மத்திய அரசில் 20 ஆயிரம் வேலைகள்... பயிற்சியும் முயற்சியும் இருந்தால் எஸ்.எஸ்.சி. தேர்வில் வெற்றி நிச்சயம்...
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி. அமைப்பு தேர்வு நடத்துகிறது. இது பட்டதாரிகளுக்கான தேர்வுகள் ஆகும். இந்த தேர்வு குறித்தும், இதில் இடம்பெறும் கேள்விகள் குறித்தும் இந்தப்பகுதியில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் ரீசனிங் பகுதி கேள்விகளுக்கு விடையளிப்பது குறித்து காண்போம்.
கொடுக்கப்பட்ட விவரங்களிலிருந்து தர்க்க ரீதியான ஒரு யூகத்தின் அடிப்படையிலான ஒரு முடிவை அடைதலே Logical Reasoning எனலாம். இதையே Deductive Reasoning மற்றும் Inductive Reasoning என்னும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். கொடுக்கப்பட்ட பொதுவான தகவல்கள் அல்லது செய்திகளை ஒரு தனிப்பட்ட நேர்விற்கு (Special Case) பயன்படுத்துவது Deductive Reasoning.
கீழே கொடுக்கப்பட்ட உதாரணத்தைப் படித்தால் இது தெளிவாகும்.
1. எல்லா மனிதர்களுக்கும் மரணம் நிச்சயம்.
2. சாக்ரடீஸ் ஒரு மனிதர்.
3. எனவே சாக்ரடீஸிற்கும் மரணம் நிச்சயம்.
கூற்றுகள் 1 மற்றும் 2 உண்மையாக இருந்தால் கூற்று 3 நிச்சயம் உண்மையாக இருக்கும். இதுவே Syllogism எனப்படுகிறது.
Deductive Reasoning - ல் கொடுக்கப்பட்ட கூற்றுகளின் உண்மைத் தன்மை அடிப்படையில் முடிவுகளையும் உறுதியாகக் கூற முடியும். இதை வரைபடங்களின் மூலமும் விளக்கலாம்.
All As are B
All Bs are C
Thus, All As are C
இதை ஒரு வரைபடத்தின் மூலம் ஆராய்வோம்.
எல்லா A-க்களும் B எல்லா B-க்களும் C
எனவே எல்லா A- க்களும் C என்று உறுதியாகக் கூறலாம். ஏனெனில் C என்ற பெரிய வட்டத்திற்குள்தான் A உள்ளது.
திறனறிவுப் பகுதிகளில் இடம் பெறும் Verbal Reasoning, Non-Verbal Reasoning, Classification, Analogy, Syllogism, Blood Relation, Analytical Reasoning, Statement and Conclusion, Direction, Coding and Decoding, Series Test, Sitting Arrangement, Decision Making போன்ற ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக பயிற்சி செய்ய வேண்டும்.
ஒரு வினாவை படித்த சில வினாடிகளிலேயே, அந்த வினாவின் தன்மை தெரிந்துவிடும். அதாவது, சிக்கலானதா, விடையை கண்டுபிடிக்க நீண்ட நேரம் ஆகுமா, வினாவை புரிந்து கொள்வது கடினமாக இருக்குமா என்று. இதனடிப்படையில் உங்கள் விடையை அமைத்துக் கொள்ளுங்கள்.
Assumption, Statement, Conclusion, Syllogism ஆகிய பகுதிகளைத் தேர்வு தயாரிப்பின்போது அதிக பயிற்சி செய்வது, தேர்வின்போது விடையளிக்கும் நேரத்தை குறைக்கும். குறைந்தபட்சமாக ஒரு கேள்விக்கு 50 வினாடிகள் வரை செலவழிக்கலாம். சில வினாக்களுக்கு இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் கூட ஆகலாம். புத்திக் கூர்மை, திறனறித் தேர்வு, IQ, Mind Power, General Intelligence, Sharpen your mind, Brain Teasers போன்ற படைப்புகளில் கிடைக்கும் புத்தகங்களைத் தொடர்ந்து படித்து வரலாம்.
