மற்ற மாநிலத்தவர்கள் சொத்து வாங்க முடியாத இடங்கள்

இந்தியாவின் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், வெளிநாட்டவர்கள் நிலம் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-16 08:43 GMT

விவசாய நிலங்களை பிற மாநிலத்தவர்கள் அபகரித்து குடியிருப்புகளாக மாற்றிவிடக்கூடாது என்ற நோக்கத்திலே இத்தகைய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமான மாநிலங்கள் சிலவற்றை பார்ப்போம்.

அருணாச்சல பிரதேசம்:

அருணாச்சல பிரதேசத்தில் வெளியாட்கள் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதி இல்லை. பூர்வீக பழங்குடி மக்களுக்கு கூட நிலத்தில் தனிப்பட்ட உரிமை கிடையாது. நிலம் சமூகத்திற்கு மட்டுமே சொந்தமானது.

உத்தரகாண்ட்:

உத்தரகாண்ட் அரசு 2003-ம் ஆண்டு ஒரு சட்டத்தை இயற்றியது. அந்த சட்டத்தின் மூலம் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வீடு கட்டுவது என்ற போர்வையில் விவசாய நிலங்களை வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வெளியாட்கள் 250 சதுர மீட்டர் விவசாய நிலத்தை மட்டுமே குடியிருப்பு நோக்கங்களுக்காக வாங்க முடியும்.

நாகலாந்து:

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 371 ஏ-ன்படி அம்மாநில குடியுரிமை பெறாதவர்கள் அங்கு நிலம் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியினருக்கு மட்டுமே நிலத்தை கையகப்படுத்த அனுமதி உண்டு.

இமாச்சல பிரதேசம்:

குத்தகை மற்றும் நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் பிரிவு 118-ன் படி விவசாய தொழிலில் ஈடுபடாத ஒருவருக்கு நிலத்தை விற்பதற்கு இமாச்சலபிரதேசத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அனுமதியை பெற்ற பிறகே வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் நிலம், சொத்து வாங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

நிலத்தை வாங்குபவர் அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டும். என்ன நோக்கத்திற்காக நிலத்தை வாங்குகிறார் என்பதை அதில் குறிப்பிட வேண்டும். அவர் சமர்ப்பிக்கும் தகவல்கள் அனைத்தையும் உறுதிப்படுத்திய பிறகே அம்மாநில அரசு அவருக்கு நிலத்தை வழங்கலாமா என்பது பற்றி முடிவு செய்யும்.

ஜார்கண்ட்:

பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தங்களுக்கு சொந்தமான நிலத்தை பிறருக்கு மாற்றுவது சட்டப்பிரிவு 46-ன் படி தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தங்கள் நிலத்தை அண்டை வீட்டாருக்கும், அதே காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் மற்றவர்களுக்கும் உயில் மூலம் வழங்கலாம். அன்பளிப்பாகவும் கொடுக்கலாம். சொத்து பரிமாற்றமும், விற்பனையும் செய்யலாம். ஆனால் மற்ற பகுதியில் வசிப்பவர்களுக்கோ, வெளி மாநிலத்தவர்களுக்கோ நிலத்தை விற்க முடியாது.

சிக்கிம்

சட்டப்பிரிவு 371(எப்)-ன் கீழ்படி சிக்கிம் மாநிலத்திற்கு தனித்துவமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இங்கு வெளியாட்களுக்கு சொத்தை விற்பதற்கு அனுமதி இல்லை. இமயமலை பகுதியில் அமைந்திருக்கும் இம் மாநிலத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமே ரியல் எஸ்டேட் மூலம் நிலம் வாங்க அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் பழங்குடியினர் பகுதிகளில், பழங்குடியின உறுப்பினர்கள் மட்டுமே நிலம் வாங்க முடியும். இருப்பினும், தொழில்துறை கட்டிடங்கள் கட்டுவதற்கு மட்டும் வெளியாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்