ஏழைகளின் அட்சய பாத்திரமான அம்மா உணவகங்கள் அழியாமல் பாதுகாக்க வேண்டும்; பொதுமக்கள்-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

ஏழைகளின் அட்சய பாத்திரமான அம்மா உணவகங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

Update: 2022-09-20 12:40 GMT

அம்மா உணவகங்கள்

ஏழை எளிய மக்கள் மலிவு விலையில் வயிறார சாப்பிட்டு திருப்தியடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டமே, அம்மா உணவகங்கள். ஏழை மக்களின் பசி பிணியை போக்கிய இந்த திட்டம், சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இதனால் ஏழை எளிய மக்கள் ஏராளமானோர் பயனடைந்தனர். அந்தவகையில் சென்னையில் மட்டுமே 402 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.

அம்மா உணவகங்களில் காலை ரூ.1-க்கு இட்லியும், ரூ.5-க்கு பொங்கலும் வழங்கப்படுகிறது. மதியம் சாம்பார் சாதம், கீரை சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் தலா ரூ.5-க்கும் (சுழற்சி முறையில்), தயிர் சாதம் ரூ.3-க்கும் கிடைக்கிறது. இரவில் சப்பாத்தி (2 எண்ணிக்கை) ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மலிவு விலையில் சுடச்சுட உணவு வழங்கும் அம்மா உணவகங்கள், ஏழைகளின் அட்சய பாத்திரம் என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாகவே செயல்பட்டு வந்தது.

மூடப்பட உள்ளதா?

இந்த நிலையில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த உடனேயே, சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகம் தி.மு.க.வினரால் அடித்து நொறுக்கப்பட்டது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். அமைச்சர் மா.சுப்பிரமணியனை சம்பவ இடத்துக்கு அனுப்பி, சூறையாடப்பட்ட அந்த அம்மா உணவகத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர செய்தார்.

தமிழகத்தில் தற்போது அம்மா உணவகங்கள் மூடப்பட உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. இதனை மெய்ப்பிப்பது போலவே சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள அம்மா உணவகம் மழைநீர் வடிகால்வாய் பணிகளை காரணம் காட்டி இடிக்கப்பட இருக்கிறது. இதெல்லாமே பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேவேளை அம்மா உணவகங்களும் பல்வேறு பிரச்சினைகளை சுமந்துகொண்டு செயல்பட்டு வருகின்றன.

அடிப்படை வசதிகள் இல்லையே...

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் தற்போது அடிப்படை வசதிகளில் பிரச்சினைகள் சூழ்ந்திருப்பதை யாருமே மறுக்க முடியாது. பெரும்பாலான அம்மா உணவகங்களின் மேற்கூரைகள் பெயர்ந்திருக்கின்றன. ஓட்டை, உடைசல்களும் இருக்கின்றன.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரங்கள் செயல்படாமல் காட்சி பொருளாகவே வைக்கப்பட்டிருக்கின்றன. பல மையங்களில் இந்த எந்திரங்களே கிடையாது. மின்விசிறிகளும், மின் விளக்குகளும் 'இருக்கு ஆனா இல்லை' என்ற ரீதியில் உள்ளன.

அம்மா உணவகங்களில் கழிவறை கதவுகள் பெரும்பாலும் பெயரளவுக்கே இருக்கின்றன. பல இடங்களில் கதவுகள் உடைந்திருக்கின்றன. அந்த இடங்களில் பலகைகளும், திரைத்துணிகளும் வைத்து மறைக்கப்பட்டிருக்கும் அவலங்களையும் பார்க்க முடிகிறது.

பணியாற்றும் ஊழியர்கள் பெரும்பாலும் பெண்கள் என்பதால் இந்த சங்கடங்களை ஓரளவு சகித்துபோக முடிகிறது. இல்லையென்றால் நிலைமை திண்டாட்டம்தான்.

ஊழியர்களின் தவிப்பும், வேதனையும்...

