அழகான அதிரடி நாயகி: 'ஸ்மிருதி மந்தனா'

இளம் கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, இந்திய கிரிக்கெட்டிலும், சர்வதேச கிரிக்கெட்டிலும் ‘அதிரடி ஆட்டக்காரர்' என்ற முத்திரையை பதித்தவர். 50-க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடி, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை விளாசி இருக்கிறார்.

Update: 2022-08-14 12:11 GMT

அதுபோலவே, 75 முறை டி-20 போட்டிகளில் பங்கேற்று 1716 ரன்களை விரட்டியிருக்கிறார். 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல் சதத்தைப் பதிவு செய்தார். டி-20 போட்டியில் 24 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை படைத்தார்.

இவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை குறித்தும், சமீபத்தில் காமன்வெல்த் விளையாட்டின் இறுதிப்போட்டியில் எதிர்பாராதவிதமாக தோல்வியை தழுவியது குறித்தும் மனம் திறக்கிறார்.

* காமன்வெல்த் போட்டியில் வலுவான நிலையில் இருந்தும், வெற்றியை தவறவிட்டது எப்படி?

இந்திய அணிக்காக விளையாடிய எல்லா வீராங்கனைகளுக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது. எதில் தவறு செய்தோம், எங்கே வெற்றியை தவறவிட்டோம்... என எங்களுக்குள்ளாக நாங்களே பேசி மன ஆறுதல் அடைகிறோம். 70 ரன்களை திரட்டுவதற்குள், 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது, கொஞ்சம் வேதனையான விஷயம்தான்.

* இந்த தோல்வியில் இருந்து மீண்டு வீட்டீர்களா?

இல்லை. இந்த தோல்வியில் இருந்து வெளிவர சில காலம் தேவைப்படும். ஏனெனில் தங்கம் வெல்லக்கூடிய சூழலில், அதை தவறவிட்டது வடுவாகவே அமைந்திருக்கிறது.

* உங்களது ஜெர்ஸி எண் 18. விராட் கோலியின் எண்ணும் 18. இது தற்செயலான ஒற்றுமையா?

ஆம்...! இந்த கேள்வி பலமுறை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான ஒரே பதில், தற்செயலான ஒற்றுமை என்பதுதான். எனக்கு பிறருடன் ஒப்பிடுவது பிடிக்காது. வீராங்கனைகள் மட்டுமல்ல, பிற வீரர்களோடு ஒப்பிடுவதும் பிடிக்காது. இருப்பினும் விராட் கோலி பற்றி பேசும்போதும், அவரோடு ஒப்பிடும்போதும் அதை மனம் ஏற்றுக்கொள்கிறது. அதற்கான பதில் என்னிடமே இல்லை. அவர் சிறந்த வீரர்.

* விராட் கோலி மட்டும் ஏன் ஸ்பெஷலாக தெரிகிறார்?

அவரின் ஆட்டம் எனக்கு ஊக்கமளிக்கக் கூடிய வகையில் இருக்கிறது. பல சமயங்களில் கடுமையாக போராடி இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுத் தந்திருக்கிறார். தனி ஒருவனாக பல ஆட்டங்களை சமாளித்திருக்கிறார். அவரது ஆட்டத்தை பார்க்கும்போதும், அவரோடு பேசும்போதும், புதுவிதமான நம்பிக்கை எனக்குள் பிறக்கிறது. அவரைபோல நானும் இந்திய அணிக்கு பல வெற்றிகளைத் தேடித்தர வேண்டும் என்று நினைக்கிறேன்.

* இந்திய மகளிர் அணியில் 8 வருடப் பயணங்கள் எப்படி இருந்தது?

சிறு வயதில் எனது அண்ணன் ஷர்வன் மந்தனாவுடன் கிரிக்கெட் விளையாடச் செல்வேன். அவன் எப்படி விளையாடுவானோ அப்படியேதான் நானும் விளையாடுவேன். மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்று 16 வயதில்தான் முடிவு செய்தேன். மகாராஷ்டிரா அணிக்காக சதம் விளாசினேன். என்னுடைய பெற்றோர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அதனால்தான், இந்திய அணிக்கு நான் தேர்வானேன். இந்திய மகளிர் அணி, குடும்பம் போன்றது. வெற்றி-தோல்விகளை தாண்டி, உறவோடு, உரிமையோடு பழகக்கூடிய அணி. அதனால் 6 வருட பயணம் சிறப்பாக இருந்தது.

* கொரோனா ஊரடங்கு கற்றுக்கொடுத்த பாடம் என்ன?

சமூக வலைத்தளங்களில் நேரத்தைச் செலவு செய்வதை விட, குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவு செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்திருக்கிறது. அதேபோல நிரந்தரமில்லாத வாழ்க்கையில், யாருடனும் சண்டையிட்டு பேசாமல் இருக்கக்கூடாது என்ற கருத்தையும் என் மனதில் விதைத்து சென்றிருக்கிறது.

* மகளிர் போட்டிகளில், சக அணியினருடன் முட்டி மோதுவது எப்படி இருக்கிறது?

மனதளவில் யாரையும் புண்படுத்தவில்லை. ஆனால் கிரிக்கெட் போட்டிகளில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடினம் என்பதால், ஒருசில ஆட்டங்களில் தோழிகளிடமும் 'வார்த்தை போர்' நிகழ்கிறது. களத்தில் கடினமாக சாடினாலும், கோபமாக மோதினாலும் ஆட்டம் முடியும்போது எங்களது கோபமும் முடிவுக்கு வந்துவிடும்.

Tags:    

மேலும் செய்திகள்