400 ஆண்டு கல்வெட்டு

சேலம் அழகாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு கல்வெட்டு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-15 13:42 GMT

பழங்காலம் தொட்டே, வீர விளையாட்டுகளின் மூலமாக தங்களின் வீரத்தை மதிப்பிடும் வழக்கம் தமிழர்களிடம் இருந்து வருகிறது. அப்படி இன்றளவும் நடைமுறையில் இருக்கும் வீர விளையாட்டுகளில் ஒன்றுதான், ஜல்லிக்கட்டு. இந்த விளையாட்டை, சங்ககால இலக்கியங்கள் 'ஏறுதழுவுதல்' என்று குறிப்பிடுகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடத்தப்படும். தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடத்தப்பட்டு வந்ததற்கான ஆதாரம் சேலம் மாவட்டத்தில் கிடைத்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பெத்தநாயக்கன்பாளையத்தில் 1976-ம் ஆண்டு நடந்த ஆய்வின் போது, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு நடத்தியதற்கான கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு அங்கிருந்து மீட்கப்பட்டு சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு கல்வெட்டு சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சேலம் வரலாற்று சங்க பொதுச்செயலாளர் ஜே.பர்னபாஸ் கூறும்போது, "பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை உள்ளடக்கிய நிலப்பரப்பை ஆண்டு வந்த குறுநில மன்னர் ஒருவரின் ஆதரவுடன் ஜல்லிக்கட்டு நடத்தியதற்கான கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சீறிப்பாய்ந்து வந்த முரட்டு காளையை வீரர் ஒருவர் அடக்கிப் பிடித்து அதன் கொம்புகளில் கட்டப்பட்ட பரிசுப் பொருளை கைப்பற்றுவது போன்ற சித்திரம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டின் கீழ் பகுதியில் 'ஆணேறு தழுவுதல்' என்ற வாசகம் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சொல் ஜல்லிக்கட்டை குறிக்கும். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சாட்சி கூறுவதாக அமைந்த இந்த கல்வெட்டு, சேலத்துக்கு பெருமை சேர்ப்பதாகவும், தொல்லியல் சான்றாகவும் விளங்குகிறது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்