இதுபோதாதென்று பாத்திரங்கள் கழுவும் இடங்கள் படுமோசமாக இருக்கின்றன. வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதுபோல அம்மா உணவகங்கள் இருக்கும் அனைத்து இடங்களிலும் கழிவுநீர் பிரச்சினை பெரிய தலைவலியாகவே இருந்து வருகிறது. அதிகாரிகளின் பார்வைக்கு இதை கொண்டு செல்லலாமே... என கேட்டால், 'இதெல்லாத்தையும் பல தடவை எஸ்.ஐ.கிட்ட (மாநகராட்சி சுகாதார அதிகாரிகள்) சொல்லியாச்சு சார்... அவங்க கண்டுகிறதே கிடையாது... என்ன கேட்டாலும், எப்படி கேட்டாலும் பண்ட் (நிதி) வரலனு சொல்றாங்க... நாங்க என்னதான் செய்றது?', என்று விரக்தியடைகிறார்கள் ஊழியர்கள்.

எல்லாவற்றையும் விட பல இடங்களில் சமையலுக்கான காய்கறி, மளிகை பொருட்கள் குறைவாக வழங்கப்படுவதாகவே புகார்கள் எழுகின்றன. பல மையங்களில் நின்று சாப்பிட வசதியாக மேஜைகள் இல்லை. இதனால் தரையில் அமர்ந்து சாப்பிடும் நிலைதான் நிலவுகிறது. இப்படி அடிப்படை வசதிகளில் பல குறைபாடுகளுடனேயே அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

மக்கள் வருகை குறைந்து வருகிறது என்றால் உணவகத்தை மூடி விடுவார்களோ என்ற அச்சம் ஊழியர்களுக்கு நிச்சயம் இருக்கிறது. இதனால் சில நேரங்களில் கைக்காசை போட்டு கணக்கு காட்டும் சூழலுக்கும் சென்று வருகிறார்கள்.

பசிப்பிணி போக்கிய ஆலயங்கள்

கொரோனா காலத்தில் ஏழைகளின் பசிப்பிணியை போக்கிய ஆலயங்களாக அம்மா உணவகங்கள் திகழ்ந்தது என்றால் அது மிகையல்ல. கடைகள் அடைக்கப்பட்ட சூழலில், சாலைகள் வெறிச்சோடி நகரமே மயான அமைதியில் சூழ்ந்திருந்தபோதும் இருளில் ஒளி தரும் மின்மினி பூச்சிகளாக செயல்பட்ட அம்மா உணவகங்கள் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கியதை யாருமே மறந்துவிட முடியாது.எனவே பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு அன்னமிட்ட அம்மா உணவகங்களை மேம்படுத்திட தமிழக அரசு துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். எனவே அடிப்படை வசதிகளை கட்டமைத்து, ஊழியர்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து, ஏழைகளின் அட்சய பாத்திரமான அம்மா உணவகங்களை தமிழக அரசு காப்பாற்றிட வேண்டும்.

அம்மா உணவகங்கள் நிச்சயம் மூடப்படாது என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும், மீண்டும் முன்புபோலவே அம்மா உணவகங்களில் கூட்டத்தை அதிகரிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துதர வேண்டும், ஏழைகளின் அட்சய பாத்திரமான அம்மா உணவகங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

 ஊதியத்துக்காக தவிக்கும் ஊழியர்கள்

வேலையை காப்பாற்ற, விருப்பமில்லாமல் விடுமுறை எடுக்கும் அவலம்

அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை, அந்தந்த நிலையத்தின் வருமானத்தை வைத்தே கணக்கிடப்படுகிறது. அதாவது மாதம் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் நிலையங்களில் 8 முதல் 10 பேர் வரை பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வருமானம் ஈட்டக்கூடிய நிலையங்களில் 8 பேர் வரை பணியாற்றலாம் என்றும், அதற்கு குறைவான வருமானம் ஈட்டும் மையங்களில் 6 பேர் பணியாற்றலாம் என்றும், வருமானம் மிகக்குறைவாக உள்ள மையங்களில் 4 பேர் வரை பணியாற்றவும் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

எந்தெந்த மையங்களில் வருமானம் குறைந்து வருகிறோ அங்கெல்லாம் ஆள்குறைப்பு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதனால் வேலையை காப்பாற்றி கொள்ள ஊழியர்கள் நூதன முறையை கையாள்கிறார்கள்.

