அல்போன்ஸ் புத்திரனின் 2 படங்கள்
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், தமிழில் சில குறும்படங்களை இயக்கி தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர், அல்போன்ஸ் புத்திரன்.;
2013-ம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும், ஒரே சமயத்தில் 'நேரம்' என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். இந்தப் படத்தின் தமிழ் பதிப்பில், நிவின்பாலி, நஸ்ரியா நசிம், நாசர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மலையாளத்தில் கதாநாயகன், கதாநாயகி தவிர, மற்ற கதாபாத்திரங்களில் மலையாள நடிகர்கள் நடித்திருந்தனர். இந்தப் படம் இரண்டு மொழிகளிலுமே ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தது.
இந்த நிலையில் 2015-ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'பிரேமம்' படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மலையாளத்தில் உருவாகியிருந்த இந்தப் படம், தமிழ்நாட்டிலும் மலையாள மொழியிலேயே வெளியாகியிருந்தது என்றாலும், அது இங்கும் 200 நாட்களைக் கடந்து ஓடியது, மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. இந்தப் படத்தில் நிவின்பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்திருந்தனர். சுமார் ரூ.4 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், ரூ.60 கோடியை லாபமாக ஈட்டியது.
இந்தப் படத்திற்குப் பிறகு படம் இயக்குவதற்கு நீண்ட இடைவெளி விட்டிருந்த அல்போன்ஸ் புத்திரன், 'கோல்டு' என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார். இதில் பிருத்விராஜ், நயன்தாரா ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிரடி சண்டைக் காட்சியும், நகைச்சுவையும் கலந்த படமாக இது உருவாகியிருக்கிறது. இந்தப் படம் மிக விரைவிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'கோல்டு' படம் வெளியாவதற்கு முன்பாகவே, தன்னுடைய அடுத்தப் படத்திற்கான அறிவிப்பையும், அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டிருந்தார். அதன்படி அடுத்ததாக 'பாட்டு' என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதில் பகத் பாசில், நயன்தாரா ஆகியோர் நடிக்கிறார்கள்.