மூன்று மகள்களை போலீசாக்கிய விவசாய தந்தை

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரிகள் ஒரே சமயத்தில் போலீஸ் பணிக்கு தேர்வாகியிருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்த செய்திக்கு பின்னால், பல சுவாரசியங்கள் ஒளிந்திருக்கின்றன. அதை தெரிந்துகொள்ள, அரக்கோணத்தை அடுத்த அன்வர்திகன்பேட்டைக்கு அருகே இருக்கும் கீழ்ஆவதம் கிராமத்திற்கு சென்றோம்.

Update: 2022-10-30 07:53 GMT

அங்கிருந்த ஒரு விவசாய நிலத்தில், வெங்கடேசன் என்பவர் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தார். இவர்தான், காவல் பணிக்கு தேர்வான அந்த மூன்று பெண்களின் தந்தை. சுட்டெரிக்கும் வெயிலிலும், கடினமான விவசாய பணிகளுக்கு மத்தியிலும் அவர் முகத்தில் புன்னகை தோன்றி மறைந்தது. தன்னுடைய மகள்களுக்கு கிடைத்திருக்கும் அரசாங்க வேலையை நினைத்து, அவர் அகம் மகிழ்ந்து கொண்டிருந்தார். அவரிடம், 'வாழ்த்துகளை' பரிமாறிக்கொண்டு, பேச ஆரம்பித்தோம்.

''எனக்கு 3 மகள்கள், ஒரு மகன். குழந்தைகளுக்கு விவரம் தெரிவதற்கு முன்பாகவே, என்னுடைய மனைவி இறந்துவிட்டார். அம்மா இல்லாமல் 3 மகள்களை எப்படி வளர்க்கப் போகிறோம் என்ற பயம், என் மனதில் எப்பொழுதும் இருக்கும். சில காலம், வருத்தப்பட்டேன். ஆனால் ஒருகட்டத்தில், என்னை தேற்றிக்கொண்டு அவர்களுக்கான எதிர்காலத்தை கட்டமைத்தேன்.



என்னுடைய மூத்த மகள் பிரீத்தி, 12-ம் வகுப்பு வரை படித்திருக்கிறாள். 2-வது மகள் வைஷ்ணவி, பி.ஏ. ஆங்கிலமும், 3-வது மகள் நிரஞ்சனி, பி.எஸ்சி. இயற்பியலும் முடித்திருக்கிறார்கள். என்னுடைய மகன், கார்த்திகேயன் பி.எஸ்சி. தாவரவியல் முடித்துவிட்டு, இப்போது அரசு பணிக்கு தயாராகி வருகிறார்'' என்றவரிடம், 3 மகள்களையும் போலீஸாக்கும் ஆசை எப்படி வந்தது என கேட்டோம். அதற்கு அவர்...

''கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ரெயில் பயணத்தின்போது ஒரு பெண் காவலரை சந்தித்தேன். குறுகிய கால சந்திப்பில், அவர் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, பெண் காவலராக பணிபுரிவதை அவர் பெருமையாக பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சில், வறுமை வடுக்களும் தெரிந்தது. அதற்கு காவலர் பணி, மருந்து பூசிய தடமும் தெரிந்தது. அவரது உத்வேகம்தான், எங்களது குடும்பத்திற்குள் போலீஸ் ஆசையை விதைத்தது'' என்றவர், தன்னுடைய மகள்களுக்கு காவலர் பணி பற்றியும், அதற்கு நடக்கும் எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு குறித்தும் விளக்கியிருக்கிறார். அவர்களும், போலீஸ் கனவை முன்னிறுத்தி, தந்தையிடம் பயிற்சிபெற தொடங்கினர்.

''சிறுவயதில், எனக்கு ராணுவத்தில் சேரும் ஆசை இருந்தது. முறையான வழிகாட்டுதல் இல்லாததால், அது நிறைவேறாமல் போனது. எனக்கு ஏற்பட நிலை, என் மகள்களுக்கு ஏற்பட்டுவிடாமல் இருக்க, அவர்களுக்கு நானே முன்னின்று, பயிற்சி வழங்கினேன்.

எழுத்துத்தேர்வுக்கு தயாராக, பக்கத்து ஊரில் இருக்கும் பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைத்தேன். வீட்டிலும் படிக்க வைத்தேன். போலீஸ் தேர்வில், உடல் தகுதி தேர்வும் இருக்கும். அதில் நீளம் தாண்டுதல், ஓட்டப்பயிற்சி மற்றும் பந்து எறிதல் போன்றவை நிச்சயம் இருக்கும் என்பதால், அதுசார்ந்த பயிற்சிகளையும் வழங்கினேன். இதற்காக நான் வேலை செய்த, விளைநிலங்களை பயிற்சி களங்களாக மாற்றினோம்.

அங்கும் காலையிலும், மாலையிலும் உடற்பயிற்சியுடன் கூடிய விளையாட்டு பயிற்சிகள் நடக்கும். ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு, தங்களுக்குள் போட்டியிட்டவாறு, ஓடுவார்கள். நீளம் தாண்டுவார்கள். குடும்ப வறுமையை போக்குவதற்காக பந்து எறிந்து, பயிற்சி பெறுவார்கள்'' என்றவர், உடற்பயிற்சி ஆசிரியர் போல செயல்பட்டு, தன்னுடைய மகள்களை போலீஸ் தேர்விற்கு தயார் செய்திருக்கிறார். அவர்களும், குடும்ப கஷ்டத்தை உணர்ந்து, காவல் பணிக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். குறிப்பாக பீரித்தி, பெரும் போராட்டத்திற்கு பிறகுதான் காக்கி சட்டை அணிந்திருக்கிறார்.

