பன்முக திறமையால் கவனம் ஈர்க்கும் மாணவி..!

பிளஸ்-2 மாணவியான சக்தி பூரணி, பல கலைகளைக் கற்று, அசத்தி வருகிறார். அதில் சிலவற்றில் கின்னஸ் சாதனைகளையும் படைத்திருக்கிறார்.

Update: 2023-01-01 14:44 GMT

அவருடன் சிறுநேர்காணல்.

* உங்களைப் பற்றி சிறு அறிமுகம்?

திருவாரூர் எங்களுடைய பூர்வீகம். இப்போது சென்னைக்கு அருகே இருக்கும் பாடியநல்லூரில், பெற்றோருடன் வசித்து வருகிறேன். அம்மா-அப்பா இருவருமே அரசுப்பள்ளி ஆசிரியர்கள். நானும் செங்குன்றம் பகுதியில் இருக்கும் புனித மேரி மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்-2 படிக்கிறேன்.

* நிறைய கலைகளை கற்றுக்கொள்ளும் ஆர்வம் பிறந்தது எப்படி?

வழக்கமான குழந்தை களைவிட, சிறுவயதில் எனக்கு கூடுதலான மூச்சுப்பயிற்சி தேவைப்பட்டிருக்கிறது. அதற்காக மருத்துவர்கள், வாய்ப்பாட்டு சம்பந்தமான பயிற்சி வகுப்புகளை பரிந்துரைத்துள்ளனர். அப்படிதான், கலைகள் என் வாழ்க்கைக்குள் அறிமுகமாகின. நான் வாய்ப்பாட்டு வகுப்பிற்கு சென்றாலும், அங்கு அரங்கேறும் நடனம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் ஆர்வமாக இருந்தேன். அதன் காரணமாய், வெகுவிரைவிலேயே நடன வகுப்பிலும் கலந்துகொண்டு நடனம் பயின்றேன்.

* பல கலைகளை கற்றுக்கொள்ள தொடங்கியது எப்போது?

6-ம் வகுப்பு படிக்கும்வரை, வாய்ப்பாட்டு மற்றும் நடனம் மட்டுமே கற்றுக்கொண்டிருந்தேன். அந்தசமயத்தில், தனியார் டி.வி. சேனல் நடத்திய நடனப்போட்டியில் கலந்துகொண்டபோது, டாப்-10 வரை முன்னேறினேன். அந்தப்போட்டியில், பல போட்டியாளர்கள், பலவிதமான கலைகளால் கவனம் ஈர்த்தனர். மேலும் கலா உத்சவ் என்கிற, மாபெரும் மத்திய-மாநில கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தபோது, சாதாரண நடனங்களை காட்டிலும், நாட்டுப்புற கலை நடனங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதை உணர்ந்து கொண்டேன். அன்றிலிருந்து, புதுப்புது கலைகளையும், பாரம்பரிய நாட்டுப்புற கலைகளையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

* இதுவரை நீங்கள் என்னென்ன கலைகளை எல்லாம் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்?

வாய்ப்பாட்டு தெரியும். பரதநாட்டியம், சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் ஆடுவேன். வேல் கம்பு வீசுவேன். வாள் சண்டை போடுவேன். சுருள் வாள் சுழற்றுவேன். இப்படி நம் பாரம்பரிய கலைகளை கற்றுக்கொண்டிருக்கிறேன். கூடுதலாக, ஹூலா ஹூப், வேவ் போர்ட், ரோலா போலா, போய், ஜக்லிங், ஜக்லிங் கிளப், ஜிம்னாஸ்டிக், ஒரிகாமி, ஏரியல் யோகா, மேஜிக் கலை போன்ற மேற்கத்திய கலைகளையும் முறையாக பயின்றிருக் கிறேன்.

* பயிற்சியோடு மட்டுமில்லாமல், போட்டிகளில் கலந்துகொண்டது உண்டா?

நிறைய போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். அதில் மாவட்ட அளவில் பரிசுகளையும் வென்றிருக்கிறேன். 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் திருவள்ளூரில் நடந்த மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகளில், முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறேன். 2019-ம் ஆண்டு நேபாளத்தில் நடந்த யூத் கேம்ஸ் இன்டர்நேஷனல் புரோ லீக் சாம்பியன்ஷிப் போட்டிகளில், வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றிருக்கிறேன். கலா உத்சவ் நடனப்போட்டிகளில், பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற கலை பிரிவுகளில் பங்கேற்று மாவட்ட, மாநில அளவில் பல பரிசுகளை வென்றிருக்கிறேன்.

* கலைகள் வாயிலாக கின்னஸ் சாதனை முயற்சிகளை முன்னெடுத்தது எப்போது?

2020-ம் ஆண்டு, பரதநாட்டிய கலையில் குழு முயற்சியாக, சதிர் 10 ஆயிரம் என்ற நிகழ்விற்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் கிடைத்தது. அந்த ஆர்வம், தனிநபர் கின்னஸ் சாதனை படைக்கும் ஆர்வத்தை தூண்டிவிடவே, கை மற்றும் மணிக்கட்டுகளின் வலிமையை உணர்த்தும் போய் ஸ்பைரல் ராப்ஸ் கலையில், சாதனை படைக்க முயன்றேன். அதன்படி, ஒரு நிமிடத்தில், 77 முறை போய் ஸ்பைரல் ராப்ஸ் சுழற்றி, புதிய சாதனை படைத்து கின்னஸ் சாதனையாளராக மாறினேன்.

* உங்களுக்கு கிடைத்திருக்கும், விருதுகள் பாராட்டுகளைப் பற்றி கூறுங்கள்?

நிறைய நாட்டுப்புற கலைகளையும், மேற்கத்திய கலைகளையும் பயின்று அதில் நிறைய சாதனை முயற்சிகளை மேற்கொண்டிருப்பதால், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பல விருதுகளை வென்றிருக்கிறேன். அதேபோல, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறேன். கல்வித்துறை அமைச்சர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் சென்னை மேயர் ஆகியோரின் வாழ்த்துகளையும் பெற்றிருக்கிறேன்.

* உங்களுடைய ஆசை, லட்சியம் என்ன?

இப்போது கலைகளை ஆர்வமாக கற்றுக்கொள்வதை போலவே, எதிர்காலத்தில் ஏ.ஐ. எனப்படும் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் பற்றி படிக்க ஆர்வமாக இருக்கிறேன். அதன்மூலம் சமூகத்திற்கு தேவையான பல கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும் என நம்புகிறேன் அதையே, என் வாழ்க்கை லட்சியமாக்க முயற்சிக்கிறேன்.

* நிறைய கலைகளை கற்றுக்கொள்கிறீர்கள். நிறைய போட்டிகளில் பங்கேற்கிறீர்கள். படிப்பில் நீங்கள் எப்படி?

கலைகளில் மட்டுமின்றி, படிப்பிலும் நான் சுட்டிதான். படிப்பையும், கலைகளையும் நான் ஒருபோதும் குழப்பிக்கொள்வதே இல்லை. இவ்விரண்டிற்கும் சரிபாதி முக்கியத்துவம் கொடுத்து, ஒன்று மற்றொன்றை பாதித்துவிடாத அளவில் பார்த்துக் கொள்கிறேன்.

* பெற்றோர் ஊக்கப்படுத்துகிறார்களா?

அவர்களது ஊக்கம்தான், என்னை இவ்வளவு துடிப்போடு இயங்கச் செய்கிறது. என்னுடைய விருப்பங்களுக்கு செவி சாய்ப்பதுடன், என்னை உற்சாகமாக இயங்கும் வகையில் ஊக்கப்படுத்துகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்