அதாவது 8 பேர் பணியாற்றும் மையத்தில் ஒருவரை வேலையில் இருந்து நிற்க சொல்லி அதிகாரிகள் கட்டாயப்படுத்தும் சூழலில், ஊழியர்கள் ஒவ்வொருவரும் மாதத்தில் 4 நாட்கள் விடுப்பு எடுத்து கொள்கிறார்கள். இதனால் ஒருவரது சம்பளம் மிச்சமாகிறது. மற்ற 7 ஊழியர்கள் தங்களது சம்பளத்தை பங்கிட்டு 8-வது ஊழியருக்கு வழங்கி விடுகிறார்கள். இதனால் அவர்களது வேலையும் காப்பாற்றப்படுகிறது.

இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், ''தினமும் எங்களுக்கு சம்பளமாக ரூ.300 வழங்கப்படுகிறது. இது எங்கள் குடும்ப செலவுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இதுவும் இல்லாமல் போனால் எங்கள் வாழ்வு திண்டாட்டம்தான்.

எனவேதான் இந்த பாணியை கையாண்டு எங்கள் வேலையை தொடர்ந்து தக்க வைத்து வருகிறோம். பெரும்பாலான அம்மா உணவகங்களில் இந்த நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது'', என்று வேதனை தெரிவிக்கிறார்கள்.

குறைந்து வரும் கூட்டம்

அம்மா உணவகங்களுக்கு வரும் ஏழை மக்கள் வருகை குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டபோது ஒரு மாதத்துக்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சாப்பிட்டு வந்தனர். 2020-ம் ஆண்டு வரை மாதந்தோறும் அது 3½ லட்சமாக குறைந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக அந்த எண்ணிக்கை 1½ லட்சமாக குறைந்திருக்கிறது. பல மையங்களில் தினந்தோறும் சராசரியாக 40 முதல் 50 பேர் வரை மட்டுமே வந்து செல்கிறார்கள். இதனால் அம்மா உணவகங்களின் மூலம் வரும் வருமானமும் வெகுவாக குறைந்திருக்கிறது. அம்மா உணவகங்களுக்கு சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கையில் சீரான அளவில் சரிவு இருந்தபோதிலும், உணவகங்களில் 1,800-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கான சம்பள கணக்கீடு என்பது, உணவகங்களின் ஆண்டு செலவினத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பெயரை கூட மாற்றி கொள்ளட்டுமே...

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததுமே அனைத்து அம்மா உணவகங்களிலும் இருந்த ஜெயலலிதா உருவப்படம் உடனடியாக அகற்றப்பட்டன. பெயர் பலகைகளில் உள்ள 'அம்மா' என்ற எழுத்தும் அடித்து உடைக்கப்பட்டன. பல இடங்களில் அந்த பெயர் 'ஸ்டிக்கர்' ஒட்டி மறைக்கப்பட்டு உள்ளன. இவை பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனங்களையே பெற்று வருகின்றன.

இதுகுறித்து அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வரும் ஏழுமலை என்ற கூலித்தொழிலாளி கூறுகையில், ''பெயரில் என்ன வந்துவிடப்போகிறது. எந்த பெயரை வேண்டுமானாலும் வைத்துகொள்ளட்டும். ஆனால் உணவகங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும். என்னை போன்ற ஏழை மக்கள் வயிறார சாப்பிட்டு பசியாற வேண்டும். ஒரு நல்ல திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும். தமிழக அரசும் அதனை ஊக்குவிக்க என்னென்ன செய்ய முடியுமோ... அவற்றை செய்து தரவேண்டும்'', என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்