''என்னுடைய மூத்த மகளான பிரீத்திக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அவளுடைய குடும்ப வறுமைதான், அவளை விடாமுயற்சியுடன் கூடிய தொடர்பயிற்சிகளில் ஈடுபட வைத்தது. முதல் மகளின் திருமணத்திற்கு வாங்கிய கடனையே, நான் இப்போது வரை அடைத்துக்கொண்டிருக்கிறேன். இந்நிலையில், மற்ற இரண்டு மகள்களையும் கரைசேர்ப்பது, மிகவும் கடினமான வேலை.

இந்த விஷயம், என்னுடைய மற்ற மகள்களுக்கும் தெரியும். அதனால்தான், அவர்களும் காவலர் பணிக்காக முழுமூச்சில் பயிற்சி எடுத்தனர். எங்களுடைய குடும்ப கஷ்டத்திற்கு முன்பாக, பயிற்சியில் ஏற்பட்ட காயங்களும், கஷ்டங்களும் அவர்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. அதேபோல அவர்கள், மூவரும் முதல் முயற்சியிலேயே போலீஸாக தேர்வாகவில்லை. இந்த வாய்ப்பிற்கு முன்பு, 3 முறை முயற்சித்திருக்கிறார்கள். அதில் சிலமுறை தோல்வியையும் சந்தித்திருக்கிறார்கள்'' என்று உணர்ச்சிவசப்பட்டார்.

வெங்கடேசனின் பயிற்சியினால், மூன்று மகள்களும் உடற்பயிற்சி தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்றிருந்தனர். பிரீத்தி நீளம் தாண்டுதல் மற்றும் பந்து போடுவதில் 2 ஸ்டார்களும், ஓட்டப்பந்தயத்தில் 1 ஸ்டாரும் பெற்றார். வைஷ்ணவி, பந்துப்போடுவதில் 2 ஸ்டாரும், மற்றவற்றில் 1 ஸ்டாரும் பெற்றிருந்தார். நிரஞ்சனி, ஓட்டம் மற்றும் நீளம்தாண்டுதலில் 2 ஸ்டார்களும், பந்து எறிதலில் 1 ஸ்டாரும் பெற்றிருந்தார்.

''உடல்தகுதி தேர்வில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுபவர்களுக்கு ஒரு ஸ்டார் வழங்கப்படும். ஒரு ஸ்டார் என்பது 5 மதிப்பெண். நிர்ணயிக்கப்பட்டதை விடவும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு, 2 மற்றும் 3 ஸ்டார் வழங்கப்படும். அந்த அடிப்படையில், என்னுடைய மகள்கள் மூவருமே, 2 ஸ்டார்கள் பெற்று, கூடுதல் மதிப்பெண்களை பெற்றனர். அதுவே, அவர்களை காவலர் பணிக்கு அழைத்து சென்றது'' என்று பெருமிதப்படுகிறார்.

''என்னுடைய ஆசையின்படியே, மூன்று மகள்களும் காவலர் பணியில் இணைந்துவிட்டனர். இப்போது 'பிராக்டிக்கல் டிரைனிங்' அடிப்படையில், மூவரும் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒருசில நாட்களில், இது நிறைவுபெற்றதும், அவர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டு, முழு காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒரு தந்தையாக, என்னுடைய கடமையை சிறப்பாக செய்திருப்பதாக உணர்கிறேன். இன்னும், எனக்கு சில கடமைகள் பாக்கி இருக்கிறது.


அவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தி, காவலர் பணியின் அடுத்தக்கட்ட பணிகளுக்கு தயார்படுத்தும் பொறுப்புகளை, இனி என் தோளில் சுமக்க இருக்கிறேன். அதுவரை அவர்கள் எங்கு பணிபுரிந்தாலும், எனக்கு சந்தோஷம்தான்'' என்று ஆனந்த கண்ணீர் சிந்திய வெங்கடேசன், இறுதியாக ஒரு கருத்தை பகிர்ந்து கொண்டார்.

''நம்முடைய குழந்தைகளை கஷ்டம் தெரியாமல், சந்தோஷமாகவே வளர்க்க வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் இருக்கும். அது நியாயமான ஆசைதான். ஆனால் குழந்தைகளுக்கு நம்முடைய குடும்ப கஷ்டம் தெரியும்போது, அவர்களுக்குள் பிரத்யேக உத்வேகம் பிறப்பதை, என் கண்கூடாக உணர்ந்திருக்கிறேன்.

அந்த உத்வேகம், அவர்களை திறமைசாலிகளாக, பொறுப்பானவர்களாக மாற்றுகிறது. இலக்கை நிர்ணயிக்கவும், அதை மட்டுமே வாழ்வாக்கும் பிடிவாதத்தையும் உருவாக்குகிறது. அதனால் முடிந்தவரை, குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களோடு சேர்த்து குடும்ப கஷ்டத்தையும் கற்றுக்கொடுக்க பழகுவோம்'' என்ற 'நச்' கருத்தோடு விடைபெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்