குளிப்பதற்கு முன்பு எண்ணெய் தடவுவதன் நன்மைகள்
குளிப்பதற்கு முன்பு உடலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வது, பல தோல் பிரச்சினைகளை சமாளிக்க உதவும்.
உடலின் மிகப்பெரிய உறுப்புகளுள் முக்கியமானதாக சருமம் அமைந் திருக்கிறது. பல்வேறு வெளிப்புற காரணிகளால் சருமம் பாதிப்புக்குள்ளாகிறது. சூரிய ஒளி, முதுமை, புகைப்பிடித்தல், குளிர்ந்த காலநிலை, கடுமையான சோப்புகளின் பயன்பாடு, மருத்துவ நிலைமை போன்ற எண்ணற்ற காரணங்களால் சருமம் ஈரப்பதத்தை இழக்கலாம். எனவே, சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க தொடர்ந்து ஊட்டமளித்து, ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்வது அவசியமானது.
தீபாவளி அன்று எண்ணெய் தடவி மசாஜ் செய்து குளிப்பது பாரம்பரிய வழக்கமாக பின்பற்றப்படுகிறது. வாரந்தோறும் இந்த வழக்கத்தை தொடர்பவர்களும் இருக்கிறார்கள். சருமத்தை மென்மையாக வைத்திருக்கும் இயற்கையான மாய்ஸ்சுரைசராக எண்ணெய்கள் அமைந்திருக்கின்றன. பழங்காலத்தில் இருந்தே பெண்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பில் எண்ணெய்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
குளிப்பதற்கு முன்பு உடலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வது, பல தோல் பிரச்சினைகளை சமாளிக்க உதவும். எண்ணெய்யை லேசாக சூடுபடுத்தி சருமத்தில் தேய்க்கும்போது அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்கும். குளிப்பதற்கு முன் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் அத்தகைய நன்மைகள் குறித்து பார்ப்போம்.
ஈரப்பதத்தை தக்க வைக்கும்
எண்ணெய் தேய்ப்பது சருமத்திற்கு புத்துயிர் ஊட்ட உதவும். குறிப்பாக குளிர்காலத்தில் கடுகு, வால்நட் போன்ற இயற்கை எண்ணெய்களை சருமத்தில் தடவுவது, தோல் அடுக்குகளில் ஈரப்பதம் இழப்புக்குள்ளாவதை தடுக்க உதவும்.
வறண்ட சருமம், தோல் அரிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராடவும் உதவும். எண்ணெய்யில் உள்ளடங்கி இருக்கும் லினோலிக் அமிலம் போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மென்மையான உணர்திறன் கொண்ட சருமத்திற்கு சிறந்ததாகும். அவை சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் உணரவைக்கும்.
மன அழுத்தத்தை குறைக்க உதவும்
மசாஜ் செய்வதன் மூலம் ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோனை வெளியிட முடியும் என்பது ஆய்வில் கண்டறிந்துள்ளது. இது உடலையும், மனதையும் தளர்வடைய வைக்கும். மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை நிர்வகிக்கவும் உதவும். மனம் புத்துணர்ச்சி பெறவும் துணைபுரியும்.
சருமத்தை பாதுகாப்பதற்கு எண்ணெய்கள் நீண்டகாலமாக உலகெங்கிலும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவை இயற்கையாகவே சருமத்தை ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்கும் தன்மை கொண்டவை என்பதால் தவறாமல் பயன்படுத்தி வருவது நல்லது.
உடல் வலியை குறைக்கும்
எண்ணெய்களை கொண்டு மசாஜ் செய்வது கீல்வாதம் உள்ளிட்ட உடல் வலியைப் போக்க உதவும் என்பது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சூடான எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், தசைகளை தளர்வடைய செய்யவும் உதவும்.
விளையாட்டுகளின் போது ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு மசாஜும் சிறந்த சிகிச்சையாக அமையும். 'மாசோ' எனப்படும் உள்ளங்கையை கொண்டு உடலில் மெதுவாக தேய்த்து மசாஜ் செய்யும் வழிமுறையை கிரேக்கர்கள் பின்பற்றினார்கள். தசைகள் சோர்வு அடைவதை குறைக்கவும், காயங்களை தடுக்க ஏதுவாக நெகிழ்வுதன்மையை மேம் படுத்தவும், விளையாட்டு வீரர்களிடம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் இந்த நடைமுறை பயன்படுத்தப்பட்டது.
வயதான தோற்ற அறிகுறிகளை குறைக்கும்
எண்ணெய்யானது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு சுருக்கங்கள் தோன்றுவதையும் தடுக்க உதவும். அதன் மூலம் வயதான தோற்ற அறிகுறிகள் வெளிப்படுவது தள்ளிப்போகும். மசாஜ் செய்வது, சரும செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தும். தோல் நெகிழ்ச்சித்தன்மை அடைய வழிவகை செய்யும். இதன் விளைவாக இளமைத் தோற்றத்தை தக்கவைத்துக்கொள்ள ஏதுவாகும்.
புற்றுநோயை தடுக்க உதவும்
சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்கள் சருமத்தை சேதப்படுத்தி, தோல் புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும் என்பதால் அதற்கு எதிராக சருமத்தை பாதுகாப்பது முக்கியம். தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு பயனுள்ள சரும மாய்ஸ்சுரைசர் மட்டுமல்ல, தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் 20 சதவீதத்தை தடுக்கும் இயற்கையான சன்ஸ்கிரீனாக கருதப்படுகிறது.
நச்சுத்தன்மையை நீக்கும்
அன்றாட வாழ்வியல் செயல்முறைகளில் ஒரு அங்கமாக மசாஜ் பயிற்சியை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. ஆயுர்வேதத்தில் சூடான எண்ணெய்யை மசாஜ் செய்ய பயன்படுத்துவது அபியங்கம் எனப்படுகிறது. இது உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை அகற்ற உதவும் என்று மசாஜ் பயிற்சியாளர்கள் நம்புகிறார்கள், மேலும் இது மனதையும், உடலையும் தளர்வுபடுத்தக்கூடியது. புத்துயிர் பெறவும் வித்திடும்.