6 கர்ப்பிணிகளில் ஒருவர்: அதிர வைக்கும் 'டீன் ஏஜ் கர்ப்பம்'

கர்ப்பம் தரிக்கும் 6 பெண்களில் ஒருவர் டீன் ஏஜ் வயதுடையவராக இருக்கிறார் என்றும் மேற்கு வங்காள மாநில சுகாதாரத்துறை கூறுகிறது.

Update: 2023-02-21 12:49 GMT

பெண்ணின் திருமண வயது 18 என்பது சட்டப்பூர்வமாக நடைமுறையில் இருந்து வந்தாலும் குழந்தை பெறுவதற்கு ஏற்ற உடல் தகுதியை பெறுவதற்கு 21 வயதை எட்ட வேண்டும் என்பது சுகாதாரத்துறையின் நிலைப்பாடாக இருக்கிறது. கர்ப்ப காலத்தில் தாய்-சேய் இருவருக்கும் உடல் உபாதைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கவும் இந்த நடைமுறை உதவும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஏனெனில் டீன் ஏஜ் பெண்கள் பலர் கர்ப்ப காலத்தில் பல்வேறு உடல்நல பிரச்சினைகளையும், பிரசவத்தின்போது உயிருக்கு ஆபத்து நேரும் சூழலையும் எதிர்கொள்கிறார்கள். குறை பிரசவம், குழந்தை எடை குறைவு உள்ளிட்ட சிக்கல்களும் எழுகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை வட மாநிலங்களில் குழந்தை திருமணம் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் குழந்தை திருமணம் நடப்பது குறைந்தபாடில்லை. டீன் ஏஜ் பருவத்தில் இருந்து விடுபடுவதற்குள்ளேயே திருமணமாகி குழந்தை பெற்றுக்கொள்ளும் நிகழ்வும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் திருமணமானவர்களில் 4 லட்சம் பேர் டீன் ஏஜ் தம்பதிகள் என்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கர்ப்பம் தரிக்கும் 6 பெண்களில் ஒருவர் டீன் ஏஜ் வயதுடையவராக இருக்கிறார் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை கூறுகிறது.

இத்தகைய டீன் ஏஜ் கர்ப்பம் தாய்க்கும், குழந்தைக்கும் ஆபத்தானது என்கிறார்கள், சுகாதார நிபுணர்கள். கருத்தடை முறையை தீவிரமாக பின்பற்றுவதன் மூலம் டீன் ஏஜ் கர்ப்பத்தை தவிர்க்க முடியும் என்றும் சொல்கிறார்கள். இதுதொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு பலனும் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு டீன் ஏஜ் தம்பதியரில் 50 சதவீதத்தினர் மட்டுமே கருத்தடை சாதனங்களை பயன்படுத்திய நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 55 சதவீதமாக அதிகரித்துள்ளது.

"டீன் ஏஜ் கர்ப்பங்கள் உயர் ரத்த அழுத்தம், குறை பிரசவம், குழந்தை உடல் எடை குறைவது, உடல் பலவீனம் உள்பட பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. கருப்பை வளர்ச்சியிலும் பின்னடைவை உருவாக்குகின்றன. குழந்தை சுவாசிப்பதில் சிரமம், மஞ்சள் காமாலை போன்ற உடல்நல பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடும். டீன் ஏஜ் தாய்மார்களுக்கு பிரசவத்துக்கு பிந்தைய மனச்சோர்வு ஏற்படும். எனவே டீன் ஏஜ் கர்ப்பத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து இளம் பெண்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியமானது'' என்ற கருத்தை மருத்துவ நிபுணர்கள் முன்வைக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்