தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி: விசாரணை ஆணையம் வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகள்- மனம்திறக்கும் மக்கள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான விவகாரம் பற்றி மக்கள் மனம் திறந்து கருத்து தெரிவித்துள்ளனர்.;
22-5-2018-ந் தேதி என்பது நமது மனதில் நிழலாடும் ஒரு மறக்க முடியாத நாள்!
மனதில் சுமக்க முடியாத ஒரு சோகம் அன்று தூத்துக்குடியில் அரங்கேறியதை அசைப்போடாதவர் யாருமே இருந்திருக்க முடியாது. ஆம்! ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம் அன்று கலவரமாகி, களோபரமாகி போலீசார் சுட்டுத் தள்ளியதில் அரிய உயிரை அப்பாவிகள் 13 பேர் இழக்க நேர்ந்ததை எவருமே எளிதாக நினைத்தோ, மறந்தோ கடந்துபோய்விட முடியாது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜாலியன்வாலா பாக் படுகொலைபோல் கொடுமையாக நடத்தப்பட்டுவிட்டதோ என்று ஒரு தரப்பினர் அப்போது அங்காலாய்த்தது உண்டு.இன்னொரு தரப்போ, அது நடத்தப்படவில்லை என்றால் 13 பேர் அல்ல; இன்னும் எண்ணற்ற உயிர்களை இழக்க நேர்ந்திருக்கக் கூடிய அபாயம் நிகழ்ந்திருக்கக் கூடும் என்ற அச்சம் வெளியிட்டதும் உண்டு. இந்தச் சூழலில் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்து வந்த, ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் அளித்தது. "துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்தால் ஏற்பட்டிருக்கக் கூடிய தீங்கைவிட துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஏற்பட்ட தீங்கு அதிகமாக உள்ளது" என்று அதில் ஆணையம் குற்றம்சுமத்தி இருக்கிறது.தமிழக சட்டசபையில் வெளியிடப்பட்ட அந்த விசாரணை அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதோ, அதில் இடம்பெற்ற சில குற்றச்சாட்டுகள்.
* போலீசாரின் மோசமான திட்டமிடல். சரியாக உத்திகளை கையாளாத நிலை. ஆயத்தமின்மை ஆகியவை இந்தப் பிரச்சினையை பெரிதாக்கின.
* முன்எச்சரிக்கை ஏதும் செய்யாமல் துப்பாக்கிச் சூடு தொலைதூர மறைவிடத்தில் இருந்து நடத்தப்பட்டு இருக்கிறது.
* முதல் துப்பாக்கிச் சூடு நடந்த பின்புதான் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த சில வாகனங்களுக்கும், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு வாசிகளின் சில வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
* தூத்துக்குடியில் கிளர்ச்சியும் குழப்பமும் இருந்த சூழ்நிலையில் பொறுப்பும் அதிகாரத்திலும் இருந்த கலெக்டர் வெங்கடேஷ் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தாமல் மூன்றாம் நிலையில் உள்ள சப் கலெக்டர் பிரசாந்தை அந்த சூழ்நிலையை கையாளவிட்டது தனது பொறுப்பை தட்டிக் கழித்ததாக அமைந்துள்ளது.
* தூத்துக்குடி நெல்லை போலீஸ் சூப்பிரண்டுகள் சம்பவத்தின் போது கலெக்டர் அலுவலகத்தில் இல்லாமல் தமிழ் மொழியே தெரியாத ஐ.ஜி., டி.ஐ.ஜி.க்கு போராட்டத்தை ஒடுக்கும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
* ஒரு பயங்கர போராட்டக் கூட்டத்தை எதிர்ப்பது போல் துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஏற்க முடியவில்லை. தனி ஆளாக சுடலைக்கண்ணு 17 ரவுண்டுகளை அதுவும் அபாயமான 'செல்ப் லோடிங்' துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். போலீசார் வரம்பு மீறி செயல்பட்டுள்ளனர் என்பதுதான் ஆணையத்தின் முடிவு 2 துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கும் போலீஸ் உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தனித்தனியாகவும் கூட்டாகவும் பொறுப்பாகிறார்கள்.
இவ்வாறு குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார்கள்.
அதோடு மட்டுமல்ல, அப்போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியையும், துப்பாக்கிச் சூடு பற்றி கருத்து வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்தையும் விசாரணை ஆணையம் விட்டுவைக்கவில்லை. விமர்சனம் செய்திருக்கிறது.
தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களையும் அங்குள்ள நிலவரங்களையும் நிமிடத்திற்கு நிமிடம் உயர் அதிகாரிகள் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்து வந்தனர்.
அவ்வாறு இருக்க அந்த சம்பவம் பற்றி ஊடகங்கள் மூலமாகத்தான் தெரிந்து கொண்டதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியது தவறான கருத்து.
சமூகவிரோதிகள் நுழைந்து போலீசார் மீது தாக்குதலை நடத்தினர் என்று நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூறிவிட்டு பின்னர் அந்த கருத்துக்கு அடிப்படை ஆதாரம் எதுவும் தன்னிடம் இல்லை என்பதை தெளிவாக கூறிவிட்டார். இது போன்ற கருத்துக்களை புகழ்பெற்றவர்கள், பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சினிமா நடிகர்கள் தவிர்ப்பது நல்லது என்று ஆணையம் அறிவுரை வழங்கி இருக்கிறது.
உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 17 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் சிபாரிசு செய்திருக்கிறது.
இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.
இதனால் வேகம் பெற்றிருக்கும் இந்த விவகாரம் குறித்து பொதுமக்களும், பொதுநல விரும்பிகளும் வெளியிட்டு இருக்கும் கருத்துகளை கீழே காணலாம்.
அழுகுரல் இன்னும் கேட்கிறது
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியை சேர்ந்தவரும், கே.பி.அக்ரஹாராவில் வசித்து வரும் டேவிட் என்பவர் கூறுகையில், "தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானது. அந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த நிகழ்வு இன்னும் கண்முன்னே உள்ளது. உயிரிழந்த 13 பேர் குடும்பத்தினரின் அழுகுரல் இன்னும் எங்களில் காதில் கேட்டு கொண்டு தான் இருக்கிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது ஈவு இரக்கமின்றி துப்பாக்கி சூடு நடத்தி கொன்று உள்ளனர். நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை எங்களுக்கு முழு நம்பிக்கையை தந்து உள்ளது. ஒரு போலீஸ்காரர் தனி ஆளாக 17 ரவுண்டு சுட்டு உள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்சை கொன்ற போலீஸ்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேவையில்லாத கருத்தை கூறியது சரியல்ல" என்றார்.
தூத்துக்குடி வர்த்தகரெட்டி பட்டி பகுதியை சேர்ந்தவரும், பெங்களூருவில் வசித்து வருபவருமான மாரிமுத்து கூறுகையில், "தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் கொலை செய்யப்பட்டனர். அப்போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி சம்பவம் குறித்து ஊடகங்கள் மூலமாக தெரிந்து கொண்டதாக கூறினார். அவர் எப்படி முதல்-அமைச்சராக இருந்தார் என்றே தெரியவில்லை. நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் 17 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. அந்த 17 பேரையும் தமிழக அரசு விட கூடாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனி ஆளாக நின்று 17 ரவுண்டு சுட்ட போலீஸ்காரருக்கு சாகும் வரை ஜெயில் தண்டனை அளிக்க வேண்டும். சமூக விரோதிகள் தாக்கியதால் போலீஸ்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதாக ரஜினிகாந்த் கூறியது கண்டனத்திற்கு உரியது" என்றார்.
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை
பெங்களூருவில் வசித்து வரும் தூத்துக்குடி கீழ வெள்ள மடத்தை சேர்ந்த மேசியா என்பவர் கூறுகையில், "துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தி இருக்காவிட்டால் இன்னும் பல உயிர்கள் பறிபோய் இருக்கும் என்று கூறுவது தவறு. 99 நாட்கள் மக்கள் அமைதியான முறையில் தான் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் 100-வது நாளும் ஸ்டெர்லைட் முன்பு போராட்டம் நடத்த சென்றனர். ஆலைக்குள் நுழைய வேண்டும் என்பது மக்களின் நோக்கம் இல்லை. துப்பாக்கி சூடு சம்பவம் அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் தவறு செய்ய நினைக்கும் மற்ற அதிகாரிகளுக்கு பயம் வரும்" என்றார். பெங்களூருவில் வசித்து வரும் நாசரேத்தை சேர்ந்த ஆசிரியையான பிளாரன்ஸ் லெனின் என்பவர் கூறுகையில், "தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த கோர சம்பவம் இன்னும் எனது மனதில் நீங்கா வடுவாக உள்ளது. தவறு செய்தவர்களுக்கு கடும் தண்டனை கொடுப்பதன் மூலம் 13 பேரின் குடும்பத்திற்கு அரசு நம்பிக்கை அளிக்க வேண்டும். 13 உயிர்களின் மதிப்பு விலைமதிப்பற்றது. உயிரை எடுக்கும் உரிமையை யார் கொடுத்தார் என்று தெரியவில்லை. நீதிபதி அருணா ஜெகதீசன் சிறப்பான முறையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்து உள்ளார். அவருக்கு நன்றி. தவறு செய்தவர்களை அரசு எளிதில் விட கூடாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
சாத்தான்குளத்தை சேர்ந்த இந்திரா என்பவர் கூறுகையில், "துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய யாரையும் தமிழக அரசு சும்மா விட கூடாது. எடப்பாடி பழனிசாமி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிபோனது ஒன்று அல்ல இரண்டு அல்ல 13 உயிர்கள். அதில் வாழ்க்கையை தொடங்கும் முன்பே ஸ்னோலின் என்ற இளம்பெண் கொல்லப்பட்டார். இந்த படுபாதக செயலை செய்தவர்கள் யாரையும் விட கூடாது. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு ஆதரவாக இருக்க வேண்டும்" என்றார்.
கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்
மனித உரிமை ஆா்வலர் நரசிம்மமூர்த்தி கூறுகையில், "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் அமைதியாக போராட்டம் நடத்தினர். அந்த மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை அநியாயமாக கொன்றுவிட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து நான் பெங்களூருவில் போராட்டம் நடத்தினேன். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன். இந்த சம்பவம் குறித்கு அருணா ஜெகதீசன் ஆணையம் தனது அறிக்கையை வழங்கியுள்ளது. இந்த சம்பவம் பற்றி தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டதாக அப்போது இருந்த
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஆனால் அது தவறு என்று அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியுள்ளது. ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர் அவ்வாறு கூறலாமா?. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போது, அதுபற்றி முன்கூட்டியே முதல்-அமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதற்காகவே உளவுத்துறை போலீஸ் உள்ளது. முதல்-அமைச்சர் அந்த மாநிலத்தை விட்டு வேறு எங்கு சென்று இருந்தாலும் அவருக்கு தகவல் கட்டாயம் தெரிவிக்கப்படும். மேலும் போராட்டம் நடத்திய மக்களை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவத்தில் அப்போது இருந்த திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அது மட்டுமின்றி துப்பாக்கியால் சுட்டவர், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீதும் இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின் கீழ் அதாவது கொலை வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைகளை அப்படியே அமல்படுத்த வேண்டும். தவறு செய்தவர்களுக்கு தக்க தண்டனையை வழங்கி உரிய பாடம் புகட்ட வேண்டும். இனி வரும் காலங்களில் தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் எந்த மூலையிலும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாத வண்ணம், அவர்கள் மீது தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை முன் உதாரணமாக அமைய வேண்டும்" என்றார்.
நடவடிக்கை எடுப்பது தேவையற்றது
பெங்களூரு பாரதிநகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி விஜயன் கூறுகையில், 'தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியாகி இருந்தார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சி சேனல்களில் வந்த தகவல்கள் மூலமாக தான் அறிந்து கொண்டேன்.
இந்த விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகள் மீதோ, பிற அதிகாரிகள் மீதோ நடவடிக்கை எடுப்பது தேவையற்றது. ஸ்டெர்லைட் ஆலை மூலமாக அப்பகுதியை சேர்ந்த ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்திருந்தது, வாழ்க்கை தரமும் உயர்ந்திருந்தது. அந்த ஆலையால் அப்பகுதிகளில் சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டதும் உண்மை தான். எனவே வரும் நாட்களில் தமிழ்நாட்டில் இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெறாமல் இருக்கும்படி பார்த்து கொள்வதே முக்கியம். அதுவே தேவையான ஒன்றாகும். அதே நேரத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதியை வழங்குவதும் அவசியமானதாகும்' என்றார்.
ஓய்வுபெற்ற ராணுவ வீரர்
பெங்களூருவில் வசித்து வரும் பெயர் கூற விரும்பாத ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் கூறுகையில், "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒரு கருப்பு அத்தியாயம். ஒரு பிரச்சினைக்காக மக்கள் போராடுகிறார்கள். அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகண்டு இருக்க வேண்டும்.
ஆனால் குருவியை சுடுவது போல் சுட்டது மனிதநேயமற்ற செயல். இதுபோன்ற செயல்களை வருங்காலத்தில் நடைெபறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.