உலக சாதனையை நோக்கி ஒரு உன்னத பயணம்

தனியொருவராக நீண்ட தூரம் சைக்கிள் பயணம் மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி தேர்ந்தெடுக்கும் தொலை தூர பயணத்தை சாதனை நிகழ்வாக மாற்றி அமைப்பவர்களும் உண்டு. அந்த வரிசையில் இடம் பிடித்து உலக சாதனை படைக்கும் முனைப்போடு சைக்கிளில் சீறிக்கொண்டிருக்கிறார், பிரீத்தி மாஸ்கே.

Update: 2022-06-24 14:35 GMT

சைக்கிள் சவாரி உடல்-மன ஆரோக்கியத்தை பேணும் சிறந்த பயிற்சி முறையாக அமைந்திருப்பதால் பலரும் அதன் மீது கவனத்தை திருப்பி இருக்கிறார்கள். காலை வேளையில் சைக்கிள் மிதித்து பயிற்சி செய்வதோடு நிறுத்திவிடாமல் அலுவலகத்திற்கும் சைக்கிளில் சென்று வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த இவர் சைக்கிள் சவாரி பிரியர். தங்க நாற்கர சாலையில் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை வேகமாக கடந்த பெண் சைக்கிள் ஓட்டுனர் என்ற சாதனையை ஏற்கனவே படைத்திருக்கிறார். கடந்த ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தினார்.

புனேவில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கியவர், பெங்களூரு - சென்னை - கொல்கத்தா வழியாக டெல்லியை சென்றடைந்திருக்கிறார். அங்கிருந்து ராஜஸ்தான், மும்பை வழியாக மீண்டும் புனே வந்தடைந்திருக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தை 24 நாட்கள் மற்றும் 6 மணி நேரத்தில் முடித்திருக்கிறார். இது கின்னஸ் உலக சாதனை நிகழ்வாக பதிவாகி இருக்கிறது.

இதேபோல் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணத்தை தொடர்ந்தவர் 17 நாட்கள் மற்றும் 17 மணி நேரங்களில் நிறைவு செய்தார். இது 3,773 கி.மீ. தூர பயணமாகும். மேலும் நாசிக்கில் இருந்து அமிர்தசரஸ் வரையிலான 1,600 கி.மீ. தூரத்தை 5 நாட்கள் மற்றும் 5 மணி நேரத்தில் கடந்தார். இந்த சைக்கிள் சாகச பயணத்திற்காக சூப்பர் ரேண்டன்யர் பட்டத்தை பெற்றார்.

இப்போது மற்றுமொரு உலக சாதனை படைக்கும் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். காஷ்மீர் அடுத்த லேவில் இருந்து இமாச்சல பிரதேச மாநிலம் மணாலி வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார். கடல் மட்டத்தில் இருந்து 3,600 கிலோ மீட்டர் உயரத்தில் இவரது பயணம் தொடங்க இருக்கிறது. சவாலான இந்த பயணம் 480 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. அதனை 60 மணி நேரத்தில் கடந்துவிட வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயித்துள்ளார்.

''லே-மணாலி இடையே சைக்கிளில் பயணிப்பது சாதாரண விஷயமல்ல. உயரமான மலை பிரதேசங்களின் வழியே நீளும் சாலையில் சைக்கிள் மிதிப்பதற்கு உடலும், மனமும் ஒன்றுபட வேண்டும். இந்த பயணத்திற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். சில இடங்களில் இரவில் வெப்பநிலை மைனஸ் 5 டிகிரி வரை குறையும். அத்தகைய காலநிலையை சமாளிப்பதற்கு என்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே நீண்ட தூரம் சைக்கிள் ஓட்டிய அனுபவமும், மலையேற்ற பயணமும் கைகொடுக்கும் என்று நம்புகிறேன்'' என் கிறார்.

44 வயதாகும் பிரீத்தி வருகிற 22-ந்தேதி பயணத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறார். இதற்காக மலையேற்றம், நீச்சல் போன்ற பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

''அலுவலக வேலை, குடும்ப நிர்வாகம் என இரு பொறுப்புகளை சுமப்பதால் எனக்கு குறைவான நேரமே கிடைக்கிறது. வாரத்தில் ஒரு நாள் மலையேற்றம் மேற்கொண்டு வருகிறேன். நீச்சல் மற்றும் பளு தூக்குதல் போன்ற கடுமையான பயிற்சிகளை தவறாமல் செய்கிறேன்'' என்கிறார்.

பிரீத்தி தடகள வீராங்கனையும் கூட. இத்தனைக்கும் தனது 40-வது வயதில்தான் சர்வதேச ஓட்ட பந்தயங்களில் பங்கேற்க தொடங்கி இருக்கிறார். 2017-ம் ஆண்டு மலேசியாவில் நடந்த ஆசிய பசிபிக் மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். அதன் பிறகு மாரத்தான், டிரையத்லான், சைக்கிள் போட்டி என பிசியாகிவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்