இந்தியாவில் 47 சதவீதம் முதியோர் வருமானத்திற்கு குடும்பத்தை எதிர்பார்க்கும் நிலை - ஆய்வில் தகவல்
ஜூன் 15-ம்தேதி 'முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வூட்டும் நாளாக' அனுசரிக்கப்பட்டு வருகிறது.
புதுடெல்லி,
கடவுளுக்கு இணையாக முதியோரைக் கருதிய காலம் ஒன்று இருந்தது. இப்போது காலம் மிகவும் மாறிப் போய்விட்டது. முதியோரை மதிக்கும் பண்பாடு என்பது பெரிதும் குறைந்துவிட்டது.
குடும்பங்களில் நிதி வசதிகுறைவால் பாதிக்கப்படுவோர் முதியோரே. ஓய்வூதியம் பெறும் முதியவர்கள், முதியோர் உதவித்தொகை பெறுவோரை, இளைய சமுதாயம் கூட்டுக் குடும்பத்தில் வைத்துக் கொண்டு, பணத்துக்காக அவர்களை ஓரளவு மதித்து வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபை, முதியோர் கொடுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15-ம்தேதியை 'முதியோர் கொடுமை ஒழிப்புவிழிப்புணர்வு ஊட்டும் நாளாக' 2006-ம்ஆண்டிலிருந்து அனுசரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றிய ஆய்வை தன்னார்வ தொண்டு நிறுவனமான 'ஹெல்ப்-ஏஜ் இந்தியா' மேற்கொண்டது. நாடு முழுவதும் உள்ள 22 நகரங்களில், சுமார் 4399 முதியோர் மற்றும் அவர்களை பராமரிக்கும் 2200 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதன் முடிவுகளை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் சுப்பிரமணியம் வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாடு முழுவதும் சுமார் 47 சதவீதம் முதியோர், வருமானத்திற்கு தங்கள் குடும்பத்தினரை எதிர்பார்த்தே உள்ளனர். 34 சதவீதம் முதியோர், அவர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் மற்றும் வங்கியில் உள்ள சேமிப்பு பணத்தையே நம்பி இருக்கின்றனர். ஆனால், 45 சதவீதம் பேர் தங்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளனர்.
ஆச்சரியமளிக்கும் விதமாக, 40 சதவீதம் முதியோர், தங்களால் இயலும்வரை ஏதாவது வேலை பார்க்க விரும்புவதாக கூறியுள்ளனர்.
மேலும், 71 சதவீதம் பேர் வேலை ஏதுமின்றி வாழ்ந்து வருவதாகவும், 36 சதவீதம் பேர் வேலை செய்ய ஆர்வமாக இருப்பதாகவும், அதே நேரம் 30 சதவீதம் பேர் தங்கள் நேரத்தை தன்னார்வ தொண்டு செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
இது தவிர, 52 சதவீதம் முதியவர்கள் தங்களுக்கு போதிய வருமானம் இல்லை என்றும், 40 சதவீதம் பேர் வருமான ரீதியாய பாதுகாப்பாக இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். 57 சதவீதம் முதியோர்கள் தங்களுடைய செலவினம் சேமிப்பை விட அதிகமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்
அதில் வெளியான ஒரு நல்ல விஷயம், தங்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் அருகிலேயே கிடைப்பதாக சுமார் 87 சதவீதம் முதியவர்கள் தெரிவித்தனர்.ஆன்லைன் மூலமான சுகாதார மற்றும் மருத்துவ வசதிகள் சரியாக கிடைப்பதில்லை என்று 78 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.
இதுபோல 67 சதவீதம் முதியவர்கள் தங்களுக்கு மருத்துவ காப்பீடு எதுவும் இல்லை எனவும், அரசின் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ளதாக 13 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.
முதியோருக்கு கொடுமை நடப்பதாக சுமார் 59 சதவீதம் பேர் தெரிவித்தனர்.10 சதவீதம் பேர் தாங்களே நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினர்.
இதுதொடர்பாக ஹெல்ப் ஏஜ் நிறுவனம் கூறும்போது, 'முதியோருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது'. இதுபோல ஆய்வறிக்கையை வெளியிட்ட சுப்பிரமணியம் அவர்கள் கூறும்போது, "மூத்த குடிமக்கள் தொடர்பான புதிய தேசிய கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. ஒரு சில மாதங்களில் இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும்" என்றார்.
இறுதியாக, நாட்டில் உள்ள மூத்த குடிமக்களின் சமூகப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.