சுவிட்சர்லாந்தா? காஷ்மீரா?
அருணாச்சல பிரதேசத்தின் அனினியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சிகு ரிசார்ட் குளிருக்கு மத்தியிலும் மனதை உற்சாகப்படுத்தும் தருணத்தை உணர வைக்கும்.
வடமாநிலங்களில் குளிர்கால சீசன் நிலவுகிறது. பல இடங்களில் புல்வெளியே தெரியாத அளவுக்குப் பனிப்பொழிவு சூழ்ந்திருக்கிறது. பிரமாண்ட மலைகளும் தனது தோற்றத்தை பனிகளுக்கு தியாகம் செய்துள்ளன. மலைத்தொடர்கள் மற்றும் மரங்கள், செடி, கொடிகளில் எல்லாம் பனிக்கட்டிகள் படர்ந்து அவை பசுமையை இழந்து வெண்மை தேசமாகக் காட்சி அளிக்கின்றன.
பொதுவாக ஜம்மு காஷ்மீரில்தான் இத்தகைய மாற்றங்கள் நிகழும். பல இடங்களில் பனிக்கட்டிகளை பெயர்த்தெடுத்து சாலைகளை சீரமைக்க வேண்டி இருக்கும். நடுங்க வைக்கும் குளிருக்கு மத்தியிலும் மனதை உற்சாகப்படுத்தும் தருணத்தை உணர வைக்கும். அதனால் காஷ்மீர் மற்றும் அதனையொட்டிய இடங்களை சுவிட்சர்லாந்துடன் ஒப்பிடுவார்கள்.
அத்தகைய பின்னணி கொண்ட இடத்தின் புகைப்படங்களை நாகலாந்து மாநில உயர் கல்வி மந்திரி டெம்ஜென் இம்னா அலோங் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், ''இது சுவிட்சர்லாந்தோ அல்லது காஷ்மீரோ அல்ல! அருணாச்சல பிரதேசத்தின் அனினியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட சிகு ரிசார்ட் இது. என்னவொரு அற்புதமான சூழல்'' என்று குறிப்பிட்டவர் அம்மாநில முதல் மந்திரி பெமா காந்துவிடம், ''இதனைப் பார்வையிட நீங்கள் எப்போது என்னை அழைக்கப்போகிறீர்கள்?'' என்றும் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த அருணாச்சல பிரதேச முதல் மந்திரி, ''அன்புள்ள இம்னா ஜி... மலைகளும் பள்ளத்தாக்குகளும் அழகால் உங்களை மயக்கும். அருணாச்சல பிரதேசம் உங்கள் வருகைக்காக காத்திருக்கிறது! வாருங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே அருணாச்சல பிரதேச முதல் மந்திரி பெமா காந்து, ''திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் உள்ள அனினியின் முழு நிலப்பரப்பும் பனியால் மூடப்பட்டுள்ளது. பனி படர்ந்திருக்கும் கூரைகள், மெல்லிய உறைபனி, பனி-குளிர் காற்று, சிகு ரிசார்ட் ஆகியவை இந்த குளிர்கால பருவத்தின் முதல் பனிப்பொழிவில் மூழ்கியுள்ளன. இந்த அழகிய இடத்தைப் பார்வையிடுங்கள். இந்த அற்புதமான தருணத்தை உணருங்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
நாகலாந்து மந்திரியும் அனினி பகுதியின் புகைப்படத்தை பகிர்ந்து முதல்-மந்திரி தன்னை அழைக்குமாறு கோரிக்கை விடுத்ததால் வைரலாகிவிட்டது. அனினி பகுதியும் பிரபலமாகிவிட்டது. இது காஷ்மீரா? சுவிட்சர்லாந்தா? இரண்டும் இல்லை.. அனினி என்று பலரும் அந்த இடத்தின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.