வீட்டின் மாடியிலும் ஆடு வளர்க்கலாம்..!

பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான யோகேஷ், கவுடானாபல்யாவில் உள்ள தனது வீட்டின் ஒரு பகுதியில் ஆடு வளர்த்து புதுமை படைத்துள்ளார்.

Update: 2022-09-18 14:36 GMT

நகரச் சூழலில் ஆடு வளர்ப்பதில் சவால்கள் இருந்த போதிலும், பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு அதையொரு வெற்றிகரமான தொழில் முயற்சியாக மாற்றியிருக்கிறார். 30 வயதான யோகேஷ் கவுடா, ஒவ்வொரு நாளும் காலை 5.30 மணிக்கு எழுந்திருக்கிறார். உடற்பயிற்சிக்கு மாற்றாக வீட்டில் வளர்த்துவரும் நாற்பதுக்கும் அதிகமான ஆடுகளுக்கு தீனி கொடுக்கிறார்.

பெங்களூருவில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளரான கவுடா, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரஹள்ளிக்கு அருகில் உள்ள கவுடானாபல்யாவில் உள்ள தனது வீட்டில் ஆடு மற்றும் மாடு வளர்ப்பைத் தொடங்கினார்.

பத்து பசுக்களுடன் தொடங்கி, தினமும் சுமார் 100 லிட்டர் பாலை கர்நாடக பால்வள கூட்டமைப்புக்கு விநியோகம் செய்தார்.

"மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் ஆடுகளை வளர்க்கத் தொடங்கினேன். கொரோனா இரண்டாவது அலையின்போது, என் அம்மாவுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது. மாடுகளை விற்றேன். ஆடு வளர்ப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்" என்றார்.

நகரத்தில் செம்மறி ஆடுகளை வளர்ப்பது வழக்கத்திற்கு மாறானதாக இருந்தாலும், அதை தன் விருப்பத்திற்காகச் செய்து வரும் யோகேஷ், தனது ஆடுகளை நேரடியாக விற்பனை செய்வதால் நல்ல விலை கிடைக்கிறது'' என்கிறார்.

மொட்டை மாடியில் சிறு கூடாரம் அமைத்து வீட்டில் செம்மறி ஆடுகள் வளர்க்கப்படுவதால், தூய்மையை உறுதிப்படுத்துவதற்காக மரத்துகள்களைத் தரையில் வைத்துள்ளார். ஆட்டு எருவை தினமும் சுத்தம் செய்து தனது மாமாவின் பண்ணைக்கு அனுப்பி வைக்கிறார்.

இந்த நடைமுறை அவருக்கு வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க உதவியது. அதனால், கடந்த ஏழு ஆண்டுகளாகப் பக்கத்து வீட்டுக்காரர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. வழக்கமான தீவனத்திற்குப் பதிலாகக் கரும்புக் கழிவுகள் மற்றும் பச்சை வாழைப்பழத்தோல்களை ஆடுகளுக்கு வழங்குகிறார்.

"தென்னாப்பிரிக்காவில் கால்நடை களுக்குக் கரும்புக்கழிவுகள் தீவனமாக வழங்கப்படுவதை அறிந்துகொண்டேன். வீட்டுக்கு அருகிலிருந்த கரும்புச் சாறு கடையை அணுகினேன். அடுத்து சிப்ஸ் ஆலையிலிருந்து வாழைப்பழத்தோலைப் பெறுகிறேன். அவர்களுக்குக் கழிவாக இருப்பது எங்கள் ஆடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுகிறது" என்று விளக்குகிறார்.

வடக்கு கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் பிரபலமான மவுலி, மிகவும் பிரபலமான கெங்குரி மற்றும் நாடிமாரி ஆகிய மூன்று நாட்டுரக ஆடுகளை வளர்க்கிறார்.

ஒவ்வொரு ஒன்பது மாதங்களுக்கும் ஒரு ஆட்டு கூட்டத்தை வளர்க்கிறார். அதை விற்றுவிட்டு, பின்னர் ஒரு மாதம் ஓய்வெடுக்கிறார். துமகுரு மாவட்டத்தில் உள்ள கொரடகெரே அருகே உள்ள அக்கிரம்பூரா மற்றும் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள அமிங்காட் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை சந்தைகளுக்குச் சென்று வளர்ப்பு ஆடுகளை வாங்குகிறார்.

யோகேஷ் வெற்றிக்குப் பின்னணியில் அவரது மனைவி அமிதாவும், அவரது பெற்றோர்களும் உள்ளனர். மனைவியும் ஒரு மென்பொருள் பொறியாளர்.

"ஒரு பண்ணை அமைக்க வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்து வருகிறது. ராமநகரத்தில் உள்ள சுக்கனஹள்ளியில் சிறிய அளவில் நிலம் வாங்கியுள்ளேன். எனது கனவுப் பண்ணை ஓர் ஆண்டில் தயாராகி விடும்" என்கிறார் உற்சாகத்துடன் யோகேஷ் கவுடா.

Tags:    

மேலும் செய்திகள்