கே.ஜி.எப்.-2 படத்தை தெறிக்க விட்ட 19 வயது இளைஞர்

கன்னட நடிகர் யஷ் நடிப்பில், கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி வெளியான படம், ‘கே.ஜி.எப்.-1.’ இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். கன்னடத்தில் ‘உக்ரம்’ என்ற பிரமாண்ட வெற்றிப்படத்திற்குப் பிறகு, பிரசாந்த் நீல் இயக்கிய இரண்டாவது படம் இது.

Update: 2022-04-21 16:27 GMT
தனது இரண்டாவது படத்திலேயே, பான்-இந்தியா இயக்குனர்களின் வரிசையில் முன்னணிக்கு வந்து நின்றார். கே.ஜி.எப். படத்தின் 1-ம் பாகத்திற்கான எடிட்டிங் பணியை ஸ்ரீகாந்த் ஹவுடா என்பவர் செய் திருந்தார். ரூ.80 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப்படம் ரூ.250 கோடியை வசூல் செய்தது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக ‘கே.ஜி.எப்.-2’ கடந்த 14-ந் தேதி வெளியானது. ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் படம், அதை பூர்த்தி செய்ததோடு, அதையும் தாண்டிய ரசிப்புத் தன்மையை ரசிகர் களுக்கு அளித்திருப்பதாக, படத்திற்கான விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. கே.ஜி.எப். இரண்டாம் பாகம், ஆக்‌ஷன் படங்களுக்கான எல்லையை வகுத்து புதிய சாதனை படைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ரூ.100 கோடியில் எடுக்கப்பட்ட இந்த இரண்டாம் பாகம், வெளியான ஒரே நாளில் ரூ.165 கோடியை வசூல் செய்திருப்பது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பாக, அதன் முன்னோட்டமாக ‘கே.ஜி.எப்-2’ படத்தின் சிறிய அளவிலான டீசர், இப்படத்தின் கதாநாயகனாக யஷ் பிறந்த நாள் அன்று, கடந்த ஆண்டு ஜனவரி 8-ந் தேதி வெளியானது. அதுவே ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி வெளியான, படத்தின் டிரைலர், ரசிகர்கள் அனைவரிடமும் படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டது.

தற்போது படத்தின் வெற்றிக்கும் கூட, அந்தப் படம் தொகுக்கப்பட்ட முறையில் (எடிட்டிங்) எந்த சமரசமும் இல்லாமல் இருப்பதே முக்கிய காரணம் என்கிறார்கள். இந்தப் படத்தின் எடிட்டிங் பணியை செய்திருப்பவர், கர்நாடகாவைச் சேர்ந்த உஜ்வால் குல்கர்னி. இவருக்கு 19 வயதுதான் ஆகிறது.

இவர் இதற்கு முன்பு, யூடியூப் இணையதளங்களில் வெளியாகும் குறும்படங்களுக்கு எடிட் பணியைச் செய்து வந்தார். அதோடு ஒரு படத்தின் விறுவிறுப்பைக் கூட்டும் வகையிலும், ரசிகர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தும் வகையிலும், ‘ரசிகர்களுக்கான திருத்தம்’ என்ற ரசிகர்கள் எடிட் பணியையும் செய்து வந்தார். இதன்படிதான், உஜ்வால் குல்கர்னி, கே.ஜி.எப். படத்தின் முதல் பாகத்திலும் ரசிகர்கள் விரும்பும் வகையில் ஒரு சில திருத்தங்களைச் செய்து, அதை இணையத்தில் வெளியிட்டிருந்தார். அந்தப் பணி, கே.ஜி.எப். படத்தின் இயக்குனர் பிரசாத் நீலுக்கு மிகவும் பிடித்துப் போனது.

இதையடுத்து கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், உஜ்வால் குல்கர்னியை அழைத்த பிரசாந்த் நீல், அவரிடம் கே.ஜி.எப்.-2 படத்திற்கான டீசரை உருவாக்கும் பணியை ஒப்படைத்தார். அதில் மிகவும் திருப்தி அடைந்த பிரசாந்த் நீல், டிரைலருக்கான பணியையும் கொடுத்தார். அது ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து, அந்த படத்திற்கான எடிட்டிங் பணி முழுவதையுமே, உஜ்வால் குல்கர்னியிடம் கொடுத்துவிட்டார்.

இயக்குனர் பிரசாந்த் நீலின் எதிர்பார்ப்பை, உஜ்வால் குல்கர்னி எந்த அளவிற்கு பூர்த்தி செய்திருக்கிறார் என்பது, தற்போது இந்தியாவின் அனைத்து திரையரங்குகளிலும், கூட்டம் நிரம்பி வழிவதே சாட்சி. மேலும் படத்திற்கு கிடைத்துள்ள நேர்மறையான விமர்சனங்களும், குறிப்பாக படத்தின் எடிட்டிங் பணிக்கான பாராட்டுகள் குவிவதும், உஜ்வால் குல்கர்னி இந்தப் படத்திற்காக எந்த அளவுக்கு உழைத்திருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

19 வயதே ஆன உஜ்வால் குல்கர்னிக்கு, இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்காலம் காத்திருப்பதாக, சினிமாவை பல காலமாக தொடர்ந்து வரும் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் கணிக்கிறார்கள்.

மேலும் செய்திகள்