"நீட் ரிசல்ட் வந்தபின்.. 72 மணி நேரம் கவனம் வேண்டும்" - உளவியல் நிபுணர்கள் சொல்லும் தகவல்

தங்கள் குழந்தைகளின் மன ஓட்டத்தை புரிந்துகொண்டு அவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகமூட்ட வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.

Update: 2022-09-08 07:48 GMT

சென்னை,

நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்களை மனம் தளராமல் பார்த்து கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பு. பல மாணவர்களின் மருத்துவ கனவு பொதிந்திருப்பது என்னவோ இந்த ஒற்றை தேர்வுக்குள் தான்.

நீட் என்ற இந்த ஒற்றை தேர்வால் உங்கள் மருத்துவ துறை ஆர்வத்தை சிதைத்துவிட முடியாது என்பதே உண்மை. இதை புரிந்து கொண்டாலே போதும். எதையும் சாதிப்பது மிக எளிது என்பதே கல்வித்துறை முதல் உளவியல் நிபுணர்கள் வரையிலான அறிவுரை.

பொதுவாக நாம் எதிர்பார்த்த ஒன்று நடைபெறாவிட்டால் மனம் தளர்ந்து போகக்கூடும். அந்த வேளையில் நாம் தவறான முடிவுகளை நம்மை அறியாமலேயே எடுத்துவிட நேரிடலாம். இதனால் தான் தேர்வு முடிவுகள் வெளியான முதல் 72 மணி நேரம் மிக முக்கியம் என்கின்றனர், உளவியல் நிபுணர்கள்.

ஒருவேளை மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், மன தத்துவ நிபுணரை சந்தித்து மனம் விட்டு பேசினால், மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும். பல மாணவர்கள் இரண்டு, மூன்று முறை தேர்வு எழுதி வெற்றிபெற முடியாமல் மனம் சோர்வடைகின்றனர்.

அந்த நேரம் பெற்றோர்கள் அவர்களை மனம் தளராதவாறு ஊக்கப்படுத்தி அவர்களை சாதாரண மன நிலைக்கு கொண்டுவர வேண்டும். மாணவர்களுக்கு தேர்வில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காமல் போனால், அவர்களை பெற்றோர் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

தேர்வு குறித்து மாணவர்கள் மனம் விட்டு பேசுவதற்கு நாங்கள் இருக்கிறோம் என்கின்றனர் கல்வித்துறை ஆலோசனை மையம். மாணவர்கள் எப்போது அணுகினாலும் ஆலோசனை வழங்க தயாராக இருக்கிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக தங்கள் குழந்தைகளின் மன ஓட்டத்தை புரிந்துகொண்டு அவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகமூட்ட வேண்டியது நம்முடைய கடமை என்பதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்துகொண்டாலே போதும். மாணவர்களின் வெற்றிப்பயணம் தங்கு தடையின்றி தொடரும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.   

Tags:    

மேலும் செய்திகள்