தேர்வின்போது Test of Reasoning பகுதியில் கேட்கப்படும் அனைத்து வினாக்களுக்கும் விடையளிப்பது என்பது இயலாத காரியம். உதாரணமாக இப்பகுதியில் கேட்கப்படும் 25 வினாக்களில் குறைந்தபட்சம் 20 வினாக்களுக்கு விடையளிக்கவே நேரம் இருக்கும். மாதிரித் தேர்வின்போது, எந்த பகுதிக்கு (Analogy, Syllogism, Classification போன்றவை) எவ்வளவு நேரமாகிறது என்பதை கணக்கிட்டு ஒரு திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். உறுதியாக விடை தெரியாத வினாக்களை முயற்சி செய்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
கணிதப்பகுதி
மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது சற்று கடினமான பகுதி மற்றும் தேர்வில் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் பகுதியாகும். முதன்முதலாக SSC-CGL தேர்வினை எழுதுபவர்கள், SSC-MTS தேர்வுக்குரிய கணிதப் பகுதியை முடித்துவிட்டு, பின்பு இதற்குரிய கணக்குகளை பயிற்சி செய்வது நல்லது. Quick Maths by Tyra, Quantitative Aptitude by R.S. Agarwal போன்ற புத்தகங்களை படிக்கலாம். Geometry மற்றும் Algebra பகுதிகளுக்கு பள்ளி பாடப்புத்தகங்களை படிக்கலாம் அல்லது Lucent's Higher Mathematics Part 2 என்ற புத்தகத்தையும் படிக்கலாம்.
கணிதப் பகுதியை Deductive Reasoning எனலாம். ஏனெனில் பத்து வகையான குறியீடுகளைக் கொண்டு எல்லா மதிப்புகளையும் குறித்து விடலாம். இத்துடன் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகியவற்றைக் கொண்டு இப்பகுதியையே முடித்து விடலாம். ரீசனிங் பகுதிக்கு பல வழிகளிலும் யோசிப்பதைப் போல (Divergent Thinking) இதற்கு யோசிக்கத் தேவையில்லை.
Numerical Aptitude என்ற தலைப்பில் இடம்பெறும் வினாக்கள் எண்களை கையாளும் திறனை சோதிக்கும் விதத்தில் அமைகின்றன. BODMAS விதியைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட கணக்கினை எளிமையாக்கி (Simplification) விடையைக் கண்டறிய வேண்டும். Quantitative Aptitude மற்றும் Arithmetic Aptitude தலைப்பில் இடம்பெறும் கணக்குகளை பொறுத்தவரை ஆறாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை நாம் பள்ளியில் படித்த கணிதத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன. எண்களையும், அவற்றிற்கிடையேயுள்ள தொடர்பையும் பற்றிய அறிவியலே Arithmetic எனலாம். இப்பகுதியைப் பொறுத்தவரை சூத்திரங்கள் பயன்படுத்தி தீர்வு செய்வதாக இருப்பதால், பள்ளிப் படிப்பில் நாம் கற்ற முறையைப் பின்பற்றலாம். அதாவது இப்பகுதி ஒரு வரையறைக்குள் உள்ளது. Percentage, Average, Profit and Loss, Time and Work போன்று சுமார் 25 தலைப்புகளில் உள்ள கணக்குகளை பயிற்சி செய்தாலே போதுமானது.
கணிதப் பகுதியைப் பொறுத்தவரை தினசரி இரண்டு மணி நேரம் வீதம் குறைந்தது இரண்டு மாதங்கள் தொடர்ந்து படித்தால் பாடத்திட்டத்தை முடித்து விடலாம். தேர்வின்போது விரைவாக வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். ஒரு கணக்கிற்கு விடை சரியாக வரவில்லையெனில் அதையே யோசித்து நேரத்தை வீணாக்காமல் அடுத்த கணக்கிற்கு சென்று விடுங்கள். மாதிரித் தேர்வு எழுதும்போது, நமக்குக் கடினமானதாகத் தோன்றும் சில வினாக்களை தனியாக எடுத்து எழுதி பொறுமையாக அவற்றை பயிற்சி செய்யலாம்.
குறைந்த நேரத்தில் அதிக கணக்குகளை தீர்வு செய்ய வேண்டியதுள்ளதால், Tyra எழுதியுள்ள Quick Maths என்ற புத்தகத்தைப் படிக்கலாம். முதலில் ஆறாம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை உள்ள NCERT புத்தகங்களை படிப்பதுடன், தினசரி ஒரு மணி நேரம் மாதிரி வினாத்தாளைப் பயிற்சி செய்வது உங்களது வெற்றியை உறுதிப்படுத்தும். இப்பகுதியில் உங்கள் திறன் மேம்படுவது என்பது பயிற்சியையும், முயற்சியையும் மட்டுமே சார்ந்துள்ளது.
எம்.கருணாகரன், துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), கோவை.
மாதிரித் தேர்வு எழுதும்போது,
நமக்குக் கடினமானதாகத் தோன்றும் சில வினாக்களை தனியாக எடுத்து எழுதி பொறுமையாக அவற்றை பயிற்சி செய்யலாம்.
கணிதப் பகுதியைப் பொறுத்தவரை தினசரி இரண்டு மணி நேரம் வீதம் குறைந்தது இரண்டு மாதங்கள் தொடர்ந்து படித்தால் பாடத்திட்டத்தை முடித்து விடலாம்.