5-ஜி பெயரில் நடக்கும் நூதன மோசடி

5-ஜி சேவை அறிமுகமானதில் இருந்து, அதையே அடிப்படையாக கொண்டு பல ஏமாற்று வேலைகள் நடந்து வருகின்றன. அதில் முக்கியமானது, 4-ஜி சேவையில் இருந்து 5-ஜி சேவையாக தரம் உயர்த்தி தருகிறோம். உங்கள் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. எண்ணை எங்களிடம் கூறுங்கள் என்பதுதான்.

Update: 2022-12-18 14:45 GMT

மோசடிக்காரர்கள், உங்கள் சிம் கம்பெனியிலிருந்து வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியைப் போல அழைப்பார்கள். உங்களது சிம் கார்டு, 5-ஜி சிம் கார்டாக மேம்படுத்தவேண்டும், அப்போதுதான் உங்கள் சிம் வேலை செய்யும் என அச்சுறுத்துவார்கள். அதை நம்புபவர்களை அவர்களால் சுலபமாக ஏமாற்ற முடியும்.

* எப்படி நடக்கிறது ஏமாற்று வேலை தெரியுமா..?

மோசடி கும்பல், உங்களை தொடர்பு கொள்வார்கள். நீங்கள் வைத்திருப்பது சாதாரண போனா அல்லது ஸ்மார்ட் போனா என்று கேட்பார்கள். சாதாரண போன் என்றால் உங்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி விவரங்களை கேட்டு உங்களுக்கு 5ஜி ஆக்டிவேசன் செய்ய ஒரு ஓ.டி.பி. வந்திருக்கும். அதை சொல்லுங்கள் என்பார்கள். அதை நம்பி நீங்கள் ஓ.டி.பி.யை சொன்னவுடன், உங்கள் வங்கியில் உள்ள பணம் காணாமல் போனதாக குறுந்தகவல் வரும். இந்த மோசடிதான், இப்போது பிரபலமாக அரங்கேறுகிறது.

அதுவே ஸ்மார்ட் போன் என்றால், உங்களுக்கு ஒரு லிங்க் அனுப்பி வைப்பார்கள். அதை திறந்து, உங்களை நிரப்ப சொல்வார்கள். பார்ப்பதற்கு சிம் கம்பெனியில் இருந்து வந்ததுபோலவே அது இருக்கும். அந்த படிவத்தில் ஏ.டி.எம்.கார்டு விவரம், சிம் கார்டு ஐ.எம்.எஸ்.ஐ.நம்பர், மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல் போன்றவை கேட்கப்பட்டிருக்கும். நீங்கள் படிவத்தை நிரப்பியதும், அவர்கள் உங்களை தொடர்புகொண்டு ஓ.டி.பி.சொல்ல சொல்வார்கள். அப்படி ஓ.டி.பி.சொல்லிவிட்டால், நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். இந்த மோசடிக்கு, 'பிஷ்ஷிங்' என்று பெயர்.

தற்போது இந்தியாவில் 5-ஜி சேவை மேம்படுத்தப்பட்டிருப்பதால், அதனை காரணமாக்கி, இந்த மோசடியில் அதிதீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். முக்கியமாக இவர்கள் இணைய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் வாழ்க்கைக்கு தொடர்பில்லாத கிராமப்புற ஏழை மக்களையே குறிவைக்கிறார்கள்.

எனவே மக்கள், இதுபோன்ற மோசடி கும்பலிடமிருந்து உஷாராக இருக்கவேண்டும். ஓ.டி.பி. கேட்கப்படும் அழைப்பேசி தொடர்புகளை, துண்டிப்பது சிறந்தது.

Tags:    

மேலும் செய்திகள்