்றன. அறிவியல் கூற்றுப்படி, 'பதங்கமாதல்' எனப்படும் செயல்முறை மூலம் மேற்பரப்பில் இருக்கும் பனி, வாயுவாக மாறுகிறது. அப்போது அந்த துவாரங்கள் மற்றும் வெடிப்பு வழியாக புகையாக வெளியேறுகிறது' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்