உலகளவில் கவலையளிக்கும் பருவநிலை மாற்றம்! சொந்த நிறுவனத்தையே நன்கொடையாக அளித்த தொழிலதிபர் குடும்பம்!
பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் முயற்சிக்கு முழு வணிகத்தையும் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
வாஷிங்டன்,
அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர் தனது முழு நிறுவனத்தையும் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட நன்கொடையாக வழங்கி உள்ளார்.
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஆடைகள் சில்லறை விற்பனை நிறுவனமான படகோனியா நிறவனர் யுவோன் சோய்னார்ட் என்பவர், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் தொடங்கிய முழு வணிகத்தையும் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் முயற்சிக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
அதன்படி பல்லுயிரியலைப் பாதுகாக்கவும், காட்டு நிலங்களைப் பாதுகாக்கவும் படகோனியா நிறுவனத்தின் அனைத்து நிறுவன வருவாய்களும் காலநிலை நெருக்கடியை எதிர்த்துப் போராடும் குழுக்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும்.
மேலும், சோயினார்டுடன் சேர்ந்து, அவரது மனைவி மற்றும் இரண்டு வாரிசுகளும் தங்கள் ஆடை நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள தங்கள் பங்குகளை பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் முயற்சிக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்கள்.
இது குறித்து படகோனியா நிறவனர் யுவோன் சோய்னார்ட் எழுதியிருக்கும் கடிதத்தில், "இப்போது பூமி மட்டுமே எங்கள் ஒரே பங்குதாரர்" என்று தெரிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.